தலைப்பு-ஆரியச்சூழ்ச்சி, பெரியார், முத்துச்செல்வன் ;thalaippu_aariya-chuuzhchi_muthuchelvzn

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்

8/9

 தாம் தமிழை விரும்புவதற்கான காரணங்களைத் தந்தை பெரியார் அடுக்கும்போதே, மொழி குறித்துக் கருத்தறிவிப்பது மொழியின் தத்துவத்திலுள்ள தன்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டே ஆகுமே தவிர, “நான் கூறப்போகும் தத்துவங்களை இலக்கண, இலக்கிய ஆதாரங்களுடன் விளக்குவது என்பது எனது தகுதிக்கு மேற்பட்ட காரியம். அதற்கு வேண்டிய இலக்கண இலக்கியங்களில் பாண்டித்தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை. எனக்குத் தோன்றிய, என் பட்டறிவுக்கு எட்டிய செய்திகளைத்தான் நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன்” என்று கூறிவிடுகிறார்..
  தாம் தமிழை விரும்புவதற்குக் காரணம். “அது நம் தாய்மொழிப் பற்றுக்காக என்று அல்ல; என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டது என்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது, எலும்புக்கூட்டை பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? தமிழ் இந்த நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற மொழிகளையும்விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுவதால் மற்ற மொழி வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடம் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்” என்றும் ”வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி – தமிழைவிட மேலான ஒரு மொழி இந்த நாட்டில் இல்லை என்பதற்காகவே நான் தமிழை விரும்புகிறேன்” என்கிறார். மொழியியலார் நிலையில் நிற்காமல் வாழும் சூழலில் மொழிக்கலப்பு எத்தகைய கேடுகளை விளைவிக்குமென்பதைக் குமுக அடிப்படையில் விளக்கியுள்ளார்.
 ‘தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது, இன்று வடமொழிக் கலப்பால் இடக் கைபோல் பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ்மொழி சிக்கிக் கொண்டதுதான்.” எனக் கூறுகிறர். தமிழ்நாட்டு மன்னர்கள் ஆரிய மதங்களை ஏற்றுத் தழுவியதால் அம்மதங்களின் கருத்துகளைத் தமிழில் எழுத வேண்டிய நிலை வந்த போது அம்மதச் சொற்களுக்குத் தமிழில் சொற்கள் இல்லை என்பதால்  மிகுதியாக வடமொழிச் சொற்களைக் கையாளத் தொடங்கினர் என்று கருத்தறிவித்துள்ள பெரியார், தமிழிலிருந்து சைவத்தையும் ஆரிய மதங்களையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலேயே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்று கூறுகிறார்.
  “தமிழர் வாழ்வில் பிற துறைகளைக் காட்டிலும் சமயம், மெய்ப்பொருளியல் ஆகியவற்றிலேயே வடமொழியின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகின்றது” என்று கூறும் முனைவர் தெ.ஞானசுந்தரம், “இரு நாகரிகக் கலப்பின் விளைவாக, ஆரியர் வழிபட்ட தெய்வங்கள் தமிழர் வழிபாட்டில் இடம் பெறலாயின. … அதன் பயனாக இறை வழிபாட்டிலும் ஆரியர்களின் வழிபாட்டு முறை இடம் பெறலாயிற்று”  என்று சமய மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம் நுழைந்ததை எடுத்துக் காட்டுகிறார். (சமற்கிருத ஆதிக்கம் நூல்)
  தந்தை பெரியார் தம் பட்டறிவைக் கொண்டு, “தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடாத்திய தமிழர் மரபில் – இன்று, ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை; ஓர் எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழைமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க முயற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார். (மொழி, எழுத்து என்னும் பொருள் பற்றி,  கும்பகோணம் அரசு கல்லூரியில் 13.1.1938 அன்று ஆற்றிய சொற்பொழிவிலிருந்து) அதாவது தாய்மொழியில் சிந்தித்து அதன் வழியே ஆராய்ச்சி மனப்பான்மை வளர்வதே உண்மையான வளர்ச்சி என்பதைச் சுட்டிக்கட்டியுள்ளார். இன்று இந்தக் கருத்தை அறிவியலறிஞர்கள் பலர் ஒப்புக்கொள்கிறார்கள்.
(தொடரும்)
    –     பெங்களூரு முத்துச்செல்வன்