kadavulkolgai
  தமிழ்நாட்டின் கடவுட் கொள்கை, தொன்மையானது. இக்கடவுட் கொள்கை, தமிழரிடம்தானாகப் பூத்ததேயன்றிப் பிறரிடமிருந்து வந்ததன்று. இயற்கைப் பொருள்களைப் பிறழ்ச்சியின்றி இயங்கச் செய்யம் பேராற்றலுடைய ஒரு பொருள் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாததாய், இத்தகையது என்று சொல்ல மாட்டாததாய் நிற்பதென்ற உண்மையைத் தமிழர் தாமாகப் பண்டே உணர்ந்தனர்; மனமொழி மெய்களைக் கடந்து நிற்கும் அதனைக் கடவுள் என்ற சொல்லால் குறித்தனர்; அஃது யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்பதென்பதை இறை என்ற சொல்லால் குறித்தனர்; அதுவே, ஒவ்வோர் உயிரிலும் உள் நின்று இயக்குவது என்பதை இயவுள் என்ற சொல்லால் குறித்தனர். எல்லாம் ஆற்றலும் உடைய அது, நாம் நினைத்த வடிவாகத் தம் ஊனக்கண்முன் எழுந்தருளிக் காட்சியளித்துத் தாம் வேண்டும் குறையை முடிக்கவும் வல்லது என அவர்கள் உணர்வு பெற்ற நாளே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாச் சிறப்புகளும் எய்தும் சிறந்த நாளாயிற்று. அந்த நாளும் இஃது என எட்டி அறியாத தொன்மை வாய்ந்தது எனலாம். நமக்கு இன்று கிடைத்திருக்கும் மிகப் பழைய நூலாகிய தொல்காப்பியத்திலேயே கடவுளைக் கண்ணால் காணும் முறையில் கடவுள் வழிபாடு நிகழ்ந்து வந்ததற்குச் சான்று பெறுகிறோமாதலின், அவ்வழிபாடு தொன்மையதென்பதற்கு எள்ளளவும் ஐயமே இல்லை.
-முனைவர் மொ.அ.துரை அரங்கசாமி: கந்தன் இனியன்: பக்கம்.11