புதன், 16 அக்டோபர், 2013

காலை மட்டுமே இழந்தார்! நம்பிக்கையை அல்ல!

காலை மட்டுமே இழந்தார் நம்பிக்கையை அல்ல




































இரண்டாண்டுகளுக்கு முன்பு, ரயில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ரயிலில் இருந்து வீசப்பட்ட வாலிபால் வீராங்கனை அருணிமா சின்கா என்பது வெறும் செய்திதான்.
ஆனால், அதன்பிறகு அவரது உயிரைக் காப்பற்ற வேண்டும் என்பதால் ஒரு காலை வெட்டி எடுத்தனர் மருத்துவர்கள். உயிருக்குப் போராடிய அருணிமா சின்கா, பல்வேறு சிகிச்சைகளைத் தொடர்ந்து வீட்டுக்குத் திரும்பினார்.
சிகிச்சையில் ஒரு காலை இழந்துவிட்டாலும் மனோதைரியத்தை இழக்காத அருணிமா, கிரிக்கெட் விளையாட்டு வீரர் யுவராஜ் சிங், தனக்கு வந்த புற்றுநோயை எதிர்த்து போராடி வெற்றி பெற்றதை முன்னுதாரணமாக கொண்டு, செயற்கைக் காலை பொருத்திக் கொண்டு உத்தரகாசியில் டாடா ஸ்டீல் அட்வென்சர் பவுண்டேஷன் நடத்தும் மலையேறும் பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெற்று உலகின் மிக உயரமான இமயமலை மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
அருணிமா சின்கா, இமயமலை மீது ஏறி சாதனை படைத்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி என்று செய்திகள் வெளியாகும் போது அது ஒரு சாதனையாக மாறியது. ஒரு செய்தியில் இருந்து சாதனை வரை சென்ற அருணிமா, பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
அவர் தனது காலை இழந்த ஒரு சில நாட்களிலேயே, இமயமலை ஏறுவது குறித்து கனவு கண்டிருக்கிறார். இது நம்மால் முடியுமா... எழுந்து நிற்க முடியாதே என்று அழ வேண்டியவர், இமயமலை ஏறும் கனவை கண்டதன் பலன்தான் இந்த சாதனை. இதனை நமது பெண்கள் செய்தாலே பல பிரச்னைகளை எளிதாகக் கடந்து வந்து விடலாம்.
இந்த சாதனையை இவரால் எப்படி நிகழ்த்த முடிந்தது? தன் அனுபவத்தை அருணிமாவே கூறுகிறார்:
""என்னுடைய கால்களில் ஒன்றை எடுக்க வேண்டுமென்று டாக்டர்கள் கூறியபோது என் மன உறுதியை நான் இழக்கவில்லை. என் குடும்பத்தினர் என்னுடைய நிலையைக் கண்டு கவலை அடைந்தனர். மருத்துவமனையில் இருந்தபோதே இமயமலை பற்றிய கட்டுரையொன்றைப் படிக்க நேர்ந்தது. என்றாவது ஒருநாள் இமயலை சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டுமென்று முடிவெடுத்தேன். இது தொடர்பாக ஏற்கெனவே இமயமலை ஏறிய முதல் இந்தியப் பெண்மணி பச்சேந்திரிபால் என்பவரை மருத்துவமனை படுக்கையிலிருந்தபோதே தொடர்பு கொண்டேன். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் அவரை சந்திக்கும்படி கூறினார். அப்போதே என்னுடைய கனவு நனவாகுமென தீர்மானித்தேன்.
2012-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பச்சேந்திரி பால் மூலம் பயிற்சி பெறத் தொடங்கினேன். துவக்கத்தில் சிறிது சிரமமாக இருந்தாலும் என்னுடன் பயிற்சி பெற்றவர்கள் விரைவாக மலையேறுவதைப் பார்த்தபோது அதுவே எனக்குள் பெரும் தூண்டுதலை அளித்தது. அதே வேளையில் எனக்கு பொருத்தப்பட்ட செயற்கை கால் பிரச்னை கொடுத்தது. அடிக்கடி ரத்தம் கசியத் தொடங்கியது. வலது காலும் வீங்கத் தொடங்கியது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. இந்நிலையில் பச்சேந்திரி பால் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார்.
இமயமலை அடிவாரத்தை அடைந்தவுடன் என் மனதில் நம்பிக்கை வளர்ந்தது. மார்ச் 31-ம் தேதி மலையேறத் தொடங்கினேன். 52 நாட்கள் கழித்து இமயமலை உச்சியை அடைந்தபோது என்னுடைய சாதனையை என்னாலேயே நம்ப முடியவில்லை. என்னுடைய பயணம் சிரமமாக இருந்தாலும் த்ரிலிங்காக இருந்தது.
"டெத் ஸோன்' பகுதியில் ஏறும்போதுதான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் மனதில் பயத்தை ஏற்படுத்தியது. ஒரு அடி தவறினாலும் மரணம்தான். ஒரு சில இடங்களில் பனியில் உறைந்து கிடந்த மனித உடல்களைப் பார்த்தேன். மனதில் கிலி ஏற்பட்டாலும் ஏறியே தீர்வது என்ற உறுதி ஏற்பட்டது. ஆனாலும் மலை ஏறுபவர்களுக்கு வரும் உடல்நலக் குறைவு எனக்கும் வந்தது. சிலிண்டரில் ஆக்சிஜன் சிறிதளவே இருந்தபோது திரும்ப செல்வதற்கு அவசர உதவி கேட்கும்படி சிலர் அறிவுறுத்தினர். ஆனால் பயணத்தைக் கைவிட எனக்கு மனமில்லை.
மே 21-ம் தேதி 10.55 மணியளவில் உலகின் மிக உயரமான இமயலை உச்சியில் எங்கு இருக்க வேண்டுமென்று நினைத்தேனோ அந்த இடத்தில் நின்றிருந்தேன். இந்திய தேசியக் கொடியை ஏற்றியபோது உண்மை என்னைத் திணறடித்தது.
நம்முடைய சமூகம் இன்னும் பெண்களுக்கு சுதந்திரமளிக்கத் தயாராக இல்லை. என்னுடைய சிறுவயதிலேயே இதை அனுபவித்துள்ளேன். ஹாக்கி பயிற்சிக்காக செல்லும்போதும் என்னுடைய ட்ராக் சூட்டைக் கண்டு கேலி செய்தவர்களும் உண்டு. சிறுவயதிலேயே எனக்கு நடந்த திருமணம் 20 நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அந்த சூழ்நிலையிலும் இப்போதும் என்னுடைய குடும்பத்தினர்தான் எனக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.
ரயிலில் நடந்த சம்பவம் தொடர்பாக உ.பி. போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக எனக்கு உதவி செய்தவர்களை விசாரணை என்ற பெயரில் மிகவும் கொடுமை படுத்தினர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு உண்டு என்பதை நான் நம்புகிறேன். அந்த கனவை நனவாக்க முழு முயற்சி தேவை. ஏதாவது தவறு நடந்தால் பெண்கள் அதற்காக ஒரேடியாக உடைந்து போகாதீர்கள். எதுவாக இருந்தாலும் எதிர்த்துப் போராடும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்'' என்று அனைத்து பெண்களுக்கும் ஊக்கம் அளிக்கிறார் நமது அருணிமா சின்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக