vaiko01

இலக்கண இலக்கிய வளமே இல்லாத

இந்தி மொழிக்கு

ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி

அறவே கிடையாது!

– வைகோ அறிக்கை

  பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளானால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைக்கும்.
  உலகத்தின் மூத்த உயர் தனிச் செம்மொழியான தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்கப்படும் தகுதி உண்டு என அரசியல் யாப்பு அவையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் முழங்கினார்கள்.
  இந்தியாவில் இதுவரை எந்த மொழியும் தேசிய மொழி என்று அறிவிக்கப்படவில்லை. இலக்கிய, இலக்கண வளமற்றதும், பல்வேறு மொழிகளின் கலப்பால் அண்மைக் காலத்தில் உருவானதுமான இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாகப் பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரசு ஆட்சி அரசியல் சட்டத்தின் 17-ஆவது பிரிவில் சேர்த்தது.
  அரசியல் சட்டத்தின் 17-ஆவது பிரிவில் உள்ள தேவநாகரி (இ)லிபியில் உள்ள இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழி என்று கூறியது. அரசியல் சட்டத்தில் 17-ஆவது பிரிவுக்கு நெருப்பு வைக்கும் போராட்டத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் 1963 இறுதியில் அறிவித்து 1964 இல் அரசியல் சட்டம் தீயிடப்பட்டுப் பலர் சிறைக்குச் சென்றார்கள்.
 1964 சனவரி 24 இரவில் கீழப்பழுவூர் சின்னச்சாமி இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து திருச்சி தொடரிநிலையத்தில் தன் மேனிக்குத் தீ வைத்து கருகி மடிந்தான். 1965 சனவரி 26-இல் இந்தி மொழிதான் இந்தியாவின் ஆட்சிமொழி என அரியணை ஏறியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த நாளைத் துக்கநாள் என அறிவித்தார். இந்தியை எதிர்த்துத் தமிழகத்தில் மாணவர் புரட்சி வெடித்தது. சிவலிங்கம், அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், சத்தியமங்கலம் முத்து, கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, பீளமேடு தண்டபாணி ஆகிய எட்டு தமிழர்கள் இந்தியை எதிர்த்து தீக்குளித்து மடிந்தனர்.
  மாணவர் கிளர்ச்சியை அடக்க இந்திய அரசின் இராணுவம் தமிழகத்தில் நுழைந்தது. பல இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எண்ணற்ற தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  1967 பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி தோற்கடிக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா முதல்வர் ஆனார். ‘தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை. தமிழும், ஆங்கிலமும் மட்டுமே பாடமொழிகளாக இருக்கும். மும்மொழித் திட்டத்தைத் தமிழகம் ஏற்காது’ எனச் சட்டமன்றத்தில் பறையறைந்தார்.
  இந்தி பேசாத மக்கள் மீது மத்திய அரசு இந்தியைத் திணிக்காது என்று பண்டித நேரு கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, மத்தியில் எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் இந்தியைத் திணிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய போக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்கே உலை வைக்கும் என்பதை மத்திய அரசு உணரவே இல்லை.
  1986-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் 17 ஆவது பிரிவைத் தீயிட்டு எரிக்கும் போராட்டத்தைத் தி.மு.கழகம் மேற்கொண்டது. நானும் அரசியல் சட்டத்தை எரித்து கைது செய்யப்பட்டேன்.
  பாரதிய சனதா கட்சி தலைமை தாங்கும் நரேந்திர மோடி அரசு, இந்தி வெறியர்களின் அரசாகி விட்டது. இந்தியைத் திணித்தே தீருவது என்று இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கிறது.
    இந்தச் சூழலில் இலலித்மோடி விவகாரப் புகழ்பெற்ற இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுசுமா சுவராசு, ஐ.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி மொழியை அறிவிக்கச் செய்ய ஐ.நா. உறுப்பு நாடுகளின் 129 நாடுகள் ஆதரவைத் திரட்டப்போவதாக அறிவித்திருக்கிறார்.
  ஆங்கில மொழி, இசுபானிசு மொழி, சீன மொழி, உருசிய மொழி, பிரெஞ்ச்சு மொழி, அராபி மொழி ஆகிய ஆறு மொழிகள்தான் ஐ.நா. சபையின் அலுவல் மொழிகளாக உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தி மொழியைச் சேர்க்க அதற்கு எந்தத் தகுதியும் கிடையாது.
  பழமையான செம்மொழியான தமிழுக்குத்தான் ஐ.நா. அலுவல் மொழியாகும் தகுதி உண்டு. காலத்தின் சாபக்கேடாக தமிழர்களுக்கு என்று ஒரு தனி அரசு இல்லாததால், தமிழை ஐ.நா.வின் அலுவல் மொழியாக்கும் வழியின்றித் தவிக்கிறோம்.
  இந்தி மொழி மட்டும் உள்ள இந்தியா வேண்டுமா? அல்லது இன்று இருக்கும் ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? என்பதை இந்தி வெறியர்களின் நடவடிக்கைதான் தீர்மானிக்கும்.
ஐ.நா.வின் அலுவல் மொழியாக இந்தியை ஆக்க முயலும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த விபரீத முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
வைகோ
 பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,‘தாயகம்’ சென்னை – 8
ஆவணி 17, 2046  / 03.09.2015