58-sekaran01

தன்னம்பிக்கையுடன் தொழில் செய்யும் மாற்றுத்திறனாளி

58vaigai aneesu
திண்டுக்கல் மாவட்டம், கே.சிங்காரக்கோட்டையைச்சேர்ந்தவர் சேகரன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இரண்டு கால்களும் செயல் இழந்துள்ள. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இக்குழந்தைகளைக் கெங்குவார்பட்டியில் உள்ள  ஏதிலியர் இல்லத்தில் படிக்க வைத்துள்ளார். இவர் கால்நடைகளான குதிரை,  மாடுகளுக்குக் குளம்பாணி(இலாடம்) அடிக்கும் தொழில் செய்து வருகின்றார்.  இத்தொழிலின் பொருட்டு இவர் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்குச் சென்று தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
  கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இயந்திரங்களின் பயன்பாடு அரிதாக இருந்தது. அப்பொழுது  வேளாண்மைக்குக் கால்நடைகள் பயன்படுத்தப்பட்டன. நிலத்தை உழுதல், பரம்படித்தல், சந்தைகளுக்குப் பொருட்கள் கொண்டு செல்லல், தோப்புகளில் உள்ள மாங்காய்,தேங்காய் போன்ற பொருட்களை எடுத்து வருதல் என அனைத்துப் பணிகளும் கால்நடைகளை மையப்படுத்தியே நடைபெற்றன. அதன்பின்னர் இயந்திரமயமானது. நிலத்தை உழுது பயிர் விதைத்து அறுவடை செய்து சந்தைப்படுத்துதல் வரை இயந்திரமயமானது. இதனால் கால்நடைகளின் தேவைகள் குறைந்தன.
58hoofed-shoe02
   மேலும் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் தைப்பொங்கலை ஒட்டி கால்நடைகளின் திருநாளான மாட்டுப்பொங்கல் அன்று கால்நடைகளின் கொம்புகளுக்கு  வண்ணம் பூசி கால்நடைகளின் கால்களில் உள்ள பழைய  குளம்பாணிகளை (இலாடங்களை) அகற்றிவிட்டுப் புதிய குளம்பாணி அமைப்பது வழக்கமாக வைத்திருந்தனர்.
  உழவர்களிடம் ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு கால்நடைகள் மட்டுமே உள்ளன. இக்கால்நடைகளை நம்பி மாற்றுத்திறனாளியான சேகரன் ஊர் ஊராகக் கால்நடைகளுக்குக் குளம்பாணி அடிப்பவர்கள் உதவியோடு சென்று  குளம்பாணி அடித்து வருகிறார்.
  இதன்  தொடர்பாகச்  சேகரன் கூறியதாவது: “கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் மாதவருமானத்தில் வரக்கூடிய பணத்தை வைத்து என்னுடைய வாழ்க்கையை நிம்மதியாகச் செய்து வந்தேன். தற்பொழுது கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் வருவாய் குறைந்தது. குழந்தைகளைப் படிக்க வைக்கவேண்டும் என எண்ணி கெங்குவார்பட்டியில் உள்ள  ஏதிலியர் குழந்தைகள் படிக்கும் ஆசிரமத்திற்கு அனுப்பிவிட்டேன். எனக்கு ஊனமுற்றோருக்கு வழங்கக்கூடிய சக்கர வாகனம் கொடுத்தால் மாற்றுத்தொழில் செய்யலாம் என எண்ணியுள்ளேன். ஒரு காளையின் நான்கு கால்களில்  குளம்பாணி அடிப்பதற்கு  உரூ.250 கூலியாகப் பெற்றுக்கொள்கிறேன். இதற்குத் தேவையான  தகடு, ஆணி போன்றவற்றைத் திண்டுக்கல்லில் இருந்து வாங்கி வருகின்றேன். அதற்கு  உரூ.200 வரை ஆகிறது. எனக்கு ஒரு மாட்டிற்குக் குளம்பாணி அடித்தால் 50 உரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மாடுகளுக்குக் குளம்பாணி அடிக்கும் வேலை கிடைப்பதே அரிதாகிவிட்டது. எனவே எனக்கு யாராவது அரசு சார்பில் வழங்கக்கூடிய மூன்று சக்கர வாகனம் அல்லது இயந்திரத்தோடு கூடிய வாகனத்தை கொடுத்தால் எனக்கு வருமானம் அதிகமாகக் கிடைக்கும் 
வாய்ப்புள்ளது” என்றார். 58hoofed-shoe01

அவருடய தொலைபேசி எண்-9345493917. உதவுகின்ற மனப்பான்மை உடையவர்கள் தொடர்புகொள்ளுங்கள்