புதன், 16 அக்டோபர், 2013

தேர்வாணைய மொழியா தமிழ்?

தேர்வாணைய மொழியா தமிழ்?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - நான்காம் நிலைக்கான வினாத்தாளில் மாணவர்களுக்கான அறிவுரைகள் பகுதியில் 12-ஆம் அறிவுரையாக ""101 முதல் 200 வரையிலான வினாக்களில் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளே முடிவானதாகும். For Question No.101-200 in all matters and in cases of doubg the English version is final' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவுரை தமிழ் மொழியைச் சிறுமைப்படுத்துவதாகவே உள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகுதான் முடிவு செய்யப்படுகின்றன. துறை சார்ந்த பேராசிரியர்களால் நன்கு கவனமாகத்தான் வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. ஓரிரு அச்சுப் பிழைகளைத் தவிர வினாத்தாளின் உள்ளடக்கத்தில் பிழை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. இந்த அறிவுரை அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் வினாக்களின் மொழி பெயர்ப்பில் ஏற்படுகின்ற பிரச்னைகளைச் சுட்டிக்காட்டுவதற்காக உள்ளது என்று வைத்துக் கொண்டாலும், அறிவியல் வினாக்கள் பெரும்பாலும் அரசு வெளியிட்டுள்ள பாடநூல்களில் இருந்துதான் கேட்கப்படுகின்றன. அரசு வெளியிடுகின்ற பாடநூல்களும் பல கட்ட பரிசீலனைகளுக்குப் பின்தான் வெளியிடப்படுகின்றன. எனவே மொழி பெயர்ப்பு சம்பந்தமான பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அப்படி ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும் வினாத்தாளை இறுதி செய்வதற்கு முன் தமிழ் மொழியில் உள்ள பாடநூல்களுடன் ஒப்பிட்டு சரி செய்து விட முடியும். மிகப் பெரும் வலைப் பின்னலுடன் கூடிய கட்டமைப்பைக் கொண்ட தேர்வாணையத்தால் இதுபோன்ற சிக்கல்களைத் தேர்வுக்கு முன்னதாகவே சரி செய்து விட முடியும்.
வினாத்தாளில் வெளியாகின்ற கேள்விகள் தமிழ் மொழியில் சரியாக இருந்து ஆங்கில மொழியில் தவறுகள் இருந்தால் அப்போது இந்த அறிவுரை எந்த அளவில் கவனத்தில் கொள்ளப்படும்? ஆங்கில மொழியில் உள்ள கேள்விகளில் பிழையே ஏற்படாதா? தமிழ் வழியில் கல்வி பயின்ற ஒருவர் கேள்வித்தாளுக்கு விடையளிக்கும்போது ஒவ்வொரு முறையும் ஆங்கில வினாவையும் படித்துப் புரிந்து கொண்டு இரண்டு வினாக்களும் ஒரே பொருளுடையன என்று உணர்ந்து பின்தான் விடையளிக்க வேண்டுமா? ஆங்கில வழியில் பயின்று தமிழ் தெரியாத ஒருவர் ஆங்கில வினாவை மட்டும் படித்து விடை எழுதினால் போதுமா? இந்தத் தேர்வுகளில் பொதுத் தமிழைப் போலவே, பொது ஆங்கிலமும் ஒரு பாடமாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழே தெரியாத ஒருவர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதுபவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைவிட அதிகம் என்பது நிதர்சனமான உண்மை.
தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் பெருக்கெடுத்து ஓடுவதால் அரசே ஆங்கில வழிக் கல்வியை அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதனால் தமிழ்மொழி, கல்வியைப் பொறுத்தவரை படிப்படியாக இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. தேர்வாணையமும் ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தி தமிழைச் சிறுமைப்படுத்துவதால் வேலைவாய்ப்பிலும் தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. ஒரு மொழி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முக்கியத்துவத்தை இழந்து விடும்போது அதன் வளர்ச்சி எப்படி சாத்தியம்? அதன் இருப்பே கேள்விக்குறியாக இருக்கும்போது செம்மொழி அந்தஸ்து பெற்றிருப்பதால் என்ன பயன்?
இன்றைய உலகில் வேலைவாய்ப்புக்கு ஒரு மொழி உதவும் என்றால் அதைக் கற்றுக் கொள்வதற்கும் அதற்காக மெனக்கெடவும் பலர் தயாராக இருக்கிறார்கள். சீனர்கள் ஆங்கிலம் கற்று வருவதே இதற்கு சான்று. நம்நாட்டிலும் பலர் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜப்பானிய மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள்.
தமிழ் மட்டுமே தெரிந்தவரோ, ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவரோ அரசுப் பணிக்கு வருவதை விட தமிழும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள் வருவதை வரவேற்கலாம். அதற்காக தேர்வுப் பாடத் திட்டத்தில் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்று இருப்பதை மாற்றி 50 வினாக்கள் தமிழுக்கும் 50 வினாக்கள் ஆங்கிலத்திற்கும் ஒதுக்கலாம். மொழிப் பாடங்களில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் மட்டும் பெற்றால் போதும் என்று வைத்துக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது மொழிப் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களைத் தவிர்த்து விடலாம். வங்கித் தேர்வுகளில் ஆங்கிலப் பாடத்துக்கான மதிப்பெண்கள் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொறியியல் பட்டதாரிகள் பலரும் தற்போது அரசுத் தேர்வுகளை எழுதத் தயாராகி வருவதால் ஆங்கிலத்திற்கான கொடி உயரே பறப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். மொழிப் பாடத்தைத் தேர்வு செய்யும் போது "இது அல்லது அது' என்ற வாய்ப்பும் பொது அறிவு வினாக்களில் ஆங்கில மூலமே இறுதியானது என்ற அறிவுரையும் தமிழைப் படுகுழியில் தள்ளிவிடுவதற்கு போதுமானவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக