வெள்ளி, 13 செப்டம்பர், 2013

குரு பூசை, அரசியல், சாதி த் தலைவர்களின் வருகைக்குத் தடை: உயர்நீதிமன்றம் அறிவுரை

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_802252.jpg

குரு பூசை, அரசியல், சாதி த் தலைவர்களின் வருகைக்கு த் தடை: உயர்நீதிமன்றம்  அறிவுரை
சென்னை: "குரு பூஜை கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றி, அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டான் செவ்வாயல் கிராமத்தில், ஒண்டி வீரன் நினைவகத்துக்கு, தமிழ் புலிகள் இயக்கத்தினர், வாகனங்களில் செல்வதை தடுக்கக் கூடாது என, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சிவகுமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். சிவகிரி தாலுகாவில், நெற்கட்டும்சேவல் கிராமத்தில், மாமன்னார் பூலித்தேவன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அனுமதி கோரியும், போலீஸ் பாதுகாப்பு கோரியும், பூலித்தேவன் நினைவு அறக்கட்டளை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. ராமநாதபுரம், பரமக்குடியில், தியாகி இமானுவேல் சேகரனின் நினைவகத்துக்கு வருபவர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி, விஜயா என்பவர், மனு தாக்கல் செய்தார்.

இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: ஜாதி வர்ணம் பூசப்படாத ஒரே தலைவர், மகாத்மா காந்தி தான். மற்ற தலைவர்களை எல்லாம், எப்படியோ ஒரு வழியில், ஜாதி மற்றும் மத அடிப்படையில், அடையாளம் காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. மிகப் பெரிய தலைவர்கள் எல்லாம், ஜாதி தலைவர்களாக சுருக்கப்பட்டு விட்டனர். இதை, அந்த தலைவர்கள் உயிருடன் இருக்கும் போது, நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வழக்குகளைப் பொறுத்தவரை, தங்கள் தலைவர்கள் இந்த சமூகத்துக்கு ஆற்றிய பங்கை நினைவுகூரும் வகையில், கொண்டாட்டங்களை நடத்துவதாகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த வருவதாகவும், வாடகை வாகனங்களில் வருவதற்கு, போலீசார் கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் தென் பகுதிகளைப் பொறுத்தவரை, ஜாதி ரீதியாக பதற்றம் கொண்டது. அசம்பாவிதம் ஏதும் நடந்தால், பதற்றம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும், புதிய தலைவர்கள், கதாநாயகர்கள், ஜாதி தலைவர்களாக உருவாகின்றனர். அவர்களின் பெயரில் கொண்டாட்டம் நடத்துகின்றனர். இதற்கு பெயர், "குரு பூஜை' என்கிறனர். இந்த விழாக்களை, அந்தந்த ஜாதியில் உள்ளவர்கள், தங்கள் பலத்தைக் காட்டும் விதத்தில் செயல்படுகினறனர். விடுதலைப் போராட்ட வீரர்கள், எந்த ஜாதியாக இருந்தாலும், அவர்களை கவுரவிக்க வேண்டும் என்பதில், சந்தேகமில்லை. உண்மையில் பார்த்தால், அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்காக அவர்களை கவுரவிக்கவில்லை; ஜாதி அடிப்படையில் கவுரவிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில், பூலித்தேவன், ஒண்டிவீரன், வ.உ.சி., தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துகோன், வீரன் சுந்தரலிங்கன், கட்டபொம்மன், ராமநாதபுரம் மாவட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தியாகி இமானுவேல் சேகரனார், சிவகங்கை மாவட்டத்தில், வேலு நாச்சியார், மருது பாண்டியன், திருச்சி மாவட்டத்தில், முத்தரையர் ஆகியோருக்கு, விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த தலைவர்களின் பிறந்த நாள் அல்லது இறந்த நாளை, கொண்டாடுகின்றனர். ஜாதி தலைவர்களாக, இவர்களை சித்தரிக்கின்றனர். இது, அந்த தலைவர்களுக்கு செய்யும் மரியாதை அல்ல. அவர்களை அவதூறு செய்வதாகும். விழாக்கள், கொண்டாட்டங்களால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, உயிர் இழப்பு, சொத்துக்கள் சேதம், பதற்றம் ஏற்படுகிறது. சூழ்நிலையை ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கைகளை போலீசாரால் தான் எடுக்க முடியும். விழாக்கள், கொண்டாட்டங்களை, ஜாதி தலைவர்கள் தான் நடத்துகின்றனர். அரசியல் ஆதாயத்துக்காக, நினைவகங்கள் முன், அரசியல் தலைவர்களும் வரிசையில் நிற்கின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் வரும் போது, தேவையின்றி அந்த விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி, இது போன்ற கொண்டாட்டங்களின் போது, அரசியல் கட்சித் தலைவர்கள், அந்த தலைவர்களின் நினைவிடங்களுக்கு செல்லாமல் இருப்பதே, சமூகத்துக்கு அவர்கள் செய்யும் பெரிய சேவை. இதைத் தான், இந்த கோர்ட் எதிர்பார்க்கிறது.

குரு பூஜை கொண்டாட்டங்களால், பொதுமக்களுக்கு தான் இடையூறு, இழப்பு ஏற்படுகிறது. எனவே, குரு பூஜை கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றி, அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள், ஜாதி தலைவர்கள் செல்வதற்கும், தடை விதிக்க வேண்டும். இந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை, மீடியாக்கள் தவிர்க்க வேண்டும். தலைவர்களுக்கு மரியாதை, கவுரவம் செய்ய, அரசியல் கட்சித் தலைவர்கள், ஜாதி தலைவர்கள் விரும்பினால், நினைவிடங்களுக்கு செல்லாமல், மரியாதை செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி அளிப்பது என, உதவிகளை செய்யலாம். தங்கள் தொண்டர்களையும், இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தலாம். அதன் மூலம், மறைந்த தலைவர்களுக்கு மரியாதை, கவுரவம் செய்யலாம். மறைந்த தலைவர்களுக்கு கவுரவம் செய்ய முயற்சிப்பதன் மூலம், இருக்கிற சாதாரண மனிதர்களை தொந்தரவு, துன்புறுத்தல் செய்யக் கூடாது. இவ்வாறு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக