101mottaikopuram

அறிவியலுக்கு அறைகூவலிடும்

நாட்டுப்புற நம்பிக்கைகளும் 

சிதைக்கப்பட்டு வரும் மொட்டைக்கோபுரமும்

  நாட்டுப்புற மக்களிடம் எண்ணற்ற நம்பிக்கைள் காணப்படுகின்றன. அனைத்தும் அறிவியல் சார்ந்தது எனக்கூறமுடியாது. இருப்பினும் பல நம்பிக்கைகள் அறிவியலின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. நாட்டுப்புற மக்கள் தாங்கள் அன்றாடம் வாழ்க்கையில் கண்ட சில கூறுகளை வைத்துக் காலத்தையும் நேரத்தையும் திசைகளையும் கணித்தனர். மழை, வெள்ளம், பனி, மின்னல், பூக்கள் பூப்பது, விலங்குகள் கத்துவது, பறவைகளின் ஒலி, முகில், காற்று, புயல் என வானவியல் முதலான அனைத்தையும் ஏதோ ஓர் அடிப்படையில் கணித்திருந்தார்கள். . அந்தக் கணிப்பு பொய்யாகவில்லை. அதே வேளையில் இவை அறிவியலுக்கு அறைகூவல்விடும் வகையிலும் அமைந்திருந்தன. தற்பொழுது மனிதனின் ஆணவத்தாலும், அரசின் செயல்பாடுகளினாலும் இயற்கைவளங்கள் சுரண்டப்பட்டு மலைகள் ஆறு, ஏரி, குளம், கடல் என அனைத்தையும் சிதைத்ததால் பருவநிலை மாற்றம் அடைந்து சித்திரை மாதத்தில் அடிக்கிற வெயில் ஆவணி மாதத்திலும், ஐப்பசியில் பெய்கின்ற அடை மழை சித்திரை மாதத்திலும் பொழிகின்றது. அவ்வப்பொழுது கடல் உள்வாங்குவது, கடல்நீர் வெளியேறுவது, கடல்கோள்(சுனாமி), நிலநடுக்கம் எனப் பலவித அச்சுறுத்தல்களை எதிர்நோக்க வேண்டிய காலத்திற்கு மனிதன் கட்டாயப்படுத்தப்பட்டான். விளைவு ஏராளமான பறவைகள், விலங்குகள், அரியவகை மூலிகை மரங்கள் இந்த நூற்றாண்டில் கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெறுகின்றன. காலத்தை எந்தக் கூறுகளால் கணித்தனர் என்று பார்க்கும்போது விடியற்பொழுது சீக்கிரமாகவும், மாலைநேரப்பொழுது நேரம் கழித்தும் ஏற்பட்டால் அதனைக் கோடைக் காலம் என அழைத்தனர். விடியற்காலை பொழுது நேரம் கழித்தும் அந்திப்பொழுது சீக்கிரமும் ஏற்பட்டால் அதை மழைக்காலம் என கணித்தனர். பனிப்பொழிவைக் கண்டுப் பனிக்காலம் என அழைத்தனர். மரத்திலுள்ள இலைகள் கொட்டிப் போவதை வைத்து இலையுதிர் காலத்தைக் கணித்தனர். மல்லிகைப்பூ, முல்லைப்பூக்கள் ஆகிய மலர்கள் மணத்தால் அறிந்து கோடைக்காலத்தை உணர்ந்தனர். முன்பனிக்காலத்தை வைத்து மார்கழி, தை மாதம் எனவும் பின்பனிக்காலத்தை வைத்து மாசி மாதமும் என அறிந்தனர். வெப்பத்தையும் பிரித்துப்பார்த்தார்கள். கொடிய வெப்பத்தை வைத்து வைகாசி மாதம் எனவும் கொடிய வெயிலின் தாக்கம் சிறிது குறையும்போது ஆனி மாதம் எனவும் மிதமான வெயிலை வைத்து ஆவணி மாதம் எனவும் கணக்கிட்டனர். வேகமாகக் காற்று அடித்தால் ஆடிமாதம் எனவும் அடை மழையை வைத்து ஐப்பசி மாதம் எனவும் கனமழையை வைத்து கார்த்திகை மாதம் எனவும் கணக்கிட்டனர்.
நேரம் கணக்கிடல்
   நிழலானது நீளமாக எதிர்ப்புறம் விழுமாயின் காலைநேரம் எனவும் நேரம் செல்லச் செல்ல நிழலின் நீளம் குறைந்து, பக்கத்திலேயே விழும் நேரத்தை நண்பகல் நேரம் எனவும் ஒருவரின் நிழல் பின்புறமாக விழுமாயின் மாலைநேரம் எனவும் அறிந்தனர். தாமரை மலர் மலர்ந்தால் பொழுது புலரும் நேரம் எனவும் அல்லி மலரும் நேரம் அந்திப்பொழுது எனவும் சூரியகாந்தி பூ நோக்கும் திசையை வைத்து நேரத்தையும் கணக்கிட்டனர்.
வானிலையியல் நம்பிக்கை
  தட்டான் தாழப்பறந்தால் மழை வரும், எறும்புகள் முட்டைகளைக் கொண்டு மேட்டில் ஏறினால் மழை வரும்; மாடுகள் கும்மாளமடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தால் மழை வரும்; பறவைகள் சிறகை உலர்த்திக்கொண்டு ஓட்டம் பிடித்தால் மழை வரும்; மழைக்காலங்களில் மழை விட்டவுடன் ஈசல் பறந்தால் மழை வரும்;. தவளைகள் இரவில் ஒன்று சேர்ந்து கத்தினால் மழை வரும். மழை பெய்வதற்கு அறிகுறியாக மண்வாசம் அல்லது மழை வாசம் வந்தால் மழை வரும். மழைக் காலங்களில் வெயில் வழக்கமான நிறத்தைவிட நல்ல மஞ்சளாக அடித்தால் மழை வரும். வடகிழக்கு மூலையில் கருத்திருந்தால் மழை வரும்;. முகில்கூட்டம் திட்டுத் திட்டாக ஆங்காங்கே இருக்கும்பொழுது காற்று அடித்தால் முகில் கலைந்து மழை வராது. புயல் வருவதற்கு முன் அமைதியாக இருப்பது. புயல் வரப்போவதை குறிப்பாக அமைகிறது.
  கொடிமின்னல் மின்னினால் வலுத்த ஓசையுடன் இடி இடிக்கப்போகிறது என்ற அச்சஉணர்வு ஏற்படும். சில உணர்வுகள் பின்னால் நடக்கப்போகும் ஒரு செயலை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பெரும்பாலும் இவ்வாறு வெளிப்படும் அறிவியலை உய்த்துணரும் அறிவியல் என்று அழைக்கலாம்.
மொட்டைக்கோபுரம்
   ஒவ்வோர் ஊரிலும் கோவில்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழ்ந்தாலும் அந்த ஊரில் மொட்டைக்கோபுரம் என ஒன்றை வடிவமைத்திருப்பார்கள். இதற்கு வரலாற்றுக்கதையும், புராணக்கதையும் ஒன்றையும் கூறுவார்கள். இந்த மொட்டைக்கோபுரத்தை இராயர் கோபுரம் எனவும் அழைக்கிறார்கள்.
  கிறித்து பிறப்பதற்கு 3000 வருடங்களுக்கு முன்னர் உயர்ந்த நாகரிகமும் கலைப்பண்பும் பெற்றிருந்தவர்கள் தமிழர்கள். அவர்கள் எழுப்பிய கலைக்கோயில்கள் தமிழத்தை உலக அரங்கில் இன்று வரை பறைசாற்றி வருகின்றன. கி.பி.1311 ஆம் ஆண்டு மாலிக்கபூர் தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுத்த கடைசிப் பகுதி தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு ஆகும். மாலிக்கபூரின் படைத்தலைவர்கள் முகமது மீரான், சஞ்சய்கான் இருவரும் கம்பத்தில் பதினைந்து ஆண்டுகள் கோட்டை கட்டி ஆண்டனர். இவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் சஞ்சய்கான் கிணறும், கெஞ்சினன் குளம் என்று தற்போது அழைக்கப்படும் சஞ்சய்கான் குளமும், முகமது மீரான் கட்டிய மொட்டை வீரன் கிணறுகள் பதிமூன்றும் கம்பத்தில் கோட்டைக்குள் ‘வாட்ச் டவர்’ என்னும் கண்காணிப்புக் கோபுரமும் மொட்டை வீர்ன் கோயில் என்ற பெயரில் இன்றும் காட்சிப்பொருளாகச் சான்றக உள்ளன. இந்தப் பகுதியை மொட்டைக் கோபுரம் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இதே போன்று மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக்கோபுரம், திருவரங்கத்தில் மொட்டைக்கோபுரம், மகாபலிபுரத்தில் மொட்டைக்கோபுரம் என ஒவ்வொரு பகுதியிலும் மொட்டைக்கோபுரம் உள்ளது.
  மொட்டைக்கோபுரத்தில் சிற்ப வேலையை விரிவாக்கம் செய்வது எளிது. தரை மட்டத்தில் 10 அடிச் சவுக்கம். மேலே நாலு அடிச்சவுக்கம். உயரம் 40 அடி;. கல்லால் மொக்கை மொழுக்கை என்று கட்டிய ஒரு கோபுரத்தை மொட்டைக் கோபுரம் என அழைக்கிறார்கள். இவ்வாறு பாதியில் நிறுத்தப்பட்ட கோபுரத்திற்கு புராணக்கதைகளையும், வரலாற்றுக் கதைகளையும் கூறிவருகிறார்கள். இந்தக்கோபுரம் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது போர் மூண்டதால் கோபுரப் பணி பாதியில் நிறைவடைந்ததாகவும், அதன்பின்னர் மன்னர் உயிர் நீத்தார் என்றும் கூறுகிறார்கள். இந்தக்கோபுரத்தை கட்டியபின்னர்தான் அரசனுடைய ஆட்சி முடிவிற்கு வந்தது என்று கூறுகிறவர்களும் உண்டு. இவ்வாறு கட்டப்பட்ட மொட்டைக் கோபுரத்தின் வழியாக மங்கல நிகழ்ச்சிகள், மங்கலமான விழாக்கள் நடத்தப்படுவதில்லை. இருப்பினும் அடுத்தவர்கள் பிறப்பியத்தை(சாதகத்தை)க் கணிக்கவும் விளம்பரப் பலகைகளை மாட்டுவதற்கும், கால்நடைகள் கட்டுவதற்கும் இந்த மொட்டைக்கோபுரங்கள் பயன்பட்டு வருகின்றன. அதே வேளையில் மொட்டைக்கோபுரம் என்பதைத் தீயகுணத்தின் குறியீடாக ஏற்றுக்கொள்ளாமல் இதுவும் ஒரு கட்டடக்கலை என்று கருதி, இக்கட்டடக்கலையை ஆய்வு மேற்கொண்டால் பல வரலாற்று எச்சங்கள் வெளிப்படும்.
  இவ்வாறு கட்டப்பட்ட மொட்டைக்கோபுரங்கள் பழந்தமிழர் கட்டிய கோயில்கள் அந்த அந்தக்காலத்தின் கலை வாழ்வுக்கு அழியாத சான்றுகளாக விளங்குகின்றன. தென்னிந்தியாவின் வரலாற்றை உருவாக்க உதவி செய்கின்றன. எனவே வரலாற்று ஆய்வாளர்கள் மொட்டைக்கோபுரம் என்ற பார்வையில் பார்க்காமல் இராயர் கோபுரம் என்ற பார்வையில் ஆய்வு மேற்கொண்டால் வரலாற்றின் எச்சங்கள் நமக்குப் பல கிடைக்கும்.
peyarvaigaianeesu_101