சனி, 14 ஜூன், 2014

முதல்வர் அவர்களே! தமிழ்ப்பெயர்களே சூட்டுக!



  காவேரி (காவிரி என்பதே சரி.) முதலான சில தமிழ்ப்பெயர்களாவது சூட்டியதற்கு மகிழ்ச்சி. ஆறுகளின் பெயர்கள் எனக் கிருட்டிணா முதலான பெயர்கள் வைத்திருக்கலாம்.  வைகை முதலான தமிழக ஆற்றின் பெயர்களைச் சூட்டியிருக்கலாமே. தமிழில் யானைகளுக்குரிய பெயர்கள் தமிழ்மக்கள் விலங்கறிவியலில் - யானையறிவியலில் மிகச்சிறந்து உள்ளமையைக் காட்டும்.  தும்பி முதலான 45 பெயர்களைப் பிங்கல நிகண்டு (பா. 2412) கூறுகின்றது. நூல்களில் இருந்து யானையின்  பெயர்களைத் தொகுத்து விக்சனரி ‘ 170 பெயர்களைக் குறிப்பிடுகிறது. யானையின் உறுப்புகளின் பெயர்களும்   தமிழர்க்கிருந்த யானை அறிவியல் பிறருடன் ஒப்பிட இயலாத அளவு உயர்ந்துள்ளதைக் காட்டும். புதிய அறிவியல் தளத்தில் (http://www.newscience.in/articles/yanaiyiyal ) இவை குறித்து விரிவாகக் காணலாம்.   யானை வகைக்கே நூற்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கும் பொழுது யானைகளுக்கும் தமிழ்ப்பெயர் சூட்டுவதுதானே அழகாகும். முதல்வர் மக்களுக்குப் பெயர் சூட்டினாலும்,  விலங்குகள், பறவைகளுக்குப் பெயர் சூட்டினாலும் தமிழ்ப்பெயர்களே சூட்ட வேண்டும் என  வேண்டுகின்றேன்.  தமிழ்நாட்டவரும் தமிழர்களும் தமிழ்ப்பெயர் சூட்டாவிட்டால் யார்தான், தமிழ்ப்பெயர் சூட்டுவர். தமிழை மறப்பவர்களைத் தமிழர்களும் மறப்பர் என்னும் சூழல் உருவாகிவருவதை உணர்ந்தால், அயற்பெயர்களுக்கு இடம் இல்லாமல் போகுமல்லவா? தமிழ்ப்பெயர் சூட்டுவதால் அவரது மதிப்பு மேலும் உயரும் என்பதை  அவர் உணர வேண்டும்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்,  தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்



+++++++++

யானைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தார் முதல்வர் செயலலிதா








தமிழக முதல்வர் செயலலிதா ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பேணப்படும் ஆண் யானைக்கு நரசிம்மா என்றும், இரண்டு பெண் யானைகளுக்கு தேவி, காவேரி என்றும்; முதுமலை புலிகள் காப்பகத்தில் பேணப்படும் பெண் யானைக்கு நருமதா என்றும், இரண்டு ஆண் யானைகளுக்கு பாரதி, கிருட்டிணா என்றும் பெயர் சூட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக