திங்கள், 15 ஆகஸ்ட், 2016

தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்துக் கொண்டார்!




புத்தத்துறவி : bhuddhist monk

பதுளையிலுள்ள தமிழர் நிலங்களைப்

புத்தத் துறவி பறித்து(அபகரித்து)க் கொண்டார்!

செயலணியில் முறைப்பாடு

ஊவா மாகாணம் பதுளையிலுள்ள தங்களது காணிகள் புத்தத்த துறவியால் பறிக்கப்பட்டிருப்பதோடு, மட்டக்களப்பிற்கு ஏதிலியராக (அகதியாக) வந்து 33 ஆண்டுகள் கழிந்தும், வாழ வீடு கிடைக்கவில்லை என்று பெருந்தோட்டப் பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.
  நல்லிணக்க முயற்சியின்பொழுது தமிழ்க் குமுகம்(சமூகம்) நிகருரிமை(சமவுரிமை) பெற்று அனைத்து நலங்களுடனும் வளங்களுடனும் வாழ வழி வகை செய்ய வேண்டும் எனக் கோருகின்றோம்.
  1983ஆம் ஆண்டு சூலைக் கலவரத்தில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வாழும் ஊவா பெருந்தோட்டப் பகுதி மக்கள், நல்லிணக்கச் செயலணியின் மக்கள் கருத்தறியும் செயற்குழுவிடம் தமது குறைபாடுகளைத் தெரிவித்துள்ளனர்.
 இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்காக மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு ஆடி 25, 2047 / ஆகத்து 9, 2016 அன்று வாழைச்சேனைப் பகுதிச் செயலகக் கேட்போர் கூடத்தில் தொடங்கியது.
  ஊவா மாகாணத்திலிருந்து 1983ஆம் ஆண்டு சூலைக் கலவரத்தின்பொழுது அடித்து விரட்டப்பட்டு, அனைத்தையும் இழந்து, பாதிக்கப்பட்டு ஏதிலியர்களாக வந்து மட்டக்களப்பு – பதுளை வீதிப் பகுதியில் கடந்த 33 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமக்கு, வாழ இன்னும் ஒரு வீடு கூடக் கட்டித் தரப்படவில்லை என்று ஏறாவூர்ப்பற்றுப் பகுதிச் செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மரப்பாலம் சிற்றூரில் உள்ள இராமசுந்தரம் மகேசுவரி முறையிட்டுள்ளார்.
 “ஊவா பரணகம, வெலிமட பகுதியில் நாங்கள் நல்லபடியாக வாழ்ந்து வந்தபொழுதுதான் 1983 சூலைக் கலகம் ஏற்பட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.
 “நாங்கள் (இ)லயன் எனப்படும் சிற்றறைகளில் வாழவில்லை. எங்களுக்கு 5 காணி (ஏக்கர்) சொந்த நிலம் இருந்தது. நாங்கள் விரட்டியடிக்கப்படும்பொழுது எங்கள் காணி, வீடு, சொத்துக்கள் அத்தனையையும் அங்கிருந்த – நம்பிக்கைக்குரியவர் என நம்பிய – புத்தத் து புத்தத் பௌத்த துறவியால் பறிக்கப்பட்டிருப்பதோடு, நாங்கள் அங்கு நிலைமை சீரானதும் திரும்பிச் செல்ல முற்பட்டபொழுது ‘விடுதலைப்புலி’ என்று முத்திரை குத்தப்பட்டதும் நடந்தது. எங்களுக்கு அங்கும் இழப்பீடு கிடைக்கவில்லை; இங்கும் மறுவாழ்வு கிடைக்கவில்லை” என்றார் இராமசுந்தரம் மகேசுவரி.
  இந்தச் செயலணியில் மட்டக்களப்பு, பதுளை வீதிப் பகுதியில் வாழ்ந்து வரும், மலையக மக்கள் தாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றியும் நல்லிணக்கப் பொறிமுறையில் தமது எதிர்பார்ப்புக்கள் உள்ளடக்கிய விண்ணப்பம் ஒன்றையும் கையளித்தனர். இந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வரும் மலையகத் தமிழர்களாகிய நாங்கள், ஏனைய குமுகங்களுடன் (சமூகங்களுடன்) ஒன்றிணைந்து நிகரான உரிமையைத் துய்த்து (அனுபவித்து) வாழ விரும்புகின்றோம். நல்லிணக்கத்திற்கான முயற்சிகளின்பொழுது நாங்கள் முகம்கொடுத்து வரும் ஒதுக்குதலை நீக்க ஆவன செய்யும்படி வேண்டுகின்றோம்!
 ஏறாவூர்ப்பற்றுப் பகுதிச் செயலகப் பிரிவின் பதுளை வீதிச் சிற்றூர்களில் கூடுதலாக மலையகத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். சிற்றூரின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில் கல்வி, வேலைவாய்ப்பு, குமுக, பொருளியல், பண்பாட்டு, உட்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கையின்பொழுது மலையகத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, நல்லிணக்க முயற்சியின்பொழுது எமது சமூகம் நிகருரிமை பெற்று நலமாக வாழ வழி வகை செய்ய வேண்டும் எனக் கோருகின்றோம்!”
  1958ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்ற இனக் கலவரங்களினால் மலையக மக்கள் பெரும் இழப்புகளுக்கு முகம்கொடுத்து இந்த மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து, சிற்றூர்களில் குடியமர்ந்து போர்க் காலத்தில் பாரிய உயிர், உடைமை இழப்புகளையும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாவது அமர்வு களுவாஞ்சிக்குடிப் பகுதிச் செயலகத்தில் ஆடி 28, 2047 / ஆகத்து 12, 2016 அன்று காலை 9:30 தொடக்கம் மாலை 4:30 வரை நடைபெற்றது. செயலணியின் மூன்றாவது அமர்வு, அதற்கு மறுநாள் ஆடி 29 / 2047ஆகத்து 13, 2016 அன்று மண்முனை வடக்குப் பகுதிச் செயலகத்தின் தேர்பா மண்டபத்தில் காலை 9:30 தொடக்கம் மாலை 4:30 வரை நடைபெற்றது. அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு மட்டக்களப்பு வாகரைப் பகுதிச் செயலகக் கேட்போர் கூடத்தில் ஆடி 32, 2047 / ஆகத்து 16, 2016 காலை 8:30 தொடக்கம் மாலை 4:30 மணி வரை நடக்கும்.
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக