தனித்தமிழ்த் திருநாள்

  பொங்கற் புதுநாளெனும் தமிழர் திருநாள் பொய்யுரையின் மீது கட்டப்பட்ட பூசாரி விழாக்களிலே ஒன்றல்ல!  தனித்தமிழ்த் திருநாள்! கருத்தளிக்கும் பெருநாள்! தமிழன், உழைப்போரை உயர்த்திடும் பண்பையும் உழைப்பின் பயனை ஊருடன் கூடி உண்டு, இன்பம் பெறும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வந்தது பொங்கற் புதுநாள்! அறுவடை விழா!
 விதைக்காது விளைந்த கழனியிலிருந்து வந்த செந்நெல்லைக் குத்தாது அரிசியாக்கி, வேகாது வடித்தெடுத்து, உண்ணாது காக்கைக்கு வீசிடும் உலுத்தர் விழாவல்ல! உழைத்தோம், பலன் கண்டோம்; கண்ட பலனை மற்றவருடன் கலந்து உண்டு மகிழ்வோம் என்ற உயரிய நோக்குடைய விழா.
  கோல வளை குலுங்க, குறுநடைச் சிறுவன் முந்தானையைப் பற்றி இழுக்க, கூப்பிடு உன் அப்பாவை, இந்தக் குறும்பனை எடுத்துப் போகச் சொல்லு என்று மூத்த மகளை முற்றத்திலே துத்திப்பூ போன்ற துகிலைப் பார்த்து மகிழ்ந்திருக்கும் ஆணழகனிடம் தூது அனுப்பும், தோகை மயிலாள் தீட்டிடும் வண்ணக் கோலம். இல்ல முகப்பில் வரவேற்புக் கூறிநிற்கும் உள்ளே சென்றால் அன்பு வழியும் விழியும் அகங்குழையும் மொழியும், இன்புறச் செய்யும். பிறகே பாகுகலந்த பாற்பொங்கல் பற்பல கனிவகைகள்! இதுபோல இருந்திடும் இயல்பினைப் பெற்றது பொங்கற் புதுநாள்.
 பேரறிஞர் அண்ணா:
அண்ணாவின் சிந்தனைகள்:
தொகுப்பு: 
புலவர் இளஞ்செழியன்:
பக்கம்.137-138