வேமண்ணா :vemanna_padam

கன்னடப்புலவர்  தமிழர் வேமண்ணா

  1927இல் தமிழ்நாட்டு வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர்தாம் கருநாடக மாநிலத்தில் தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்பிடத் தோற்றுவாயாக வாய்த்த பெரியவர் மானமிகு வேமண்ணா என்கிற வி.சி.வேலாயுதன் அவர்கள். முதலாம் உலகப் பெரும்போர் சமயத்தில் பெங்களூரு பிரிகேடு சாலைக்கு ஓடோடி வந்த இவர் படித்தது என்னவோ ஏழாம் வகுப்பு வரை மட்டுமே.
  பெங்களூரு பின்னி நூற்பாலைப் பள்ளிக்கூடத்தில்தான் இவரது படிப்பு தொடங்கித் தொடர்ந்தது. ஆயின், தந்தை பெரியார் அவர்களை முதன்முதலில் இவர் சந்தித்தபோது தமிழ்ப்புலவர் பட்டப்படிப்புக்குப் படித்துக் கொண்டிருந்தாராம். பெரியார் இவரை உசாவியபோது(விசாரித்தபோது) தன்னிலை விளக்கம் அளித்த வேலாயுதத்தைத் திசை திருப்பி “ஆங்கிலத்தையும் படி” என்று கூறிப் பட்டப்படிப்புக்கு வழிகாட்டியவர் ஐயா பெரியார் அவர்களே.
  தமது இளம் வயதிலேயே பெரியார் கருத்துகளில் ஆழ்ந்துவிட்டார் வேலாயுதனார். தன் முயற்சியின் விளைவாகக் கன்னட இலக்கியக் கழகத்தின் (கன்னட சாகித்ய பரிசத்தின்) வழி கன்னடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் இவர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு கன்னடத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் எழுத்தாளர் இவர்தான். கூடவே ஆங்கிலத்தையும் சமசுகிருதத்தையும் கற்றுத் தேர்ந்த இவர், முதன்முதலில் மைசூர் நூற்பாலையில் பணியைத் தொடங்கி, பின்னர் பின்னி நூற்பாலையில் எழுத்தராகப் பணியைத் தொடர்ந்தார். பகுத்தறிவுப் பாசறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வேலாயுதனார் பகுத்தறிவுப் பெருவழியிலிருந்து தடம் புரளாத தன்னிகரற்ற சிந்தனையாளர்.
 1962இல் பெங்களூரு பளே பேட்டை பகுதியில் நினைவில் வாழும் நாராயணசாமி அவர்களின் திருமகனார் மானமிகு சம்பத்து அவர்களின் தலைமையில் ‘சிந்தகரச்சாவடி’ என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கி அதில் இவர் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். அவ்வமைப்பின் துணைத்தலைவராக, தற்போதும் நம்மிடையே வாழ்ந்து வரும் 96 அகவை கொண்ட மானமிகு வீ.மு.வேலு அவர்கள் இருந்தார். பொன்.இளவழகன் என்கிற பாலசுந்தரம் அவர்களும் சில பொறுப்புகள் வகித்து வந்தார். இந்த நண்பர்கள் கூட்டந்தான் பெரியார் நூல்களைத் தமிழிலிருந்து கன்னட மொழிக்கு மொழியாக்கம் செய்ய முனைந்தது. தோழர் மானமிகு சம்பத்துக்குச் சொந்தமான அக்கம்மா கட்டடத்தில் இந்த அமைப்பு இயங்கி வந்தது. இதன் வழி இன்றைக்குக் கன்னடப் பல்கலைக்கழகப் பாடநூலாக இருக்கும் அளவுக்கு வளமை பெற்றுள்ள தந்தை பெரியாரவர்களின் 22 நூல்களைக் கன்னடத்தில் மொழியாக்கம் செய்து தந்தவர்தான் இந்த வேமண்ணா என்கிற வேலாயுதனார். இவரது கன்னட மொழியாக்க எழுத்து வடிவங்களை மெய்ப்புப் பார்த்து (proof reading) தந்தவர் மானமிகு இராகண்ணா என்கிற கன்னடத் தோழர். இவரின் ஓயாத உழைப்பும் உதவியும் வேமண்ணாவின் எழுத்துப்பணிக்குத் துணையாக இருந்ததென்பதில் ஐயமில்லை.
  இந்தச் சிந்தகரச் சாவடிதான் கருநாடக மாநிலத்தில் பெரியாரை அறிமுகப்படுத்திப் பட்டித் தொட்டியெங்கும் பரப்புரை செய்ய வழிவகுத்தது. தோழர் நாராயண சம்பத்து – தலைவர், தோழர் வீ.மு.வேலு – துணைத்தலைவர், தோழர் வி.சி.வேலாயுதன் – செயலாளர், தோழர் பொன்.இளவழகன் – பொருளாளர், தோழர் இராகண்ணா எழுத்துப்பணியின் உதவியாளர், மெய்ப்புப் பார்த்து உதவி வந்தவர். தோழர்களான இந்த ஐவரின் பெருமுயற்சியின் விளைவாக ஒவ்வொரு நூலும் 1000 படிகள் என்ற முறையில் 22 நூல்கள் கன்னடமாயின. இக்கன்னட மொழியாக்கத்தின் முதுகெலும்பு தோழர் வேமண்ணா என்கிற வி.சி.வேலாயுதனார்.
  இவர் இந்நூல்கள் மட்டும் அல்லாமல் கலைஞர் மு.கருணாநிதி எழுதியுள்ள ‘குறளோவியம்’ என்ற நூலையும், ஆசிரியர் தோழர் கி.வீரமணி எழுதியுள்ள இரண்டு நூல்களையும் கன்னடத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் ‘பெரியாரவர சீவன சரித்திரேத’ என்ற பெயரில் கன்னடத்தில் தந்துள்ளார். 1975இலிருந்து 1984 வரை ‘சன பிரகதி’ என்ற கன்னடக் கிழமை (வார) இதழின் எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் பொறுப்பிலிருந்து தொண்டாற்றி வந்துள்ளார். 1975இல் ‘கன்னட இரத்னா’ என்ற விருது கொடுத்துப் பாராட்டப்பட்டார்.
 இவரது 82ஆம் அகவையில் ‘விசாரவாதிகள வேதிகே’ கருநாடக (விவேக) என்ற அமைப்பு ‘பெரியார் விருது’ அளித்துச் சிறப்பித்துள்ளது. பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் (மறைந்த பெரியார்ப் பெருந்தொண்டர் மானமிகு ஆ.மா.தருமலிங்கனார் தொடங்கி மானமிகு அ.மா.வேணுகோபாலனார் வழி புத்துயிர் பெற்ற, இயங்கி வரும் அமைப்பு) இவருக்குச் ‘சிந்தனைச் செம்மல்’ என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
  இத்தகு பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய ஐயா வேமண்ணா தமது 89ஆம் அகவையில், வைகாசி 26, 2047 / 08.06.2016 அன்று இயற்கை எய்திவிட்டது என்பது பகுத்தறிவு இயக்கத்திற்குப் பேரிழப்பு.
நெருநல் உளனொருவன் இன்றில்லை – யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு” – என்ற திருக்குறள் வழி அன்னார் திருப்பயணமாகி விட்டார்.
வீர வணக்கம்! வீர வணக்கம்! வேலாயுதனார் புகழ் வாழ்க! வாழ்க!
– பொதுவுடைமைப் பாவலர் கி.சு.இளங்கோவன்
தமிழர் முழக்கம் : பக்கங்கள் 28-29
muthirai_thamizharmuzhakkam
தரவு : பெங்களூர் முத்துச்செல்வன்