தலைப்பு-கொல்லும் நச்சுஊசிகள் ; thalaippu_kollumuusikal

ஈழவேட்கை கொல்லும் நச்சு ஊசிகள்! முடமாகும் ஈழத் தமிழினம்!

ஈழத்தில் இருந்து இழவுச் செய்தி வந்திருக்கிறது. வேறு என்ன செய்தி வரும்?
ஏதிலியர் (அகதிகள்) முகாம்களில் இருந்தும் மறுவாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட முன்னாள் போராளிகள், இனம் காண முடியாத நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கொடூரமான செய்தி.
இப்படி 103 பேர் இதுவரை இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்… ஆனால், இந்த இனம் புரியாச் சாவுகளின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மை என்ன?
முன்னாள் போராளிகளின் சாவு குறித்து உலக நாடுகளின் நடவடிக்கையும் உசாவலும் (விசாரணையும்) தேவை என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேசுவரன் விடுத்துள்ள அறிவிப்பு நச்சுச் செய்தியாக வந்து விழுகிறது. இப்பொழுது, “உயிருடன் இருக்கும் முன்னாள் போராளிகள் அனைவரையும் மருத்துவ ஆய்வு செய்ய வேண்டும்” எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேசு பிரேமச்சந்திரன் சொல்லித் திகைப்பைக் கூட்டுகிறார்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் இப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம்சிறீதான் இந்தச் சிக்கலைக் கிளப்பினார். இதற்கு மறுமொழி அளித்துப் பேசிய பாதுகாப்புத் துறைத் துணை அமைச்சர் உருவான் விசயவர்த்தனா, “இந்தச் சிக்கலுக்கு எந்தவித முதன்மையும் அளிக்க முடியாது” என்று அக்கறையின்றிப் பதில் அளித்தார்.
இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும்பொழுது வெளிப்படையாக, இரக்கமற்ற இந்தப் படுகொலையை உடைத்துச் சொல்லி விட்டார்.
“தடுத்து வைக்கப்பட்ட மறுவாழ்வு முகாம்களில், போராளிகள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். இவர்களில் பலர் திடீர் திடீரெனத் தொற்றா நோய்களால் இறந்தார்கள். இவர்கள் கைது செய்யப்பட்டபொழுது போடப்பட்ட ஊசியில் நச்சு வேதிப்பொருள் கலக்கப்பட்டிருந்ததோ என்ற ஐயம் ஏற்படுகிறது. அதனால்தான் இவர்கள் திடீர் திடீரென நோய் பாதிப்பில் இறக்கிறார்கள்”.
இதைத் தொடர்ந்து, நலவாழ்வுத் துறை அமைச்சர் இராசித சேனாரத்தின, முன்னாள் போராளிகள் அனைவருக்கும் மருத்துவ ஆய்வு நடத்த ஆயத்தமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
மறுவாழ்வு முகாமில் நச்சு ஊசி போடப்பட்டதாகவும், உணவில் நஞ்சு கலக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி உயோகேசுவரன்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தலைமையமைச்சர்(பிரதமர்) இரணில், குடியரசுத் தலைவர் சிறீசேன ஆகிய இருவரும் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இவர்களை ஆதரிக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திரிகா, “போரின்பொழுது நடந்த குற்றங்களுக்கு உசாவல் (விசாரணை) நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்ல வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.
ஆனந்த இராசா என்கிற இளைஞரின் கடிதம் ஒன்றைக், ‘கதிரவன்’ என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது. “நான் அநுராதபுரம் சிறையில் இருந்தபொழுது எனக்கு ஓர் ஊசி போட்டார்கள். அதிலிருந்தே எனது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு விட்டன” என்று அந்தக் கடிதத்தில் கூறிப் பதற வைக்கிறார் அவர்.
மறுவாழ்வு மையத்துக்கு நான் வந்தபொழுது நன்றாகத்தான் இருந்தேன். அங்கே எனக்கு ஓர் ஊசி போட்டார்கள். சில நாட்களிலேயே எனது ஒரு கால் செயல் இழந்து முடமாகிப் போனேன்” என்று சொல்லியிருக்கிறார் போராளிகளுள் இன்னொருவர்.
காணாமல் போனவர்களைத் தேடுவதற்கான 17 பேர் கொண்ட உசாவல் ஆணையம் அண்மையில் தனது பணியைத் தொடங்கியது. தனது மகன், கணவன், அப்பா இருக்கிறாரா? இறந்தாரா? என்பது இதுவரை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் குடும்பங்கள் அந்த உசாவல் ஆணையத்தில் வந்து முறையிட்டுச் செல்கின்றன.
அப்படி முறையீடு கொடுக்க வந்த எசு.என்.தேவன் என்பவர் சொன்ன செய்திகள் அனைவரையும் திகைப்புக்கு ஆளாக்கின.
“2009ஆம் ஆண்டு மே மாதம், இலங்கைப் படையினரிடம் நான் அடைக்கலம் அடைந்தேன். மூன்று மாதங்கள் ஒரு முகாமில் வைத்திருந்தார்கள். அதன் பிறகு வேறு ஒரு முகாமுக்கு மாற்றினார்கள். அந்த முகாமில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ‘தடுப்பூசி’ என்று சொல்லி ஓர் ஊசி போட்டுக் கொள்ளக் கட்டாயப்படுத்தினார்கள். அந்த ஊசி போட்டதும் பலருக்கு மயக்கம் வந்து விட்டது. மயங்கி விழுந்தவர்களை எல்லாம் முதலுதவி ஊர்தியில் (ஆம்புலன்சில்) கொண்டு போனார்கள். ‘எதற்காக இந்த ஊசி போடுகிறீர்கள்?’ என்று கேட்டபொழுது ‘பறவைக் காய்ச்சல் பரவுகிறது. அதற்காகத்தான்’ என்று சொன்னார்கள்.
படைப்பிரிவு அலுவலர்களுள் இன்னொருவர், ‘அவர்கள் எல்லாருக்கும் உடல்தேய்வு(எய்ட்சு) நோய் இருக்கிறது. அதனால்தான் ஊசி போடுகிறார்கள்’ என்றார். ‘இத்தனை பேருக்கா உடல்தேய்வு நோய் இருக்கிறது?!’ என்றோம்.
அந்த ஊசி போட்டுக் கொண்ட எல்லோருக்குமே சில நாட்களில் உடல் சோர்வு வந்தது. உடல் நடுக்கம் ஏற்பட்டது. சிலருக்குப் பார்வை மங்கி விட்டது. ஊசியைப் போட்டுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னவர்கள் எல்லாருக்கும் அடி விழுந்தது. அடித்துக் கட்டாயப்படுத்தி ஊசியைப் போட்டார்கள். அந்த ஊசியில் ஏதோ வேதிப்பொருள் கலந்திருக்குமோ என்று ஐயமாக இருக்கிறது.
எங்களுக்குக் கொடுத்த சாப்பாட்டிலும் அது மாதிரி ஏதாவது கலந்திருக்கலாம் என்று ஐயமாக இருக்கிறது. எங்களுக்கு எங்கள் சொந்தக்காரர்கள் கொண்டு வந்து கொடுக்கிற சாப்பாட்டைப் பிடுங்கித் தின்ற படை வீரர்கள், முகாமில் கொடுத்த சாப்பாட்டை ஒரு நாள் கூட வாங்கிச் சாப்பிட்டதே இல்லை. முகாமில் இருந்து வெளியேறிய எல்லாருமே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுவதற்கு அந்தச் சாப்பாடுதான் காரணம். சாப்பாட்டில் ஏதோ கலந்திருக்கிறார்கள்” என்று எசு.என்.தேவன் சொல்லியிருக்கிறார்.
பாதிப் பேரை மொத்தமாகக் கொன்றும், மீதிப் பேரைச் சிறுகச் சிறுகக் கொல்லும் சிங்கள இனவெறியின் கோரப் பசி இன்னும் அடங்கவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி, சிறையில் இருந்து வெளியே வந்த மூன்றே ஆண்டுகளில் இறந்து போனார். அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
அதே போல் சசிகுமார் இராகுலன், தம்பிராசா சரசுவதி ஆகியோரின் திடீர் மறைவும் ஈழத் தமிழர்களின் மத்தியில் திகைப்பை விதைத்துள்ளது. இவை எல்லாம் இயற்கைச் சாவுகள் இல்லை என்பதுதான் வெளிவரும் உண்மை. ‘வன்கொடுமைக்கு (பயங்கரவாதத்துக்கு) எதிரான போர்’ என்று பெயர் சூட்டி ஓர் இனத்தையே கருவறுப்பதுதான் சிங்களத்தின் திட்டம்.
உலகம் எந்தெந்த ஆயுதங்களை எல்லாம் தடை செய்து வைத்திருந்ததோ, அவற்றையெல்லாம் பயன்படுத்தித் தமிழர்களை அழித்தார்கள். வேதிமக் குண்டுகளை வீசினார்கள். செத்து விழுந்தவரின் உடல்கள் அனைத்தும் கருகின.
வெள்ளை எரிம(பாசுபரசு)க் குண்டுகளை வீசினார்கள். கொத்துக் குண்டுகளை மொத்த மொத்தமாக வீசினார்கள். போர்க்காலங்களில் மருத்துவமனைகள், வழிபாட்டு இடங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றின் மீது குண்டு வீசக் கூடாது. ஆனால், அவை மீதுதான் குண்டுகளை வீசினார்கள்.
போர்க்காலங்களில் பாதுகாப்பு வளையங்கள் உருவாக்கி, அங்கு இருக்கும் மக்களைப் பாதுகாப்பார்கள். ஆனால், உலகத்தில் எங்கும் நடக்காத வகையில், பாதுகாப்பு வளையங்களின் மீதே குண்டுகளை வீசியது சிங்கள வன்கொடுமை.
“வானத்தில் வெடித்துத் தரையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் குண்டுகளைப், பொதுமக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் பயன்படுத்தக் கூடாது” என்பது செனிவா நெறிகளில் ஒன்று. அதைப் பின்பற்றவே இல்லை.
கொலை, முழுமையாக அழித்தல், அடிமைப்படுத்துதல், நாடு கடத்தல், சிறைப்பிடித்தல், உளவியல் துன்புறுத்தல், பாலியல் வன்புணர்வு, காணாமல் போகச் செய்தல், இன அடையாளங்களை அழித்தல் ஆகிய அனைத்துப் போர்க்குற்றகளும் போர் நடந்த காலத்தில் மட்டும் அல்ல, போர் முடிந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டு விட்டது என மார்தட்டிக் கொள்ளும் நிகழ்வுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நடக்கிறது.
இராசபக்‌சவைக் ‘கொடூரன்’ என்று சொல்லி வீழ்த்திவிட்டு வந்த சிறீசேன – இரணில் கூட்டணி ஆட்சிக் காலத்திலும் நிலைமை மாறவில்லை. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தாருங்கள் எனக் கோரிக்கை வைக்கும்பொழுது இலங்கைத் தலைமையமைச்சர் இரணில் சொல்கிறார், “காணாமல் போனவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை!”
செயவர்த்தன, சந்திரிகா, இராசபக்‌ச, இரணில், சிறீசேன ஆகியோருக்குள் எந்த வேறுபாடும் இல்லை. இலங்கை தேசியக் கட்சியோ சுதந்திரக் கட்சியோ இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. ஆண் – பெண் வேறுபாடும் இல்லை. சிங்கள இனவெறி எல்லோர் குருதியிலும் ஓடுகிறது.
இவர்களுக்குச் செல்வாவும் ஒன்றுதான், அமிர்தலிங்கமும் ஒன்றுதான், பிரபாகரனும் ஒன்றுதான், திலீபனும் ஒன்றுதான்! போராடும் தமிழனும் ஒன்றுதான், போராடாத தமிழனும் ஒன்றுதான். தமிழன், தமிழ் அடையாளம் இவற்றை அழித்தாக வேண்டும்.
2006-ஆம் ஆண்டில் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் இருந்தன; எத்தனை நூறாயிரம் (இலட்சம்) மக்கள் இருந்தார்கள்; இப்பொழுது எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? தமிழர்களின் மரபு வழித் தாயகமாக முதலில் எத்தனை ஆயிரம் சதுரப் புதுக்கல் (கிலோமீட்டர்) இருந்தது; இப்பொழுது எவ்வளவு இருக்கிறது? வடகிழக்கு மாகாணத்தில் 2006-ஆம் ஆண்டுக்கு முன்னால் இருந்த சிங்களவர் எண்ணிக்கை என்ன; இப்பொழுதைய எண்ணிக்கை என்ன? இந்த மூன்று கேள்விகளுக்குள்தான் ‘இனப்படுகொலை’ என்பதன் விடை இருக்கிறது.
சிங்கள-பௌத்தத் தேசியவாதம் 1948-ஆம் ஆண்டு முதல் தலைதூக்கிய கதையை ஐக்கிய நாடுகள் அவை அறிக்கை விரிவாகச் சொல்லிவிட்டது. இப்பொழுது தமிழர் பகுதிகள் எங்கும் புத்தர் சிலைகள் புதிதாக முளைக்கின்றன. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் படை முகாம் இருந்தது. இப்பொழுது அந்த இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டு விட்டது. இதற்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கடுமையான எதிர்ப்பைக் காட்டியுள்ளது. “இந்துக் கடவுள் சிலைக்கு அருகில் புத்தர் சிலை வைப்பது பௌத்த சமயத்துக்கு எதிரானது” என்று பௌத்த சமயத் தலைவர்கள் எதிர்க்கிறார்கள். அதைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் 80 அடி உயர புத்தர் சிலை நிறுவப்பட்டு விட்டது.
படை முகாமுக்காக எடுக்கப்பட்ட தமிழர் நிலங்கள் திருப்பித் தரப்படவில்லை. இனப்படுகொலை வெற்றிக்காகப் பாடுபட்ட சிங்களப் படை வீரர்களுக்குப் பரிசாகத் தமிழர் பகுதியில் இருக்கும் நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன.
ஓர் இனத்தின் மீதே நச்சு ஊசி பாய்ச்சப்பட்டு விட்டது. வேதியச் சோற்றை ஓர் இனமே தின்று கொண்டிருக்கிறது.
இது ‘மகிழ்ச்சி’க் காலமா… கருமமா?
ப.திருமாவேலன் 02 ; pa.thirumaavelan02
ப.திருமாவேலன்
ஓவியம்:  ஆசிப்கான்
ஆனந்த விகடன் 24.08.2016
அட்டை, விகடன், ஆக.24,2016 ;attai_wrapper_vikatanaug24,2016

தரவு: பெயர்- இ.பு. ஞானப்பிரகாசன் : peyar_name_i.bhu.gnanaprakasan