புகையில்லாப் பொங்கல்-விழிப்புணர்வுப் பரப்புரை

  தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையிலையில்லாப் பொங்கல் கொண்டாடப்படவேண்டும்; எனப் பேரூராட்சி நிருவாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தேவதானப்பட்டியில் நடைபெற்ற வாரச்சந்தையில் இதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை நாளன்று கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், ஆகியவற்றை எரிப்பது பழக்கமாக உள்ளது. மேலும் தற்பொழுது புதுமை மயமாக்கலில் உருளை, தேய்வை, ஞெகிழி, செயற்கைப் பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு மூச்சு நோய்களான இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் முதலான பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு தேவதானப்பட்டிப் பேரூராட்சிப்பகுதி கருப்பு நச்சுநகரமாக மாறிவருகிறது. நச்சுப்புகை கலந்த பனிமூட்டத்தால் சாலைப்போக்குவரத்து பாதிப்படைகிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் பழைய மரம், எருவறட்டி தவிர வேறு எதனையும் எரிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி நிருவாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்பாக விழிப்புணர்வு துண்டறிக்கைகள், விளம்பரப் பதாகைகள், உழுபொறிகள் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விழிப்புணர்வு செய்வதற்காகத் தேவதானப்பட்டிப் பேரூராட்சி நிருவாக அதிகாரி தலைமையில் மாவட்ட ஆட்சியர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோர் உத்தரவுப்படி வாரச்சந்தையில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் சென்றும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கும்   விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
vaigai anesu61