செவ்வாய், 29 டிசம்பர், 2015

மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்! – ஞா.கிருட்டிணப்பிள்ளை


(ஞா.கிருட்டிணப்பிள்ளை)
(ஞா.கிருட்டிணப்பிள்ளை)
மட்டக்களப்பு : mattakkalappu_batticaloa

மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்!

  “மட்டக்களப்புக்கு விடிவு காண வாருங்கள்” என்னும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் கிழக்கு மாகாண அவை உறுப்பினர் ஞா.கிருட்டிணப்பிள்ளை துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் விவரங்கள், கைப்பற்றப்பட்ட எமது மக்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றச் சிக்கல் ஆகியவற்றுக்கு நாம் முதன்மையாக முகம் கொடுக்கும் வேளையில், நிலையான அரசியல் தீர்வுக்கான நகர்வையும், எமது அரசியல் பயணத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற வகையில் தெரிவிக்காமல் செய்து வருகின்றோம் என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இன்ன நாள் கிழக்கு மாகாண அவை உறுப்பினராகவும் பதவி வகிக்கும் நான் இக்கால அரசியல் நீரோட்டத்தில் மாவட்ட முன்னேற்றத்திற்கான தமிழ் மக்களின் சிக்கல்களை மக்களின் கோரிக்கைகளுக்கும், அவர்களது தேவைகளுக்கும், அவர்களது உரிமைகளுக்கும் இணங்கச் செயற்பட வேண்டிய கட்டாயப்பாடு என் முன்னே நிற்கின்றது.
 தற்போதைய நல்லாட்சி அரசில் குடியரசுத்தலைவரால்  அளிக்கப்பட்ட வாக்குறுதியானது எந்தக் கட்சி மிகுதியான வாக்குகளை ஒரு மாவட்டத்தில் பெறுகின்றதோ அந்தக் கட்சிக்கு மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் பதவி வழங்கப்படும் என்பது.
  வாக்குறுதியின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கே மட்டக்களப்பு மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.
  தற்போதிருக்கும் மாவட்ட அரசுத் தலைவரை நீக்கிப் புதிய அரசுத்தலைவரைப் பணியமர்த்த வேண்டும்.
  மட்டக்களப்பு அரசுத் தலைவரைப் புதிதாகப் பணியமர்த்த வேண்டிய காரணம்:
  கடந்த ௪ (4) ஆண்டு காலமாகக் கூடுதலான தொகை மட்டக்களப்பு மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்டபோதிலும், முறைகேடான வேலை ஒப்பந்தங்களை வழங்கி, தரமற்ற வேலைகள் காரணமாகவும் பொருத்தமற்ற வேலைகள் காரணமாகவும், ஒழுங்கீனமான ஆளுமை காரணமாகவும், மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பயன் தராத பல அலுவலர்கள் நன்மையடைந்தனர்.
  இதே போன்று மாவட்டத்தின் வாழ்வடிப்படை நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வகையிலான பல பித்தலாட்டங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, மேய்ச்சல் தரை நிலம், கால்நடை வளர்ப்பு ஆகியவை பறிக்கப்பட்டன.
ஏழை மக்களினுடைய வாழ்வடிப்படை நிலங்கள் ஆயிரக்கணக்கில் பணக்கார முதலீட்டாளர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டன.
  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய தொகைகள் இன்னும் வழங்க வேண்டி இருக்கின்றன.
  இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் குடியேற்றப்படாமல் அவர்களுக்கான வசதிகள் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறார்கள்.
  கடந்த ஆட்சிக் காலத்தில் வெள்ளத் துயரீடுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகளும், துயரீட்டுப் பொருட்களும், கடந்த ஆட்சியில் அரசியலாளர்களாக இருந்தவர்களுக்கு, அவர்கள் அரசியல் செய்வதற்கு மாவட்ட அரசுத் தலைவரால் வழங்கப்பட்டன.
  தற்போது இடம்பெற்ற வெள்ளச் சேதம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட உழவர்களுக்குத் துயரீட்டு உதவி வழங்க வேண்டும்.
  வெள்ளச் சேத முகாமைப் பணிகள் யாவும் நடுவண் அரசின், மாகாணக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  ஆகிய இக்கோரிக்கைகளை முன்வைத்து, மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் மக்கள் அனைவரும், எதிர்வரும் ௨௮ (28) ஆம் நாள் காலை ௯ (9) மணிக்கு மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திற்கு வருமாறு அழைக்கின்றேன்!
இவ்வாறு அந்தத் துண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்திரை-டி.டி.என். செய்திmuthirai-ttn
தரவு : குபேரன்நகர் ஞானப்பிரகாசம்
ஞானப்பிரகாசம் : gnanaprakasam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக