ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சரக்கு மிதியூர்தி ஓட்டி வெற்றிக்கொடி நாட்டும் இளம்பெண்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_825534.jpg

சரக்கு  மிதியூர்தி ஓட்டி சாதிக்கும் இளம்பெண்


திருவள்ளூர் மாவட்டம், தண்ணீர்க்குளத்தை சேர்ந்தவர், செசிந்தா, 28; சரக்கு ஆட்டோ ஓட்டுநர். திருவள்ளூரில் இருந்து, கட்டட கருவிகள், மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை, தன் ஆட்டோவில் ஏற்றி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், துறைமுகம் என, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை நகரில், சர்வ சாதாரணமாக, சென்று வருகிறார்.ஆட்டோ ஓட்டுனர் என்பதோடு, 'குங்பூ' தற்காப்பு கலையை கற்றவர் என்ற மற்றொரு பரிமாணமும் ஜெசிந்தாவுக்கு இருக்கிறது.

அவரிடம் பேசியதில் இருந்து...

எவ்வளவோ தொழில்கள் இருக்க, ஆட்டோ ஓட்டுவதை தேர்ந்தெடுத்தது ஏன்?
எனக்கு சிறு வயதில் இருந்தே, வாகனங்கள் ஓட்ட ஆசை. என் தந்தை எனக்கு, 'பைக்' ஓட்டக் கற்றுக் கொடுத்தார். என் சித்தப்பா ஆட்டோ வைத்திருந்தார். அவருடன் ஆட்டோவில் செல்லும் போது, எனக்கும் ஆட்டோ ஓட்ட ஆவல் ஏற்பட்டது. ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து, ஓட்டுனர் பயிற்சி பெற்றேன்.

ஆட்டோ ஓட்ட வேண்டிய கட்டாயம்?
என் தந்தை, ரயில்வே துறையில் வேலை பார்த்தார். அவருக்கு மூன்று மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு நானும், என் அக்காவும்.நான் பிறந்த, ஆறு மாதத்திலேயே, என் அம்மா இறந்தார். தாய் முகத்தை பார்க்க முடியாத எனக்கு, என் தந்தை தான், தாயுமானவராக இருந்தார். அவருக்கு, 1998ம் ஆண்டு சிறுநீரகம் செயலிழந்தது. குடும்ப உறவுகள், சிறுநீரக தானம் கொடுக்க முன்வராத நிலையில், என், 17 வயதில், நான் தான் கொடுத்தேன்.எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, யாரும் உதவி செய்ததில்லை. எட்டாவது மட்டுமே படித்த நான், கூலி வேலைக்குச் சென்றேன். அதில் வரும் வருமானத்தை, அக்கா, பெரியம்மா வீட்டிற்கு செலவழித்தேன். 2010ல் என் தந்தை காலமானார்.ஆதரவளிக்க யாரும் முன்வராததால், கடந்த ஓராண்டாக தனியாக வசிக்கிறேன்.என் பெரியம்மா மகள் தேன்மொழி உதவியுடன், வங்கியில் கடன் பெற்று, ஆட்டோ வாங்கினேன்.

'குங்பூ' வித்தையை பயன்படுத்த வேண்டிய வாய்ப்பு கிடைத்ததா?
இதுவரை இல்லை. இனிமேலும் வராது என்று நம்புகிறேன். அந்தளவிற்கு எனக்கு யாரும் இடையூறு செய்யவில்லை. மாறாக, வாழ்த்தி, ஆதரவு கொடுக்கின்றனர்.

வாழ்க்கையில் உங்களது லட்சியம் என்ன?
சொந்த, பந்தம் இருந்தும் எனக்கு (அவர்கள்) தூரம் தான். உறவுகள் உதறியதால் தனி மரமான நான், நன்றாக சம்பாதித்து, சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னைப் போல், பெண் ஓட்டுனர்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்ற ஆவலும் உள்ளது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன். ஆட்டோ ஓட்டிச் செல்லும்போது, ஆச்சரியமாக பார்க்கும், பெண்கள், எனக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். அவர்களிடம் என் கருத்தை கூறி வருகிறேன்.


பெண்கள் எப்போதும், ஆண்களை சார்ந்திருக்கும் நிலை மாற வேண்டும். அதற்கு உதாரணமாக திகழ நான் விரும்புகிறேன். குடும்பத்தில் கஷ்டம், வாழ்க்கையில் விரக்தி, உறவுகளில் விரிசல் என சோர்ந்து போகாமல், துணிந்து இறங்கினால் வெற்றி சாத்தியமே...! 

செசிந்தா,  மிதியூர்தி ஓட்டுநர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக