வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். -கவிஞர் தங்கம் மூர்த்தி


கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தினால்

கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

-கவிஞர் தங்கம் மூர்த்தி

 இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளச்சிக்கேற்ப கற்றலில் புதுமைகளைப் புகுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்று கவிஞர் தங்கம் மூர்த்தி பேசினார்.
  புதுக்கோட்டையில்  ஆடி 15, 2047 / சூலை 30 அன்று இந்தி்யாவிற்கு உதவு(எய்டு-இந்தியா)- சிரீ வெங்கடேசுவரா  பதின்நிலை-மேல்நிலைப்பள்ளி நடத்தும்  தொடக்கப்பள்ளிக் குழந்தைகளின் கற்றல் திறன் வளர்ப்பிற்காக ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்  அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இப்பயிற்சி முகாமிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.மகேசுவரன் தலைமையேற்றார்.  பள்ளியின் இயக்குநர் கவிஞர். ஆ. இராசேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.  அரண்மனைநகர் சுழற்சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.கருப்பையா, செயலர்  டி.இரவிச்சந்திரன், பாவேந்தர் பள்ளி  அறிவுரைஞர் ஆர்.எசு..காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  “பயிற்சி முகாம் ஏன்…எதற்கு?” எனும் தலைப்பில் பயிற்சியின் நோக்கம் குறித்து  கண்டறிவோம்(யுரேகா) கல்வி இயக்க மாநில  அறிவுரைஞர் மு.முருகேசு அறிமுக உரையாற்றினார்.  குழந்தைகளின் கற்றல்திறன் வளர்ப்பிற்கான கற்றல்  துணைக்கருவிகளை ஆசிரியர்களுக்கு வழங்கி, பயிற்சி முகாமை தொடங்கி வைத்த  சிரீ வெங்கடேசுவரா  பதின்நிலை-மேல்நிலைப்பள்ளித் தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசியதாவது:
       “கல்வி ஒவ்வொரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும் அடித்தளமானது.  சிறந்த முறையில் கிடைக்கும்  தொடக்கக் கல்வியின் மூலமாக ஒரு சிறந்த மனிதன் வகுப்பறையிலிருந்து உருவாகின்றான்.  இன்றைக்கு உலகெங்கும் கற்றல்- கற்பிக்கும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கணினி மயமான வகுப்பறை, சூட்டிக்கை வகுப்பு(smart class) என வகுப்பறையில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்கள் மாணவர்களின் கல்வியிலும்  எதிரொலிக்க வேண்டும். ஆசிரியர் மாணவர்களுக்குத் தனிக்கவனம் எடுத்துப் பாடம் நடத்தினால் எல்லாக் குழந்தைகளையும் படிக்க வைக்க முடியும்.  குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்வதிலுள்ள ஆர்வத்தை ஆசிரியர்கள் சரியான முறையில் அடையாளம் கண்டு அதை வளர்த்தெடுக்கவேண்டியது  இன்றியமையாதது.” என்றார். 
   இந்தியா உதவித் திட்ட இயக்குநர் தோத்தாத்திரி, மாநிலக் கருத்தாளர்கள் அருண்குமார், பரமேசுவரி, முருகன், சற்குணம் ஆகியோர் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளை வழங்கினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக