uraiyaasiriyargal_mu.vai.aravinthan_attai
பழைய உரைகள் வரலாற்றுக் கருவூலம்
  கடல்கோளுக்கும் நெருப்புக்கும் நீருக்கும் கறையானுக்கும் கல்லாத மக்களின் பொல்லாத அறியாமைக்கும் இரையாகி, கணக்கற்ற தமிழ்நூல்கள் மறைந்து விட்டன. அந்நூல்களின் சில பகுதிகளையும் பெயர்களையும் உரையாசிரியர்களே நமக்கு வழங்கிப் பேருதவி புரிந்துள்ளனர்… உரையாசிரியர்கள் தம் காலத்து மக்கள் நிலை,வாழ்க்கை முறை, நாகரிகம், பழக்கவழக்கம், பண்பாடு, அரசியல் போக்கு ஆகியவற்றை ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றனர். தமிழ்நாட்டு வரலாறு எழுதுவோர், பழைய உரைகள் வாயிலாகக் காலத்தின் குரலைக் கேட்கலாம்; வரலாற்று நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். வரலாற்று ஆசிரியர்கள் பழைய உரைகளைச் சிறந்த வரலாற்று மூலங்களாகக் கருதி அவற்றைக் கற்றுத் தெளிந்து, தமிழக வரலாற்றை உருவாக்க வேண்டும்.
பழைய உரைகள் ஆராய்ச்சி உலகத்தின் திறவுகோல்; இலக்கியம், இலக்கணம் கற்க முயன்று தளர்நடை பேடும் மாணாக்கனின் கைகளைப் பற்றி நடத்திச் செல்லும் தந்தை; அறிவு செழிக்குமாறு ஊட்டி வளர்க்கும்தாய்; காலத்தையும் இடத்தையும் கடந்து வந்து, விரும்பிய போதெல்லாம் அறிவு புகட்டும் பேராசான்.
– ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்: பக்கம்.62-63