புதன், 28 ஆகஸ்ட், 2013

நாய்க் குட்டி வாங்கித்தராத பெற்றோருக்குத் "தண்டனை'



பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு ஓடிவரும் சிறுவர் சிறுமியர்மட்டும்  ஆண்டிற்கு ஆயிரத்திற்குமேல் இருப்பர். நாடு முழுமையும் இந்த  எண்ணிக்கை மேலும் மிகுதியாகும். ஆனால், பிடிபடாச் சிறார் எண்ணிக்கை மேலும் பன்மடங்காகும். கல்விமுறையில் குடும்பநலம் சார்ந்த பகுதிகள் இருந்தால்தான் இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை குறையும்.  ஆரவாரக் கவர்ச்சியான திரைப்படங்களும்  பிற ஊடகங்களும்  சிறார் நலனைக கருத்தில் கொண்டே படைப்புகளை வெளியிட வேண்டும். இப்போதைய பெறறோர்களுக்கும் சிறார் நலன் குறித்து அறிவுரை வழங்க வேண்டும். இச்சிறார் காவலர்கள் கையில் கிடைக்காமல் கயவர்கள் கைகளில் சிக்கியிருந்தால் இவர்களின் எதிர்காலம் எவ்வாறு சிதைந்திருக்கும் என எண்ணிப் பார்க்க வேண்டும்.  வீட்டுச் சூழலுக்கேற்ப தேவைகளை நிறைவு செய்தல், படிப்பிலும் நல்ல பழக்க வழக்கங்களிலும் ஆர்வம்  ஏற்படுத்தல், இயலாமையின்பொழுது வெறுப்பினை உமிழாமல் கனிவான முறையில் அமைதிப்படுத்தல் முதலானவற்றைப் பின்பற்றித் தத்தம் பிள்ளைகளை அன்புப்பிடிகளில்  அகப்படுத்த வேண்டும். எனினும் கோவைக் காவலர்களுக்குப் பாராட்டுகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கோவையில் பள்ளிச் சிறுவர்கள், நாய்க் குட்டி வாங்கித்தராத பெற்றோருக்குத் "தண்டனை'
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_790220.jpg 

கோவை: பெற்றோரிடம் பலமுறை நாய் க் குட்டி கேட்டும், வாங்கி கொடுக்காததால், விரக்தியடைந்த பள்ளி மாணவர்கள் இருவர், கடிதம் எழுதி வைத்து, வீட்டை விட்டு வெளியேறியனர்; மாணவர்களை மீட்ட போலீசார், இரண்டு நாய்குட்டிகளை வாங்கி கொடுத்து, மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்.

கோவை, ராமநாதபுரம், சவுரிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த டர்னர் மற்றும் எலக்டீரிசியன் தொழில் செய்யும் இருவரது 14 வயது மகன்கள், ராமநாதபுரம் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர். சிறு வயதிலிருந்து ஒரே வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கும், தங்களது வீடுகளில் செல்லமாக ஒரு நாய்குட்டி வளர்க்க வேண்டும் என்பது நீண்டகால ஆசையாம். இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் பலமுறை கேட்டும், அவர்களது ஆசை நிறைவேறவில்லை.ஒவ்வொரு முறை நாய்குட்டி கேட்கும்போதும், "நாய்குட்டி எல்லாம் வாங்கி தரமுடியாது; ஒழுங்கா படிப்பில் கவனம் செலுத்துங்க' என்று பெற்றோர் கண்டிப்புடன் மறுத்துவிடுவது வழக்கம். பொறுத்து, பொறுத்து பார்த்த நண்பர்கள் இருவரும் விரக்தியடைந்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொள்வது என்பதே அந்த அதிர்ச்சி முடிவாகும். திட்டப்படி இருவரும், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வது போல் கிளம்பினர். ஆனால், பள்ளிக்கு செல்லாமல் பல இடங்களில் சுற்றினர். பின், மதியம் நண்பர்களின் ஒருவரது வீட்டுக்கு சென்று துணிகளை மாற்றினர். தொடர்ந்து, தங்களது அம்மாக்களுக்கு ஒரு கடிதம் எழுதினர்.

கடித விவரம்:அன்புள்ள இரண்டு அம்மா அவர்களுக்கு, எங்கள் இருவருக்கும் வாழபிடிக்காததால், நாங்கள் சாக இருக்கிறோம். எங்களை மன்னித்துவிடுங்கள். எங்களது கடைசி ஆசை எங்கள் இருவருக்காக இரண்டு வீட்டிலும் நாய்குட்டிகள் வளர்த்துங்கள். அதற்கு எங்களது பேரை வைத்து எங்களை வளர்த்ததுபோல் நினைத்து, அந்த நாயை வளருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் இருவரையும் ஒட்டுக்காக(ஒன்றாக) புதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இப்படிக்கு அன்புள்ள மகன்கள்.என்று எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு கிளம்பினர்.

மாலை வீடு திரும்பிய பெற்றோர், மாணவர்களின் கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் பள்ளி, விளையாட்டு மைதானம் என்று பல இடங்களில் தேடியவர்கள், இறுதியில் கடிதத்துடன், ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், அதிகாரிகள் தகவல் கொடுத்து, மாணவர்களை தேடினர். இந்நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனை அருகே இரண்டு மாணவர்கள் சுற்றி திரிந்ததை கண்ட போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், நாய்குட்டி கிடைக்காத சோகத்தில் வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்தது. இதைதொடர்ந்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்களின் மனநிலையை அறிந்து கொண்டனர். தங்களுக்கு நாய்குட்டி வாங்கி கொடுத்தால், நன்றாக படிப்பதாக இருவரும் உறுதியளித்தனர். இதையடுத்து, தெற்கு சட்டம் - ஒழுங்கு உதவி கமிஷனர் ராமசந்திரன் அறிவுறுத்தலின் பேரில், ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், பேரூர் மெயின் ரோட்டிலுள்ள நாய் விற்பனையாளர் ஒருவரிடம், தலா 2,500 ரூபாய் கொடுத்து இரண்டு "பொமரேனியன்' வகை நாய்குட்டிகளை வாங்கி மாணவர்களுக்கு பரிசாக அளித்தனர்.

நாய்குட்டி கிடைத்த மகிழ்ச்சியில் நண்பர்கள் இருவரும் எல்லையில்லா ஆனந்தமடைந்தனர். மேலும், தங்களுக்கு நாய்குட்டி பரிசளித்த போலீசாருக்கு, வரும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, வகுப்பில் முதலிடம் வாங்கி காட்டுவதாக சபதமிட்டு பெற்றோருடன் மகிழ்ச்சியாக வீட்டுக்குச் சென்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக