kotravai, keezhpasaar, dinamalar

திண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
 திண்டிவனம் அருகே, கீழ்ப்பசார்  ஊரி்ல், சிதிலமடைந்த சிவன் கோவிலைத் திருப்பணிக்காக தோண்டிய போது, 12 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. சிவன் கோவில் திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளது, கீழ்பசார் ஊர். இங்கு மிகவும் சிதிலமடைந்த நிலையில், சிவன் கோவில் உள்ளது.
  இக்கோவிலை மீளமைத்துத்  திருப்பணி செய்வதற்காக ஊர் மக்கள் தோண்டிய போது, தொல்லியல் ஆய்வாளர் கோ.உத்திராடம்  17 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார்.
  இக்கல்வெட்டில், ‘ஆடலம்பாக்கம் கரியமாணிக்கப் பெருமாளுக்கும், நாச்சியார் கமலவல்லி தாயாருக்கும் பகலில் விளக்கு எரிவதற்காகக் கொடை வழங்கியுள்ளனர். சூரியன், சந்திரன் உள்ளவரை இக்கொடை நடைபெற வேண்டும்; இதற்குத் தீமை செய்தால், கங்கைக் கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்திற்குப் போகக் கடவர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திரௌபதி அம்மன் கோவில் அருகில், 5 அடி உயரமுடைய கற்பலகையில் கொற்றவை சிலையும், குளக்கரையில், 5 அடி உயரமுடைய பெருமாள் சிற்பமும் இருப்பது, ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
  எருமைத் தலை மீது நேராக நின்ற கோலத்தில், எட்டு கரங்களுடன் கொற்றவை சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
  தலையைக் கரண்ட மகுடமும், கண்ணி மாலையும் அழகு செய்கின்றன. மான்  ஊர்தி(வாகனம்) பின்புறம் காணப்படுகிறது. வலப்புறத்தில் அடியவர் மண்டியிட்டு இரு கரங்கள் கூப்பி அன்னையை வழிபடும் நிலையிலும், இடப்புறத்தில் அடியவர் இடக் கரத்தில் கத்தி ஏந்திய நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம், கி.பி., 12 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
பெருமாள் சிற்பம் நேராக நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறது.
  மேற்கரங்கள் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ்வலக் கரம்  அருள் அளித்தும், இடக் கரம் தொடை மீது வைத்த நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடைகளும், அணிகலன்களும் அழகு செய்கின்றன. இச்சிற்பம், விசயநகரக் கலைப் பாணியைச் சார்ந்ததாகும்.
தினமலர் பங்குனி 27, 2047 / ஏப்பிரல் 09, 2016
dinamalar-name02