தலைப்பு-சாதிகள் தமிழ்நாட்டிற்குப் புதியன-சி.இலக்குவனார் :thalaippu_chaadhigalthamizhnaattukku_puthiyanave!_S.Ilakkuvanar

சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே!
  சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே. சாதி என்ற சொல்லே தமிழன்று. இதுவே சாதி தமிழ் நாட்டில் தமிழரல்லாத வர்களால் புகுத்தப்பட்டது என்பதைத் தெற்றென அறிவிக்கும்.
  சாதி இங்குச் செல்வாக்குப் பெற நுழைந்த காலத்திலேயே தமிழ் நாட்டுப் பெரியோர்கள் அதனைக் கடிந்து வந்துள்ளனர். தொல்காப்பியர் காலத்தில்கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் கால்கொள்ளவில்லை. திருவள்ளுவர் காலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் வேர் கொள்ளத் தொடங்கியுள்ளன. அதனாலேயே வாழ்வியல் அறம் உரைத்த வள்ளுவர் பெருமான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” எனச் சாதிகளை வெறுத்து மொழிந்தார்.
  வள்ளுவர் பெருமான் காலத்திற்குப்பின்னரும் தமிழ்ச்சான்றோர்களும் சமய சாதி வேறுபாடுகளை வைத்து குலமும் ஒன்றே குடியும் ஒன்றே எனும் கொள்கையை நிலை நாட்ட முயன்றனர். ஆனால் சாதிகள் பெருகிக் கொண்டே வந்துள்ளனவேயன்றிக் குறைந்து மறைந்தபாடில்லை. சாதிமுறைகளை வெறுக்கும் சமயங்களில் கூட சாதி வேறுபாடுகளே தனியாட்சி புரிகின்றன. சாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட இயக்கங்களிலும் சாதி உணர்வு மேலோங்கி நிற்கக் காண்கின்றோம்.
பேராசிரியர் முனைவர்  சி.இலக்குவனார்