ஞாயிறு, 14 டிசம்பர், 2014

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு – வைகை அனிசு


57tractor_thevathaanappaati

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு

தேனி மாவட்டத்தில் வேளாண்பணிகளுக்கு உழுவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலும் அதனைச்சுற்றியுள்ள குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் முதலான பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் போதிய மழை பெய்யவில்லை. மேற்குமலைத்தொடர்ச்சியில் பெய்த மழை காரணமாக அணைகள், ஏரிகள், கண்மாய்கள், கிணறுகள் நிரம்பத்துவங்கியுள்ளன. இதனால் கடந்த மூன்று ஆண்டுகாலமாகத் தரிசாக கிடந்த நிலங்களை உழுது வருகின்றனர் உழவர்கள். நெல், கரும்பு, வாழை முதலானவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இதனால் வேளாண்பணிகளுக்கு உழுவைகள் தேவை மிகுதியாக உள்ளது. கடந்த பத்தாண்டுகள் வரை உழவு, அறுவடை செய்தல், பரம்படித்தல், நாற்றுப்பணிகளுக்கு மாடுகளைப் பயன்படுத்தி வந்தனர். இப்பொழுது மாடுகளைப் பயன்படுத்துவது அரிதாகிவிட்டது. இதனால் மாடுகளை விற்பனை செய்துவிட்டனர். அதன் பின்னர் இயந்திரத்தை நாடினார்கள். உழுவை பெரும்பாலும் 90விழுக்காட்டு வேளாண்பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. உழுபொறிகளை உழுவுதற்கும், பரம்படித்தல், அறுவடை செய்தல், நிலத்தைச் சமப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பொழுது ஒரு மணிநேரத்திற்கு 1000 உரூபாய் வீதம் உழுவைகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. அதே வேளையில் காளைமாடுகளைப் பயன்படுத்தினால் 4 மணிநேரத்திற்கு 700உரூபாய் வரை வாங்குகிறார்கள். ஆனால் வேலை சரியாக நடைபெறுவதில்லை. இதனால் உழுவைகள் பயன்பாடு பெருகி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உழுதொழில் நடைபெற வில்லை. இதனால் வங்கி மற்றும் தனியார்களிடம் கடன்வாங்கிய உழவர்கள் கடனைக் கட்டமுடியாமல் உழுவைகளை ஒப்படைத்துவிட்டனர். இப்பொழுது உழுவைகளின் தேவை அதிகமாக உள்ளதால் வெளிமாவட்டங்களில் இருந்து உழுவைகளைக் கொண்டுவந்து உழுதொழில் புரிகின்றனர்.
57vaigai aneesu_name



அகரமுதல 57

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக