வெள்ளி, 8 மே, 2015

ஒருங்குகுறி தொடர்பான நடவடிக்கை : தமிழக அரசிற்குப் பாராட்டும் நன்றியும்!




ஒருங்குகுறி தொடர்பான நடவடிக்கை :
 தமிழக அரசிற்குப் பாராட்டும் நன்றியும்!
- இலக்குவனார் திருவள்ளுவன்

நாட்குறிப்பு :
நாள்  சித்திரை 21, 2046, திங்கள் மே 04, 2015
குருவாயூர் தொடர்வண்டியில் நாகர்கோயிலில் இருந்து சென்னை திரும்பல். தொடர்வண்டி  நண்பகல் உணவு ஒத்துக் கொள்ளாமல் வாந்தி, குமட்டல் உணர்வு.
  நடுப்படுக்கைக்காரர் படுக்க விரும்பியதால், கீழ்ப்படுக்கையில் அமர்ந்து படிப்பதை நிறுத்திப் படுத்துக்கொண்டேன். அலைபேசியைப் பார்த்தேன். இணைப்புக்குறி தெரிந்தது. பொறி நாக.இளங்கோவனிடம் பின்னம், குறியீடு தொடர்பான தெரிவுக்குழு கூடுவது தொடர்பாக அழைப்பு வந்ததா எனக் கேட்டேன். தான் இன்னும் திருச்சிராப்பள்ளியில்தான் இருப்பதாகவும் எந்த அழைப்பும் வரவில்லை என்றும் தெரிவித்தார். சேர்த்தியத்திற்கு ஒத்தி வைப்பு மடல் அனுப்பப்பட்டதா என வினவியதற்கு அது குறித்தும் எத்தகவலும் தெரியவில்லை என்றார்.
 அடுத்து இருந்தவரிடம் இன்றைய நாள் என்ன எனக்கேட்டேன். 4 என்றார். இன்றுதானே இறுதி நாள் என உணர்ந்து செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன்.
 29.05.15 அன்று கூட்டம் நடந்தது குறித்தும் கூட்ட  முடிவு குறித்தும் எவ்விவரமும் இல்லை என்றும் என் வலைப்பூ மூலம்தான் கூட்ட விவரம் அறிந்ததாகவும் தெரிவித்தனர்.
உடன் தமிழ்நாடு இணையக் கல்விக்கழகத்தினரிடம் தொடர்பு கொண்டேன்.
நிகழ்ச்சிப்பதிவு (minutes) குறித்துத் தெரிவிப்பது எங்கள் வேலை அல்ல என்றும் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தார்தான் தெரிவிக்க வேண்டும் என்றும் இயக்குநர் கருதுவதாகத் தெரிவித்தனர்.
இணையக் கல்விக்கழகமும் அமைப்பாளர் எனத் துணைவேந்தர் கூறியதைக் குறிப்பிட்டு, அவ்வாறு கூட்ட நிகழ் பதிவையும் முடிவையும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இயக்குநரகத்திற்கே உள்ளது என்று தெரிவித்தேன். இல்லவே இல்லை என மறுப்புதான் வந்தது. இயக்குநரிடம் தொடர்பு கொண்டேன். மணி ஒலித்தது  என்றாலும் எடுக்கப்படவில்லை.

  சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப்பேராசிரியர் முனைவர் பாலாசியிடம், கூட்டம் நடத்தியவர் என்ற முறையில் கூட்ட நிகழ்பதிவை அனுப்பிவிட்டீர்களா எனக் கேட்டேன். துணைவேந்தர் அனுப்புவார் எனவும் தன் வேலையல்ல என்றும் தெரிவித்தார். கூட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் துணைவேந்தர் மூலம் அனுப்புவது அவரது கடமை என்பதைத் தெரிவித்தும் துணைவேந்தரே எழுதி, நேரில் கொண்டுபோய்க் கொடுப்பதுபோல் பேசினார். அப்படிஎன்றால் துணைவேந்தரிடம் இது குறித்துத் தெரிவியுங்களேன் என்றதற்குத் தான் கோடை விடுமுறையில் வீட்டில் இருப்பதால் அவருடன் பேச இயலாது, அவரே பார்த்துக் கொள்வார் என்று பொறுப்புடன் கூறினார்.  தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் இணைந்து நடத்தும் வகையில்   திட்டமிடப்பட்டிருந்த கூட்டத்தை  வேறு இருவரிடம் ஒப்படைத்ததன் பயன் இது. ஒருவர்,  உடன் பணியாற்றுநரிடம் இது குறித்து ஒன்றும் தனக்குத் தெரியாது; அரசியலில் சிக்க விரும்பவில்லை; நான் ஓடிப்போகிறேன் எனக்கூறிவிட்டு வெளியூர் சென்று விட்டார். மற்றவரோ, விட்டேற்றியாக உள்ளார்.  எல்லாம் திட்டமிட்டுத்தான் நடக்கின்றது போலும்! இதுவே, முன்மொழிவை ஏற்றுக் கொண்டிருந்தால் உடனே மடல் பறந்து சென்றிருக்கும் என்பது புரிந்து கொண்டேன்.

 பல்கலைக்கழகம் விடுமுறையில் இருந்தமையால் எந்த எண்ணிற்கு அழைத்தாலும் மணியோசைமட்டுமே கேட்டது. துணைவேந்தரிடம்  பேசி எண்  தெரியாமையால் தொடர்பு கொள்ள இயலவில்லை. 
  செயலகத்துடன் மீண்டும் தொடர்பு கொண்டேன். கோப்புமுறையில் நடவடிக்கை எடுக்கக் காலவாய்ப்பு இல்லை எனவும் மிகக் குறைந்த நேரம் உள்ளமையால் செயலரின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டு சென்றால் மட்டுமே இன்றைக்கே நடவடிக்கை எடுக்க இயலும் என்றும் தெரிவித்தனர்.

உடன் செயலரிடம் தொடர்பு கொண்டேன். நல்ல வேளையாக இணைப்பு கிடைத்தது. முன்னரே அனுப்பிய கருத்துகள் வலைப்பூச் செய்தியை அவர் படித்திருந்தமையால் உடன் புரிந்து கொண்டார். எவ்வகைத் தகவலும் இணையக்கல்விக்கழகத்திடம் வராச் சூழலில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியதன் இன்றியமையாமையைத் தெரிவித்து வேண்டினேன். இன்றைக்கே ஒத்திவைக்குமாறு வேண்டி சேர்த்தியத்திற்கு மடல் அனுப்புவதாகத் தெரிவித்தார்.

உடன் பிரிவினரிடம் இது குறித்துத் தெரிவித்து அம்மடலின் படியை மத்திய அரசிற்கும் அனுப்புமாறு தெரிவித்தேன்.

  பொறி.நாக.இளங்கோவனிடம் பேசினேன். மீண்டும் பிரிவில் பேசுமாறு தெரிவித்தார். இப்பொழுது பேசுவது அவர்களின் பணிக்குக் குறுக்கீடாக அமையும் என்றும் நடவடிக்கை எடுப்பதாகக்  கூறியிருந்தால் விவரம் அறியப் பேசலாம் எனவும், ஆனால், செயலர் இன்றைக்கே மடல் அனுப்புவதாகத் தெரிவித்துள்ளதால் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கூறினேன்.  எனினும் வேறு சிலர் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றேன். நான் பயணத்தில் இருப்பதாலும் அவர் திருச்சியருகே சிற்றூரில் இருப்பதாலும் தொலைபேசி இணைப்புச்சிக்கல் இருப்பதால் மரு.இர.வாசுதேவனிடம் தொடர் நடவடிக்கை குறித்துப் பேசுமாறு கூறினேன்.

 உடன் நானும் மரு.இர.வாசதேவனிடம் பேசினேன். யாரைச் சந்திப்பது எனச் சிந்தித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
 சிறிதுநேரம் கழித்துப் பொறி.நாக.இளங்கோவன் பேசினார்.  மரு.இர.வாசுதேவன் முனைவர் பொன்னவைக்கோவிடம் பேசியதாகவும் அவர் கோபமாகப் பேசியதாகவும் கூறினார் என்றார். உடனே முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தமையால் முனைவர் பொன்னவைக்கோ கடுமையாகப் பேசி இருப்பார்; எனினும் சற்று நேரம் கழித்து  அவரே உதவுவார் என்றும்  கூறினேன்.

 தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு. சேகரிடம்  பேசி விவரம் தெரிவித்தேன். தன் முன் ஒருவர் (மரு.இர.வாசுதேவன்) இது குறித்துப் பேசிக் கொண்டிருப்பதாகவும் தான்  உடனே செயலகம் சென்று தொ.நு.செயலரிடம் நேரில்  தெரிவிப்பதாகவும் கூறினார். திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களிடமும் தெரிவிக்கக்  கூறினேன். "அவரையும் சந்தித்துத் தெரிவிக்கிறேன் அண்ணா" என்றார்.

 29.04.15 கூட்டத்தில் தமிழுக்கும் தமிழக அரசிற்கும் எதிராக எந்த நடவடிக்கை யையும் ஆதரிக்கக்கூடாது என முன்மொழிவிற்கு எதிராகக் கடுமையாகப் பேசிய உ.த.ஆ.நி.இயக்குநர்  முனைவர் விசயராகவனிடம் பேசினேன். அவரும் உடனே செயலரிடம் இது குறித்துப் பேசுவதாகத் தெரிவித்தார்.
  செயலரின் உதவியாளரிடம் இது குறித்துப் பேசியபொழுது இது குறித்துத்தான்  நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று கூறினார்.

முனைவர் கா.மு.சேகர் இன்றைக்கே ஒத்திவைப்பு வேண்டும் மடல் அனுப்பப் பட்டுவிடும் எனச்  செயலர் தெரிவித்ததாகப் பேசினார்.

 சற்று நேரத்தில், மரு.இர.வாசுதேவன் முனைவர் பொன்னவைக்கோ   ஒத்திவைப்புவேண்டும் மடல் அனுப்பப்பட்டுவிட்டது என த்தகவல் அனுப்பியதாகத் தெரிவித்தார்.

 பொறி.நாக.இளங்கோவனிடம் விவரம் தெரிவித்து, நாம் அமைதி காக்காமல் சேர்த்தியத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அறிய வேண்டும் என்றேன். இருவரும் இனி இது  தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்துப் பேசினோம்.

இப்பொருண்மையில் விவரம்அறிய, உரிய தொலைபேசி  எண்கள்அறிய,  இணைப்பு துண்டிக்கப்பட்டமையால் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள என மொத்தம் 44 அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்தேன். எனினும் ஓரளவு மனம் அமைதியுற்றது.

சித்திரை 22, 2046 செவ்வாய் மே 05, 2015

செயலர் தொடர்ந்து கூட்டங்களில் இருந்தமையால் பேச இயலவில்லை. பிறரிடம் தொடர்பு கொண்டு நேற்றே மடல் அனுப்பிய விரைவிற்குப் பாராட்டுடன் நன்றி தெரிவித்தேன்.தங்கள் கடமையைத்தான் ஆற்றியதாகக் குறிப்பிட்டனர். எனினும் இது தமிழ் காக்கும் பணி என்றும் பிற்பகல் 3.00 மணிக்கு மேல்  தெரிவித்தும் கடுவிரைவில் நடவடிக்கை எடுத்தது உண்மையிலேயே பாராடடிற்குரியது என்றேன்.
இரவு  திரு நூ.தூ.உலகசுந்தரம் அழைத்தீர்களா எனப் பேசினார். கருத்துரு தொடர்பான நிலைமையையும் நடவடிக்கை எடுத்த விவரத்தையும் தெரிவித்து, ஒருஙகுகுறி சேர்த்தியத்தின் வாயிலாக உண்மை அறியுமாறு கூறினேன். அறிந்து தெரிவிப்பதாகக் கூறினார்.

சித்திரை 23, 2046 புதன் மே 06, 2015
பொறி.நாக.இளங்கோவன் தகவல் பார்த்தீர்களா எனக் கேட்டார். முனைவர் நா.கணேசன் அனுப்பிய மடல்வழியாக, அரசின் மடல்கிடைத்த பின்புதான் சேர்த்தியத் துணைத்தலைவர் திரு. மைக்கேல் மடல் அனுப்பியுள்ளாரா? அல்லது அதனைப் பாராமல் விடையிறுத்தாரா எனத் தெரியவில்லையே என்றேன். மடல் சென்றதை மறைத்திருப்பார்கள் என்றார்.  அரசு மடல் சென்றபின்பே எழுதிய மடல் என்ற அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இருவரும் பேசினோம்.

உடன் த.தொ.செயலருக்கும் இ.க.கழக இயக்குநர்களுக்கும் மடல் அனுப்பினேன். இம்மடலில், 29.04.2015 கூட்டத்தில் சேர்த்தியக்கூட்டம் மே 15 எனத் தவறாகத் தெரிவிக்கப்பட்டமையும் ஒத்தி வைக்குமாறு எழுதினாலும் எழுதாவிட்டாலும் இரமணசர்மாவின் முன்மொழிவு ஏற்கப்படும் என்று  சிலர் கூறியதும்   திட்டமிட்டே சிலர் தமிழுக்கும் தமிழக அரசிற்கும் எதிராகச் செயல்படுவதை வெளிப்படுத்துவதைச் சுட்டிக்காட்டினேன்.   மத்திய அரசின் மொழிக்கணிமைக் குழு மூலம் நடவடிக்கை எடுக்கவும் பொறுப்பு அலுவலர் திருவாட்டி சுவரன் இலதா  அவர்களிடம்  பேசி வலியுறுத்துமாறும் (உடனடிகத்தகவலுக்காகத் தொலைபேசி,  தொலைப்பதவி, மின்வரி விவரங்களை இணைத்து) அதில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

சேர்த்தியக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இப் பொருண்மை யிலான கூட்டம் நாளைதான் நடைபெறுவதால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதையும் தெரிவித்தேன்.

பின்னர் பிரிவரினருடனும் துணைச் செயலர் திருவாட்டி மல்லிகா அவர்களிடமும்  பேசினேன். ஒருவேளை அரசு கருத்து ஏற்கப்படாமலிருந்தால் அதைத் தடுப்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதன் தேவை குறித்துக் கூறினேன். துணைச் செயலர் அவர்கள் உடனே செயலரின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும் தொலைபேசி வழியாகவும் மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு வலியுறுத்துவதாகவும் கூறினார்.

பொறி.நாக.இளங்கோவன் பேசினார்.  மரு.இர.வாசுதேவனும் முனைவர் இராம.கியும்  செயலரைச் சந்தித்து முறையிட இருப்பதாகவும் இவர்களுடன் தொடர்பு கொண்டு சந்திப்பு நேரத்தை அறிந்து இணையுமாறும் தெரிவித்தார். காய்ச்சல் விடலாம். ஆனால் தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருப்பதால் வெளியில் செல்ல இயலவில்லை என்றேன்.

மரு.இர.வாசுதேவனிடம் பேசினேன். "மடல் அனுப்பவுதால் பயனில்லை. நேரில் முறையிட வேண்டும்" என்றார். "வெறும் மடலால் மட்டும் பயனில்லாமல் போகலாம். ஆனால், சந்திப்பிற்கு முன் சிக்கல் குறித்து மடல் அனுப்புவது அவர்கள் சிக்கலைப்புரிந்து கொண்டு பேசவும் ஐயம் இருப்பின் தெளிவு படுத்தவும் வாய்ப்பாக இருக்கும்" எனவும் எனவே, அவர்கள் சந்திக்கும் பொழுது்  அதனை எளிமைப்படுத்த அனுப்பியுள்ள மடல் உதவும் என்றும் உடனடித்தகவலுக்காகத் தொடர்புகொள்ளவேண்டியவர்கள் பெயர், பேசி எண்கள் முதலானவிவரங்களைத்  தெரிவித்துள்ளதையும் கூறினேன்.

 முனைவர் கா.மு.சேகரிடம் இன்றைய நிலையைக் கூறித் தொடர்ந்து செயலரிடம் வலியுறுத்த வேண்டியதன் தேவையை எடுத்துரைத்தேன்.  உடன் தெரிவிப்பதாகக்  கூறினார்.

  பிற்பகல் துணைச் செயலரிடம் பேசினேன். இது தொடர்பிலான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டு வருதவாகவும் கவலைப்படவேண்டா எனவும் கூறினார்.

மரு.இர.வாசுதேவன்,  முனைவர் இராம.கி. ஆகியோர் செயலரைச் சந்தித்ததையும் அவர் கவனமுடன் கேட்டு,  குறிப்பு ஒன்றும் தருமாறு கூறியதையும் அறிந்தேன்.
மாலை 5.00 மணிக்குச் செயலகத்துடன் தொடர்பு கொண்டதில் செயலர் தொலைபேசிவழி தொடர்புகொண்டதும் மடல்அனுப்ப இருப்பதும்அறிந்தேன்.  பின் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் அறிந்து மகிழ்ந்தேன்.

சித்திரை 24, 2046 வியாழன் மே 07, 2015

காலையில் பொறி. நாக.இளங்கோவனிடம் நேற்றைய முயற்சிகளின் பயன்  குறித்துப்  பேசினேன்.
4 ஆம் நாள் மடல் இ.க.க. மடல் போல் சென்று பயனற்றுப் போயிருக்கும் என்றும் 6 ஆம் நாள் மடல் அரசின் செயலர் மடல் என்ற முறையில் பயனிருக்கும் என்றும் தெரிவித்தார். ஒத்திவைக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையே இருவருக்கும் இருந்தது.

திருவாட்டி சுவரன்இலதா அவர்களின் தொலைபேசி எண்ணிற்குப் பேசினேன். அவர் கூட்டத்திற்குச் சென்றுள்ளதாகவும்  அடுத்த நிலையில் உள்ளவரிடம் பேசினால் முழு விவரமும் அளிப்பார் என்றும் அவர் பெயர், எண விவரங்களையும்  தொலைபேசியை எடுத்த அதிகாரி  தெரிவித்தார். ஆனால், இரண்டாம் நிலையரின் மணி ஒலித்துக் கொண்டிருந்ததே  தவிர எடுக்கப்படவில்லை.  தொலைபேசி பழுதாக இருக்கலாம் அல்லது வேறிடம் சென்றிருக்கலாம். எனினும் தொடர் முயற்சியால்  தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று  நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிய வந்தேன்.

திரு நூ.த.உலகசுந்தரத்திடம் பேசினேன்.  சேர்த்தியத் தளம் மூலம் முடிவை அறியுமாறு வேண்டினேன். உடனே தெரிவிக்க மாட்டார்கள் என்றார்.  இரமணரின் மொழிவு ஏற்கப்பட்டால் உடனே அதை மணியானவர்கள் தெரிவிப்பார்கள் என்றும் தெரிவிக்காவிட்டால் ஒத்தி வைக்கப்பட்டதாக  உணரலாம் என்றும் கூறினேன்.
உத்தமம் தலைவர் முனைவர் வாசுஅரங்கநாதனிடம் தெரிவித்தால் அவர் விவரம்அறிந்ததும் தெரிவிப்பார் என்றார். அவ்வாறு அறிந்து தெரிவிக்குமாறு கூறினேன்.

செயலத்தில் உள்ள உரியவர்களிடம் நேற்றே நடவடிக்கை எடுத்த விரைவு முயற்சிக்காக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தேன்.  முன்னதாக நன்றிதெரிவிக்கும் மடலும் அனுப்பியிருந்தேன்.

சித்திரை 25, 2046 வெள்ளி மே 08, 2015

சூலை 20 அன்று தொடர்பிலான கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட மடலைத் திரு   நூ.த.உலக சுந்தரம் பகிர்ந்திருந்தார்.
இடைவெளி இளைப்பாறக் கிடைத்த ஓய்வு அல்ல. முனைப்பாகச் செயலாற்ற கிடைத்த காலவாய்ப்பு.
தமிழன்பர்களே புரியாமல் எதிரான கருத்தை ஆதரிப்பதைத் தடுக்கவும் தொடர்பில் இல்லாத தமிழன்பர்களுக்கு உரிய நிலையைப் புரிய வைக்கவும் கிடைத்த வாய்ப்பு.

இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
 (திருவள்ளுவர், திருக்குறள் 539)



- இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக