புதன், 23 ஜூலை, 2014

பள்ளுபாடலுக்குத் துள்ளியாடுவோம்! – சொ.வினைதீர்த்தான்

பள்ளுபாடலுக்குத் துள்ளியாடுவோம்! – சொ.வினைதீர்த்தான்

nila-moon01
  சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க சிறப்பு கொண்டது பள்ளு இலக்கியம். 18 ஆம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கையைக் கம்பனின் கவிநயம்போல் இனிய கூறும் இலக்கியம் முக்கூடற்பள்ளு. இதன் சிறப்பு குறித்துத் திரு சொ.வினைதீர்த்தான் “பள்ளு இலக்கியம்-முக்கூடற்பள்ளு” என்னும் தலைப்பில், ஆனி 28, 2045 / 12.07.2014 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கியக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். காரைக்குடியில் ஒவ்வொரு திங்களும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை, சங்கத்தின் சார்ப்பாக இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2004 தொடங்கி நடக்கிற நிகழ்வில் எழுபத்து நான்காவது கூட்டமாகும் இது. காப்பியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், இலக்கண நூல் வரிசை அனைத்தும் பேசப்பட்டுத் தற்போது சிற்றிலக்கியங்கள் வரிசை தொடங்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியபுரம் மகரிசி வித்யா மந்திர் பள்ளி வளாக வகுப்பறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் ‘கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்’ “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி”, ‘காயக் கண்டது சூரிய காந்தி,’ என்று தொடங்கும் மூன்று பாடல்களே அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்துள்ளது. sunflower_girasoles01ஆனால், பிற பாடல்களின் அருமைகளையும் சுவைபட விளக்கி வினைதீர்த்தான் உரையாற்றினார். இணையப்பதிவுகள் மூலமும் தமிழ் இணையக் கல்விக்கழத் தளத்திலிருந்தும், புலியூர்க்கேசிகன் உரை மூலமும்பிற பாடல்களை அறிந்து விளக்கியதாக நன்றியுடன் தொடக்கத்திலேயே நினைவுகூர்ந்தார் அவர்.
  அவர் உரையில் மேலும் கூறிய செய்திகள் வருமாறு:
  பள்ளத்தில் பயிர் செய்த மருத நில மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இலக்கியம் பள்ளு இலக்கியமாகும். ஈழத்தில் எழுந்த 6 பள்ளு நூல்கள் உட்பட 35 பள்ளு நூல்களின் பெயர்கள் அறியப்பட்டுள்ளன. பள்ளு இலக்கியத்தில் தலை சிறந்த நூல் ‘முக்கூடற் பள்ளு’ ஆகும். இதில் கூறப்படுகிற காவை வடமலைப் பிள்ளை காலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்நூல் 1780 இல் பாடப்பட்ட நூல் என்று தெரியவருகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

pallu-kuuttam-vinaitheerththaan02
  பொருநை நதி, சிற்றாறு என்னும் சித்ராநதி, காட்டாறு ஆகிய மூன்று நதிகள் கூடுகிற இன்று சீவலப்பேரி என்று அழைக்கப்படுகிற முக்கூடல் ஊரில் கோவில்கொண்டுள்ள அழகருடைய பண்ணையில் வேலை பார்ப்பவன் வடிவழகக்குடும்பன். திருமாலைத் தொழாத பேரை இரண்டுகால் மாடெனவே கொழுவில் பூட்டி விரட்டி உழுவேன் என்று சொல்லும் தீவீரமான வைணவன். அவனுக்கு மாமன் மகள் மூத்த பள்ளி. அவன் கண்டு ஆசைப்பட்டு இரண்டாவதாகக் கட்டிக்கொண்டவள் மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி. சிவநெறி சார்ந்தவள்.
  இவர்களுடைய வாழ்வில் பயிரிடும் ஒருபோகத்திற்கான பயிர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் பதிவு இந்நூல். பலவகையான உழவுக் கருவிகள், பகல் உண்ட உணவு எந்த அரிசி என்று தெரியாத இக்காலத்தில் வியப்புடன் நாம் அறிய வேண்டிய அன்றிருந்த நெல்வகைகள், மாடுகள், அவற்றின் சுழிவகைகள், மீன் வகைகள் என நூலில் ஏராளமான செய்திகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.
pallu-kuuttam-vinaitheerththaan03
  மேலும் கீழ் வரும் சமுதாய, உளவியல் சிந்தனைகளை நூலிலுள்ள பாடல்கள் வழி ஆய்வுரையாகத் தொடர்ந்தார்.
pallu-kuuttam-vinaitheerththaan01
.
  1. பள்ளர்களைத் தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை
    2. ஆனாலும் தக்க வேளாண்மை மூலம் மைக்கடல் முத்துக் கீடாய் மிக்கநெல் உண்டாக்கும் தான் தூரப் போகச் சொல்லும் மக்களின் பக்கமே அழகர் என்றும், என்று அழகர் முக்கூடலுக்கு வந்தாரோ அன்றே அடியாராக வந்த பரம்பரை தன்னுடையது என்றும் பெருமிதம் கொள்ளும் குடும்பப் பள்ளன்.
  1. பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வருணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின் கண்காணியான பண்ணைக்காரனின் தாழ் நிலை.
  2. ஆண்டை,நாயனார் என்று பண்ணைகாரனை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி.
  3. வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக் காலில் கட்டையைக் கட்டித் தொழுவத்தில் அடைக்குமளவுக்குத் தண்டனை அளிக்கப் பண்ணைக்காரனுக்கு அதிகாரம் கொடுத்திருந்த அன்றிருந்த அரசியல் நிலை.
  4. விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும், சுவாமி கட்டளைகளுக்கும், பிறவற்றிற்கும் சென்ற நிலை.
  5. இரண்டு மனைவிகளின் சக்களத்தி மனச்சிக்கல்கள், அதனால் குடும்பத்தில் விளையும் துன்பம், அங்கு ஆணின் நிலை.
  6. அந்த மனைவியரிடையே எழும் பூசல் அவரவரின் கடவுளர் வரை சென்று கடவுளரையும் தூற்றல்.
  7. தூற்றலிலும் கடவுளைப் போற்றும் உளவியல்.
10. மக்கள் கடவுளர்களுக்கும்(மக்களாய்ப் பிறந்து கடவுளானவர்களுக்கும்) பிற கடவுள்களுக்கும்செங்கிடாவும் கள்ளும் படைத்தல்.
pallu-kuuttam-vinaitheerththaan04
  1. ஆணும் பெண்ணும் சேர்ந்து அலுப்பில்லாமல் செய்யும் உழவு வேலைகள்; இனக்கவர்ச்சியால் எழும் சிக்கல்கள்
.
  1. கம்பனுக்கு ஈடாகக் கவிநயத்துடன் முக்கூடல் பள்ளு ஆசிரியன் காண விரும்பிய கற்பனை நாடு.

சந்தமும், பண்ணும் அமைந்த நாடகப் பாடல்களின் சொல்நயமும் பொருள் நயமும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
pallu-kuuttam-vinaitheerththaan05
நண்பர்களைக் கீழ்க்கண்ட தளத்தில் நூலைப் படிக்க வேண்டி நன்றி தெரிவித்து உரை நிறைவுசெய்யப்பட்டது. http://www.tamilvu.org/library/libindex.htm
pallu-kuuttam-vinaitheerththaan06 
 [1. சொ.வினைதீர்த்தான் 2.திரு சொ.வினைதீர்த்தான் துணைவியார் திருமிகு அன்னபூரணியுடன்  3. சங்கத்தின் செயலர் திரு சனநேசனுடன் திரு வினைதீர்த்தான்4.சங்கத் தலைவர் திரு மாதவன் திரு வினைதீர்த்தானுக்கு நினைவுப்பரிசு வழங்குதல் 5.கற்றறிந்த ஆன்றோர் அவையினர் 6.கருத்துரைக்கும் பேரா. ஆறு.மெய்யாண்டவரும் முன்னிலை வகிக்கும் காப்பியக் கவிஞர் மீனவனாரும் உள்ள ஒளிப்படங்கள்.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக