தலைப்பு-குறளைத்தமதாக்கிக்கொள்ள வில்லை- சி.இலக்குவனார் : thalaippu_kuralaithamadhaakkikollavillai_S.Ilakkuvanar

தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை!
வள்ளுவர் தமிழகத்தில் தோன்றித் தமிழில் எழுதியிருந்தாலும் தமிழர்களாகிய நாம் இன்னும் அதனுடைய நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. தமிழர்கள் இன்னும் அதனை நல்ல முறையில் விளங்கிக் கொள்ளாததால்தான் தமிழ்ப்பற்று இல்லாதவர்களும் தமிழ்ப்பகைவர்களும் மக்கள் பகைவர்களும் அதனை இழித்தும் பழித்தும் கூறியும் அதனால் பெருமை பெற்றும் வருகிறார்கள். தமிழர்களாகிய நாம் அதனுடைய நெறிகளைக் கடைப்பிடித்து வந்தால் நாடும் நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் நன்மைஅடையத் துணைபுரியும்.
குறள்நெறி என்பது வள்ளுவர் நெறி. குறள் என்ற சொல்லுக்கு இன்று சிலருக்குஏன் உயர்ந்த சமயத் தலைவர்களுக்குக்கூடஉண்மையான பொருள் தெரியவில்லை. அவ்வாறு அறிந்து கொள்ளாமல் குறளைக்கும் குறளுக்கும் பொருள் புரியாமல் குறள் என்பது கோள் சொல்லக்கூடியது என்று கருதி மக்களிடத்தில் உரைத்தும் வருகிறார்கள்.
  மன்பதையில் சாதிப்பாகுபாடும் அரசியல் கட்சிகள் பாகுபாடும் வலிமை பெற்று நிற்கின்றன. பாகுபாடுகள், வேற்றுமைகள் அனைத்தும் மறைந்து எல்லாரும் இன்புற்று வாழ வேண்டுமானால் மக்கள் அனைவரும் குறள்நெறியைத் தம்முடைய வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும்.
பேராசிரியர் சி.இலக்குவனார்
குறள்நெறி (மலர்1 இதழ்18):
ஆவணி 17,1995: 1.9.64