புதன், 1 ஜூலை, 2015

இயற்கைப்பின்னணி தமிழுக்கே உள்ள சிறப்பு – நெ.சுப்பையா

sanganuulgal02

அக உணர்வுகளை இயற்கையோடு பின்னிப்பாடும் அருமை,

தமிழ் இலக்கியங்களுக்கே உள்ள சிறப்பு

  சங்க இலக்கியங்களை அகம் புறமென இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் அகமென்பது மனத்தின்கண்ணே நிகழும் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் சித்தரித்துக் காட்டும் பாடல்களையேயாம். அவை அகப்பாட்டு எனப்படும். இப்பாட்டில் சிறந்த மக்களைப் பற்றியே பேசப்படும். புறமென்பது புறத்தே நடக்கும் காரியங்களை விளக்கிக் காட்டும் பாடல்களையேயாம்; அவை புறப்பாடெனப்படும். தலைவன், தலைவியாகிய இருவர்பால் நிகழும் உணர்ச்சிகளைச் சொல்லோவியமாகக் கவின் பெறக் காட்டினார்கள் நம் சங்கத்துச் சான்றோர்கள். அகத்தே நிகழும் உணர்ச்சிகளை, இயற்கையோடு சேர்த்துப் பின்னிப் பாடும் அருமை, தமிழ் இலக்கியத்திற்கே சிறப்பாக அமைந்தது. வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை அகத்துறைப் பாட்டின் வாயிலாக நம் பண்டைப் புலவர்கள் நன்கெடுத்துக் காட்டியிருக்கிறார்கள். வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் உள்ள பல்வேறு தொடர்புகளை அணிபெற அமைத்துக் காட்டிய பெருமை தமிழகப் புலவர்க்கே உரியது. கங்கை நதிக்கரையிலும், நைல்நதிக்கரையிலும், டைபர் நதிக் கரையிலும், ஏகியன் (…) கடற்கரையிலும் தோன்றிய பெரும்புலவர்களும் இத்துறையில் நம் புலவர் பெருமக்கட்குச் சற்றுப் பிற்பட்டவரென்றே அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம். இயற்கையாகிய உலக அரங்கிலே மனித இனத்தின் நாடக வாழ்க்கை நடந்து வருகிறது. உலகமாகிய நாடக அரங்கிற்கு இயற்கையே பின்னணித் திரையாகக் காட்சி அளிக்கிறது. நிலத்தைக் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என ஐந்தாகப் பிரித்து, ஐவகை நிலங்களின் இயல்புகளையும் கூறி, அந்நிலங்களின் இயல்புகளுக்கேற்ற மன உணர்ச்சிகளையும் செவ்விதின் காட்டிய நம் புலவர் பெருமக்களின் பெருமைதான் என்னே.
– திரு.நெ.சுப்பையா (பிள்ளை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக