வைகோ : vaiko

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை (Budget) ! – வைகோ

 “நடுவண் அரசின் பொது நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நடுவண் நிதி அமைச்சர் அருண் செத்லி அளித்துள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவைதாம் இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.
பொருளியல் (economical) வளர்ச்சி 8.6 விழுக்காடு(%) இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது பொய்த்துப் போனது. பொருளியல் வளர்ச்சி 7.6 விழுக்காடு அளவுதான் எட்டப்பட்டு இருக்கிறது. பணவீக்க விகிதம் குறைந்தாலும் விலையினம் கட்டுப்படுத்தப்படவில்லை. இன்றியமையா உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. இணையத்தள வணிகம், முன் பேர வணிகம் போன்றவற்றால் பருப்பு விலை மூன்று மடங்கு உயர்ந்து போனதைத் தடுக்க முடியாத நடுவண் அரசு பருப்பு விலையைக் கட்டுப்படுத்த 900 கோடி உரூபாய் ஒதுக்கீடு செய்வது ஏமாற்று வேலை.
உழவர்களின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆக்கப் போகிறார்களாம். அந்த இலக்கை அடைவதற்கு முன்வைத்துள்ள திட்டங்கள் என்ன? கடந்த 13 ஆண்டுகளில் இந்தியாவில் இருநூறாயிரத்து ஐம்பதாயிரம் (2,50,000) உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மோடி அரசிலும் இதே நிலைமைதான் தொடருகிறது.
வேளாண்துறையைப் பெருவணிக (corporate)மயம் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நடுவண் அரசு வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கி உள்ள தொகை போதுமானது இல்லை. மரபுசார் வேளாண்மையை அழிக்கும் வகையில் மரபணு மாற்றுப் பயிர் (GM Crops) முறைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்போம் என்று தெரிவித்துள்ளது முரணாக இருக்கிறது.
உலக வங்கிக் கட்டளைக்கு அடிபணிந்து உரத்துக்கான மானியங்களை வெட்டியதால் வேதி(chemical)உரங்கள், உப்பு உர(urea) விலைகள் பன்மடங்கு உயர்ந்து விட்டன. இந்நிலையில் உர நல்கைத் தொகை உழவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனக் கூறுவது நடைமுறையில் இயலாதது.
இந்திய உருவாக்க(உற்பத்தித்) துறையில் பல கோடிப்பேருக்கு வேலைவாய்ப்பளித்து வரும் சிறு, குறு தொழில்துறை நலிந்து வருவதைக் காப்பாற்ற நடுவண் அரசு முனைப்பான நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு தொழில் நிறுவனங்களுக்கான உருவாக்க வரிவிலக்கு வரம்பு 1.5 கோடி உரூபாயிலிருந்து 5 கோடி உரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருந்தால் ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், 2 கோடி உரூபாய் என்று மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு 3 ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்படும் என்கிற அறிவிப்பு அயல்நாட்டு நிறுவனங்களுக்கு வசதியானது ஆகும்.
பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யவும் வங்கித் துறையை முற்றிலும் தனியார் மயமாக்கவும் தொடர் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காகவே பங்கு விலக்கல் துறையின் பெயர் ‘முதலீடு – பொதுச் சொத்துத் துறை’ என்று மாற்றப்படுகிறது.
பங்குச் சந்தையை மையப்படுத்தியும், அயலக முதலீடுகளை நம்பியும் இந்தியப் பொருள் உருளி(சக்கரம்) சுழன்று கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டில் 13,414 கோடி உரூபாய் அளவுக்கு அயல்நாட்டு முதலீடு வெளியேறி இருக்கிறது. ஆனால், பா.ச.க அரசு அனைத்துத் துறைகளிலும் அயலக முதலீட்டை விரிவுபடுத்தி வருகிறது. உணவுப் பொருள் உருவாக்கம் மற்றும் மருந்து உருவாக்கத் துறைகளில் 100 விழுக்காடு அயலக நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது.
தனியாள் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படாததால் மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இயக்கி ஊர்திச் சட்டத்தில் (Motor Vehicles Act) திருத்தம் கொண்டு வர நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது ஏற்கக்கூடியதில்லை.
நாட்டுப்புற மூத்த குடிமக்களுக்குக் காப்பீடு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத் தொழில் முனைவோருக்கு தேசிய மையம், சிறுநீரகத் தூய்மையாக்கப் (Dialysis) பொறிகளுக்கு உருவாக்க வரி நீக்கம், நில ஆவணங்கள் மின்னணுமயமாக்குதல் போன்ற சில வரவேற்கத்தக்கவை. இருந்தாலும் நடுவண் நிதிநிலை (budget) அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை”.
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan