தமிழ்த் தேசிய

முன்னோடிப் போராளி

இலக்குவனார்

சங்க இலக்கியம் வார ஏட்டின் மூலம் இலக்கியப் பணி ஆற்றுவதோடு நின்றுவிட வில்லை பேராசிரியர். ‘தமிழர்களின் தேசிய மொழி தமிழே ‘என்பதை உரைத்து வந்த பேராசிரியர் ‘சங்க இலக்கியம்’ இதழ் வாயிலாக வும் அதனை உணர்த்தினார். இந்தியம் என்றும் திராவிடம் என்றும் இல்லாத இயங்களைப் பிறர் இயம்பப் பேராசிரியரோ தமிழ்த்தேசியம் என்பதை வலியுறுத்தினார். இந்திய விடுதலைக்கு ஈராண்டுகளுக்கு முன்பிருந்தே
“உரிமை ஞாயிறு தோன்றுகின்றது. உறங்காதே தமிழா!
உன்றன் நாடும் உரிமைபெற்றிட உழைத்திடு தமிழா! 
என்று தமிழக விடுதலை உணர்வைப் பரப்பி னார்.
“தமிழரின்அரசைஆக்குவோம்! இனித்
தமிழகம் சிதைவதைத் தாக்குவோம்!
தமிழகம் உலகத்தின் தாயகம்! -இதைத்
தரணியோர் மதித்திடச் செய்குவோம்!’’
என்று தமிழகமே உலகத்தின் தாயகம் என்பதை உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என வலியுறுத் தினார். அதனை நம்மில் பெரும்பான்மையர் உணரத் தவறியதால் தான் தாய்மண்ணில் ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் சாகடிக்கப் பட்ட அவலம் நிகழ்ந்தது.
“தமிழா சிந்தனைசெய்! வீரத்தமிழா வீறிட்டெழு!  
முன்னை நிலையை உன்னிப்பார்!
நாடு- _ பரந்த தமிழகம் குறைந்ததேன்?
மொழி _ உலகாண்ட உன்மொழியை ஒடுக்குவதேன்?
வீரம் _ இமயம் கொண்ட ஏற்றம் எங்கே? 
ஆட்சி _ காவலனெங்கே?
வாணிகம் _ கப்பலோட்டிய கண்ணியம் எங்கே?
கொடை_- பெருந்சோறளித்த பெருமை தான் எங்கே?
தாய்மொழி உயரத் தாய்நாடு உயருமே!’
என மொழி, இனம், நாடு, பண்பாடு, கொடை, வணிகம், ஆட்சி எனப் பல வகையிலும் தனித்து விளங்கிய தமிழர்களின் பெருமையை நினை வுறுத்தித் தமிழ்த் தேசிய உணர்வைத் தட்டி எழுப்புகிறார்.
“அமுதம் ஊறும் அன்பு கொண்டு அரசு செய்தநாட்டிலே
அடிமை என்று பிறர் நகைக்க முடி வணங்கி நிற்பதோ?
இமயம் தொட்டு குமரி மட்டும் இசை பரந்த மக்கள் நாம்
இனியும் அந்தப் பெருமை கொள்ள ஏற்றம் யாவும் செய்குவோம்!’’
என இமயம் முதல் குமரிவரை வாழ்ந்த நாம் மீள்பெருமை பெற உழைக்க வேண்டுகின்றார்.
“தமிழ் ஆய்ந்த தமிழர்களே தமிழ்நாட்டின் தலைவர்களாய் விளங்கும் காலம்
இமிழ் கடல்சூழ் இவ்வுலகில் எவர்க்கும் நாம் பின்னடைந்து வாழ்தலில்லை!’’ எனத் தமிழர் களைத் தமிழர்களே ஆள வேண்டும் என்னும் தமிழ்த் தேசிய உணர்வை மலரச் செய்கிறார்.
இந்திய விடுதலைக்குமுன்னரே தமிழக விடுதலையை வலியுறுத்திய பேராசிரியர் அதற்குப் பின்னரும் மொழிவழித் தேசியக் கூட்டமைப்பையே வலியுறுத்தி வந்துள்ளார். தொடர்ந்து அவர் நடத்திய இதழ்களில் அதனை வலியுறுத்தி வந்ததற்குச் சான்றாக ஒன்றை மட்டும் பார்ப்போம். ‘திராவிடக்கூட்டரசு’ இதழில் (31.10.52) ‘மொழிவழி நாடுகள் முன்னின்று அமைப்போம்’ என்னும் தலைப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
“மொழி வழியாக நாடுகள் அமைய வேண்டு மென்று கூறுகின்றோம். மாகாணங்கள் அல்ல. இன்று சிலர் மொழிவழியாக மாகாணங்கள் அமைந்து தில்லி ஆட்சியின் அடிமையுறுப்பாய் இயங்க வேண்டுமென்று முயல்கின்றனர். ஆந்திரப் பிரிவினைக் கிளர்ச்சிக்காரர்கள் கூட ஆந்திர மாகாணம் தான் வேண்டுமென்றும் தில்லித் தலைமைக்குக் கட்டுப்பட்டுக் கிடப் போம் என்றும் தான் கூறி வருகின்றார்கள். அதை நாம் வெறுக்கின்றோம். தனி உரிமையுள்ள மொழிவழிநாடுகள் அமைய வேண்டுமென்று தான் நாம் கூறுகின்றோம். எங்கேயோ உள்ள தில்லிக்கும் நமக்கும் தொடர்பு எதற்காக? . . . . . .ஆகவே, மொழிவழி நாடுகள்அமைய முன்னின்று உழைப்போம். ஆனால் அந்நாடுகள் ஆரிய நாட்டாட்சியின் அடிமை மாகாணங் களாக இருத்தல் கூடாது’’
இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் உரைப் பதை அன்றைக்கே தொலைநோக்குடன் பேராசிரியர் உணர்த்தி உள்ளார். இந்த வகை யில் தமிழ்த் தேசிய முன்னோடிப் போராளியாகத் திகழ்கிறார் பேராசிரியர் எனலாம்.
52puthiyaparvai_ilakkuvanar_chirappithazh01