ஞாயிறு, 6 அக்டோபர், 2013

வனத்தைக் காக்கப் பசுமைப் போராளிகள்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82038520131006011230.jpg

வனத்தை க் காக்க ப் பசுமை ப் போராளிகள்: கணித ப் பேராசிரியரின் முயற்சி

மாநிலம் முழுவதும், 2 இலட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக உருவாக்கி, அதன் மூலம் வனங்களை காக்கும் பணியில், ஈரோட்டை சேர்ந்த முன்னாள் கணித பேராசிரியர் ஈடுபட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும், 19,388 சதுர கி.மீ., காப்புக்காடாகவும், 2,183 சதுர கி.மீ., பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும், 1,306 சதுர கி.மீ., திறந்த வெளிகாடுகளாகவும் உள்ளது. வனங்களை பாதுகாக்க, இளைஞர் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில், ஈரோட்டை சேர்ந்த முன்னாள் கணித பேராசிரியர் ஈடுபட்டுள்ளார்.

ஈரோடு சி.என்.கல்லூரி முன்னாள் கணித பேராசிரியரும், கவுரவ வன உயிரின காப்பாளருமான கந்தசாமி கூறியதாவது: வனம், மலை, நதிகள், நம் மக்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்கள். தற்போது நதிகள் அனைத்தும், செத்து விட்டன. குற்றுயிரும், குலை உயிருமாக உள்ள வனங்களையும், மலைகளையும் காக்க, மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இளைஞர் சக்தியை ஒன்றிணைந்தால், வனங்களையும், விலங்கினங்களையும் மீட்டெடுக்க முடியும். ஈரோடு மாவட்ட வனத்துறை துணையோடு, மாணவ, மாணவியருக்கு, காடுகள், விலங்குகள், மலைகள் குறித்து கற்பித்து வருகிறேன். கர்நாடக மாநிலம் பந்திப்பூர், முதுமலை, ஊட்டி நேஷனல் பார்க், முக்கூர்த்தி, ஆனைமலை காடுகள், கொடைக்கானல் உள்ளிட்ட பல காடுகளுக்கு, மாணவர்களை அழைத்து சென்று, வனக்கல்வியை அளித்துள்ளேன். இதுவரை, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, வனக் கல்வியை கற்று கொடுத்தேன். நான்கு நாட்கள் நடக்கும் வனக்கல்வி முகாமில், தினமும், 5 கி.மீ.,க்கு மேல் நடந்தே பயணிப்பதால், வனப்பகுதி குறித்து, மாணவர்கள் எளிதாக கற்கின்றனர். வனங்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற, பல லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக மாற்ற வேண்டும் என்பதே என் லட்சியம். இவ்வாறு, அவர் கூறினார்.
- தினமலர் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக