தலைப்பு- தமிழர்திருமணத்தில் தாலி :thalaippu_thamizhar_thirumanamurai

தமிழர் திருமண முறை

  அகத்திணையுள் திருமண வாழ்க்கை ‘கற்பு’ என அழைக்கப்படுகின்றது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோரும் அவர்களுடைய திருமணத்துக்கு உடன்படுவர்.1 திருமணம் ஒரு நல்ல நாளில் நடைபெறும்.2 தீய கோள்கள் இடம் விட்டு விலகவும், நிலா உரோகிணியுடன் கூடவும் வேண்டும். விடியற்காலையிற்றான் திருமணம் நடைபெறும். திருமணப் பந்தலில் புதுமணல் பரப்பப்படும்; மாலைகள் தொங்கவிடப்படும்; அழகிய விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். வயது முதிர்ந்த மங்கல மகளிர் தண்ணீரைக் குடங்களில் முகந்து தம் தலையின் மேல் தூக்கிக் கொண்டு வந்து ‘சிறு மண்டை’ என்னும் அகன்ற வாயுடைய கலத்தில் பெய்து கொடுப்பர். குழந்தைகளைப் பெற்றெடுத்த மங்கல மகளிர் நால்வர் கூடி அத்தண்ணீரை வாங்கி, அதில் பூவிதழ்களையும், நெல் மணிகளையும் சொரிந்து அத்தண்ணீரினால் மணமகளை நீராட்டுவார்கள். இச்சடங்குக்கு ‘வதுவை நன்மணம்’ என்று பெயர். அப்போது அப்பெண்டிர், “இவள் கற்பு நெறியினின்றும் வழுவாமல், தன்னைக் கொண்ட கணவனை விரும்பிப் பேணும் விருப்பமுள்ள துணைவியாவாளாக” என அம்மணமகளுக்கு வாழ்த்துக் கூறுவர். மணமகளின் பெற்றோர் “பெரிய ஓர் இல்லத்துக் கிழத்தியாக ஆவாய்” என்று வாழ்த்தி அவளை மணமகனுக்குக் கொடுப்பர்.
  உளுத்தம் பருப்புடன் கலந்த அரிசிப் பொங்கல் மண விழாவுக்கு வந்தவர்கட்கு இடையறாது வழங்கப்பெறும்.3 இறைச்சியும் நெய்யும் கூட்டி ஆக்கிய வெண்சோற்றையும் வழங்குவதுண்டு. திருமண வினைகள் தொடங்குமுன்பு கடவுள் வழிபாடு நடைபெறும். மணமுழவு முழங்கும். வெண்மையான நூலில் வாகையிலைகளையும், அருகம்புற் கிழங்குகளையும் கோத்த மாலையை மணமகள் அணிந்து கொள்ளுவாள். மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டியதாகச் சங்கத் தமிழில் சான்று ஏதும் கிட்டவில்லை. ‘ஈகையரிய இழையணி மகளிரொடு’ – அதாவது பிறர்க்குக் கொடுத்தற்கரிய இழை – என்று புறப்பாடல் ஒன்றில் குறிப்புக் காணப்படுகின்றது. ஆனால், அது திருமணத்தின்போது அணிவிக்கப்பட்டதென்பதற்குச் சான்றில்லை. ஐம்படைத் தாலியையும் புலிப்பல் தாலியையும் குழந்தைகட்குக் காப்பணியாக அணிவிக்கும் வழக்கம் அக்காலத்து உண்டு. ஆனால், திருமணத்தின்போது மங்கலநாண் பூட்டும் வழக்கம் பழந்தமிழரிடையே இல்லை போலும். அவ்வழக்கம் இருந்திருப்பின் எல்லாத் திருமணச் சடங்குகளையும் குறிப்பிடும்போது தாலி கட்டுவதென்னும் தலையாய சடங்கைக் குறிப்பிடாமல் இரார்.
  ஆரியர் பண்பாடும் பழக்க வழக்கங்களும் பெருகிவந்த காலத்து எழுந்த நூலான சிலப்பதிகாரத்திலும் தாலி கட்டும் சடங்கைக் குறிப்பிடவில்லை. ஆனால், தமக்குத் திருமணம் ஆகிவிட்டதைத் தெரிவிப்பதற்காக அக்காலத்துப் பெண்கள் மங்கல அணி ஒன்றை அணிந்திருக்க வேண்டுமென்றும், திருமண நாளன்று அம்மங்கல அணியை ஊர்வலமாகக் கொண்டு வரும் வழக்கம் இருந்தது என்றும் அறிகின்றோம்.4 இம்மங்கல அணியையே மேலே எடுத்துக் காட்டிய புறப்பாட்டு குறிப்பிடுகிறது போலும்.5 ‘மங்கல அணி’ என்று வரும் வேறு இடங்களில் அடியார்க்கு நல்லார் அதற்கு ‘இயற்கையழகு’ என்றே உரை கண்டுள்ளார்.6 எனவே, பழந்தமிழர் மாங்கலிய நாண் பூட்டித் திருமணம் முடித்தனர் என்று திட்டமாகக் கூறுவதற்கில்லை.
  ஆண்டாள் நாச்சியார், கண்ணன் தம்மை மணந்ததாகக் கண்ட கனவைத் தம் தோழியினிடம் கூறும்போது திருமணச் சடங்குகள் அத்தனையும் கூறியவிடத்துத் தமக்குக் கண்ணன் தாலி கட்டியதாகக் கூறவில்லை. ‘மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்’ என்று மட்டுந்தான் தெரிவிக்கின்றார். கந்தபுராணம், பெரிய புராணம் ஆகிய நூல்களில் குறிப்பிடப்படும் திருமணங்களிலும் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டியதாகத் தெரியவில்லை. சீவக சிந்தாமணியில் அரசியர் அணிந்திருந்த ‘நாணுள்ளிட்டுச் சுடர்வீச நன்மாணிக்க நகுதாலி’யும் திருமணத்தின்போது கட்டப்பட்டதென்று கொள்ளுவதற்குச் சான்றில்லை.7 எனவே, திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு ஏற்படவில்லை என்று ஊகிக்க வேண்டியுள்ளது. இவ்வழக்கத்தைத் தெரிவிக்கும் முதல் கல்வெட்டு கி.பி. 958ஆம் ஆண்டுக்குரியதாகும்.8
  திருமண நாளன்று இரவே மணமக்கள் மணவறையில் கூட்டப் பெறுவர்.9 அங்கு மணமகள் கசங்காத புத்தாடையால் தன் உடல் முழுவதும் போர்த்துக் கொண்டிருப்பாள். சங்க காலத்துத் திருமண விழாவைப் பற்றிக் கூறும் அகப்பாட்டுகள் இரண்டிலும் புரோகிதன் ஒருவன் இடையிலிருந்து மணவினைகள் புரிந்ததாகச் செய்திகள் இல. ஆனால், கோவலன் கண்ணகியை மணந்தபோது ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி’யதாகவும் மணமக்கள் தீ வலம் செய்ததாகவும் இளங்கோவடிகள் கூறுகின்றார். சங்கக் காலம் முடிவுற்றுக் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குள் திருமணங்களில் பார்ப்பான் மணவினை செய்யும் வழக்கம் மக்களிடையே பரவிவிட்டதென இதனால் அறிகின்றோம்.
* * * * *
  1. தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பு 1.
    2.
    அகநானூறு 86, 136.
    3.
    அகநானூறு 86.
    4.
    சிலப்பதிகாரம் 1:47.
    5.
    புறநானூறு 127.
    6.
    சிலப்பதிகாரம் 4:50.
    7.
    சீவக சிந்தாமணி 3697.
    8. 5.1.
    பகுதி 13 எண்.144.
    9.
    அகநானூறு 136.
– வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் கே.கே.பிள்ளை :
தமிழக வரலாறு :மக்களும் பண்பாடும்
அட்டை-தமிழக வரலாறும் பண்பாடும்-கே.கே.பிள்ளை : attai_thamizhakavaralarum_panbaadum_k.k.pillai
படம்: நன்றி எசுடியெசு படமனை.
பெயர்- இ.பு. ஞானப்பிரகாசன் : peyar_name_i.bhu.gnanaprakasan