கவிஞர் மு.முருகேசு, விருது 'murugesh_award

 தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக்

குவைத்து நாட்டில் இலக்கிய விருது.

 தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது.
  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு,
கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள், 6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100-க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன.
வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின்  அறிவுரையாளராகவும் இருந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.
 சப்பானியக் குறும்பா(ஐக்கூ) கவிதைகள் மாக்கவி பாரதி எழுதிய சிறு கட்டுரை மூலமாக தமிழில் 1916-ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்தக்  குறும்பா(ஐக்கூ) கவிதைகளைத் தமிழ் வாசகர் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்றதிலும், இளைய தமிழ்க் கவிஞர்களை  ஓர் இயக்கம் போல் ஒருங்கிணைத்துத், தமிழகம் முழுவதிலும் குறும்பா(ஐக்கூ)  கவிதைத் திருவிழாக்களை நடத்தியதிலும் முன்னோடியானவர் கவிஞர் மு.முருகேசு.
 ‘இனிய  ஐக்கூ’ எனும் கவிதை இதழைத் தொடங்கி, எண்ணற்ற கவிஞர்களை அறிமுகம் செய்தவர்.
  2009-ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற உலக ஐக்கூ  மன்ற மாநாட்டில் தமிழகச் சார்பாளராகப் பங்கேற்றவர். அம்மாநாட்டில் நடைபெற்ற உலகு தழுவிய பன்மொழிக் கவிதைப்போட்டியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுள்ளார். இவரது குறும்பா(ஐக்கூ) கவிதைகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், பிற உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர் படைப்பு ‘நிலா முத்தம்’ எனும்பெயரில் தனிநூலாகவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது.
      இவரது ஐக்கூ கவிதைகள் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
  இதுவரை இவரது குறும்பா(ஐக்கூ) கவிதைகளை 6 மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்விற்கும், இரு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்விற்கும் எடுத்துக்கொண்டு உள்ளனர்.
  குவைத்து நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா வெற்றித் தமிழ் விழா கடந்த செப்.16 அன்று குவைத்திலுள்ள அமெரிக்கன் பன்னாட்டுப் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ் குறும்பா(ஐக்கூ) கவிதையில் தொடர்ந்து கால்நூற்றாண்டுகளாகச் செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேசைப் பாராட்டி  மதிப்பளிக்கும் வகையில், ‘குறுங்கவிச் செல்வன்’ எனும் விருதினை இந்திய-குவைத்து தூதர் சுனில்  செயின் வழங்கினார்.
விழாவில், மலேசியன் – குவைத்து தூதர்அகமது (உ)ரோசியன் அப்துல்கனி, குவைத்து பன்னாட்டு நூலகப் பொது மேலாளர் காமல் அல்-அப்துல் சலீல், வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்க நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது, திரைப்பட இசையமைப்பாளர்  சிரீகாந்து தேவா, கவிஞர் அ.வெண்ணிலா,  ஊரகப் பாடகர் இளையராசா முதலானோர் கலந்து கொண்டனர்.
விருது-கவி மு.முருகேசு ;virdhu_murugesan03
-வந்தை அன்பன்