சனி, 31 ஆகஸ்ட், 2013

கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்படவில்லை: மத்திய அரசு தகவல்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_792386.jpg

கச்சத்தீவு இலங்கைக்கு க் கொடுக்கப்படவில்லை: மத்திய அரசு தகவல்

புதுதில்லி: "கச்சத்தீவோ அல்லது இந்திய நாட்டின் எந்த ஒரு பகுதியோ, இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை; அதனால், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீண்டும் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையே, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில், ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், ராமேஸ்வரம் அருகேயுள்ள, கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டது. எனவே, இந்த ஒப்பந்தங்கள் செல்லாது' என, அறிவிக்க வேண்டும் என்று கோரி, 2008 டிசம்பரில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது, முதல்வராக இல்லாததால், அ.தி.மு.க., பொதுச் செயலர் என்ற அடிப்படையில், மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மனுவுக்கு, மத்திய அரசு, பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: கச்சத்தீவு என்பது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்தியா மற்றும் இலங்கை இடையே பிரச்னையாக இருந்தது. இந்தத் தீவின் நிலை தொடர்பாக இருந்த பிரச்னை, 1974ம் ஆண்டில், இந்திய - இலங்கை அரசுகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்பட்டது. வரலாற்று ஆதாரங்கள் மற்றும் சட்ட அம்சங்கள் உட்பட, அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்ட பின், இரு நாடுகளும் ஒப்பந்த முடிவுக்கு வந்தன. 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம், ஏற்பட்ட நிலைமை, 1976ம் ஆண்டு ஒப்பந்தத்தில், மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இந்தியாவின் எந்த ஒரு பகுதியும், எந்த நாட்டிற்கும் கொடுக்கப்படவில்லை. அதனால், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாக, ஜெயலலிதா கூறுவது சரியானதல்ல; அரசு ஆவணங்களுக்கு முரணானது. இந்திய - இலங்கை அரசுகள் இடையே ஏற்பட்ட இரண்டு ஒப்பந்தங்களின்படி, இலங்கை கடல் பகுதியில், இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதியில்லை. அதேநேரத்தில், இந்திய மீனவர்களும், சுற்றுலா பயணிகளும், கச்சத்தீவுக்கு விஜயம் செய்யலாம். இதற்கென, இலங்கை அரசிடமிருந்து பயண ஆவணங்களோ அல்லது விசாவோ பெற வேண்டிய தேவையில்லை. கச்சச்தீவுக்கு விஜயம் செய்ய வழங்கப்பட்ட உரிமையை, அந்தத் தீவை சுற்றிலும் மீன் பிடிக்க வழங்கப்பட்ட உரிமையாக, இந்திய மீனவர்கள் கருதக் கூடாது. எனவே, ஜெயலலிதாவின் மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல; அதை தள்ளுபடி செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பதிலை நேற்று பரிசீலித்த, நீதிபதிகள் சவுகான் மற்றும் பாப்தே அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், "ஜெயலலிதா, இதற்கு பதில் ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை மூன்று வாரங்களுக்கு பின், நடைபெறும்' என, உத்தரவிட்டது.

1 கருத்து:

  1. தமிழ்நாடுவும் தனிநாடாக பிரிக்கப்படவில்லை.அது ஏற்கனவே தனிநாடாக இருந்ததுதான் என்ற பிரமாணப்பத்திரமும் எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும் வியப்பேதுமில்லை.

    பதிலளிநீக்கு