ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

அ.) கணவருக்குத் துணையாக வருமானம் ஈட்டினேன் ஆ.)ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது!

கணவருக்கு த் துணையாக வருமானம் ஈட்டினேன்!

வீட்டின் எதிர்கால தேவையை ப் பூர்த்தி செய்ய, ஊறுகாய் தொழிலில் சுயமாக சாதித்து காட்டிய, விஜயலட்சுமி: நான், சென்னை, முகப்பேர் பகுதியை சேர்ந்தவள். குழந்தைகள் வளர்ந்ததும், அவர்களின் படிப்பு, எதிர்காலம் பற்றி யோசித்தேன். அந்த யோசிப்பு தான், எதிர்கால வாழ்க்கை பற்றிய ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், எதிர்கால குடும்ப தேவையை பூர்த்தி செய்ய, கணவருக்கு துணையாக வருமானம் ஈட்ட, 10ம் வகுப்பு மட்டுமே படித்த நான், வழி தேடினேன். "அம்மா, வீட்டுலயே போடுற ஊறுகாய் இருந்தா, ஒரு பிடி சாதம் அதிகமா உள்ள போகும்' என, நான் செய்யும் ஊறுகாயின் சுவையை, என் பசங்க பாராட்டுவாங்க. பசங்க பாராட்டையே முதலீடாக வைத்து, ஊறுகாய் செய்யும் தொழிலை, சிறிய அளவில் ஆரம்பித்தேன். அதிக, "ரிஸ்க்' எடுக்காம, 10 கிலோ மாங்காய் ஊறுகாய் போட்டு, தெரிந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு, விற்க ஆரம்பித்தேன்.
ஊறுகாயின் தரமும், சுவையும் நன்றாக இருப்பதால், "ஆர்டர்' கொடுத்து வாங்கும் அளவிற்கு விற்பனை அதிகரித்தது. அதனால், 10 ஆயிரம் முதலீட்டில் தொழிலை விரிவுபடுத்தினேன். காலம் செல்லச் செல்ல மாத வருமானம், 15 ஆயிரமாக உயர்ந்தது. வருமானம் அதிகரிக்க, இஞ்சி, நார்த்தங்காய், எலுமிச்சை, மாந்தொக்கு, ஆவக்காய் என, வகை வகையாய் ஊறுகாய்களை தயாரித்தேன். அவசர சமையலுக்கு தேவைப்படும், "தொக்கு' வகைகள் தேவை என, பல வாடிக்கையாளர்கள் கேட்டனர். எனக்கு இவற்றை செய்ய தெரியாது எனினும், தொக்குகள் எப்படி செய்வது என, முறையாக பயிற்சி பெற்று, அதிலும் சாதித்தேன். தற்போது, புளியோதரை பேஸ்ட் வகைகளையும் தயாரித்து விற்கிறேன். சுவையும், தரமும் இருந்தால், இத்தொழிலில் பாதிக்கு பாதி லாபம் ஈட்டி வெற்றி பெறலாம். அதனால் தான், குடிசை தொழிலாக ஆரம்பித்த நான், இன்று இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறேன். தொடர்புக்கு: 98407 03615.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது!

பள்ளி மாணவர்களிடம் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, மரம் வளர்ப்பு மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை கூறும், சதீஷ்: நான், திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கிறேன். 2004ம் ஆண்டு, என் பிறந்த நாளின் போது தான், "சுனாமி' எனும் ஆழிப்பேரலை, தமிழகத்தை தாக்கியது. 9ம் வகுப்பு சிறுவனாக இருந்தாலும், அந்நிகழ்ச்சி என்னுள் ஆழமாக பதிந்தது. இயற்கைக்கு எதிராக, மனிதர்களே பல்வேறு செயல்களை செய்வதால் தான், இது போன்ற இயற்கை பேரிடர்கள் நடக்கிறது என்பதை அறிந்தேன். அரசு, சுற்றுச்சூழலை பாதுகாக்க, பல முயற்சிகள் எடுத்தாலும், அவற்றை மக்கள் பின்பற்றுவதில்லை. இதற்கு காரணம், "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது' என்பது தான். எனவே, முதலில் பள்ளி சிறுவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் சிறந்தது என, தோன்றியது. இத்திட்டத்தை செயல்படுத்த, "பசுமை சிறகுகள்' என்ற அமைப்பை, கல்லூரியில் அமைத்து, அதன் தலைவராக செயல்படுகிறேன். சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை, சிறுவர்களுக்கு எளிதில் புரியவைக்க ஊமை நாடகம், மிமிக்ரி, பாடல், நடனம், நாடகங்கள் என, ஒவ்வொரு பள்ளியாக சென்று, நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். திருச்சி மாவட்ட, தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், எங்களை பற்றி சொல்வதால், பல பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்துவது எளிதாக உள்ளது. பிறந்த நாள் தினங்களில், பள்ளி சிறுவர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக தரவும், ஆசிரியர்களை வலியுறுத்தியுள்ளோம். ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும், சமீபத்திய இயற்கை பேரிடர்கள் பற்றி தான் பேசுவோம். தற்போது, உத்தரகண்ட் வெள்ள பெருக்கிற்கான காரணங்களை, தினசரி பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை சேகரித்து, ஆதாரத்துடன் விளக்கி வருகிறோம். மரம் நடுதல், காடுகள் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல், மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாதல் போன்ற விழிப்புணர்வையும், மாணவர்களிடம் ஏற்படுத்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக