புதன், 7 ஆகஸ்ட், 2013

சருக்கரை நோய்க்கு க் கால்கள் பலியாகா!

சர்க்கரை நோய்க்கு க் கால்கள் பலியாகா!

சர்க்கரை நோயாளிகள், பாத புண்களால், கால்கள் இழப்பதை தவிர்க்க, "ஸ்டெம்செல்' ஆராய்ச்சி மூலம் தீர்வு கண்ட, தமிழக பெண் மருத்துவர் ரேகா: நான், வேலூர் கிறிஸ்தவ கல்லூரி மருத்துவமனையில், "பேத்தாலஜி' எனும், நோய் குறியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். இளங்கலை மருத்துவம் முடித்ததும், "ஸ்டெம்செல்'களை ஆராய்ச்சி செய்வதில், ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலை கழகத்தில், இந்தியரான ராகேஷ் கே.ஜெயின் தலைமையில், ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். சர்க்கரை நோயாளியின் பாதங்களில் உள்ள, ரத்த குழாய்கள் பாதிக்கப்படுவதால், "புட் அல்சர்' எனும், பாத புண்கள் ஏற்படுகின்றன. இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரில், ஐந்து நபருக்கு ஒருவர் என்ற வீதத்தில், கால்களை முற்றிலும் இழக்கின்றனர். இப்பிரச்னைக்கு, ஐ.பி.எஸ்., எனும், "இண்டியூஸ்டு புளூரிபொட்டென்ட் ஸ்டெம்செல்'கள் தீர்வு காண்பதை கண்டுபிடித்தோம். "புளூரி' என்றால், லத்தீன் மொழியில், பன்முகத் தன்மை என்பது பொருள்.
உடலில், உறுப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை ஸ்டெம்செல்கள். இரைப்பை, குடல், நுரையீரல் போன்றவற்றின் உட்சுவர் நரம்புகள், தோல், தசை மற்றும் எலும்புகளுக்கு வெவ்வேறு தன்மைகள் இருந்தாலும், இவையனைத்தையும் ஒரே ஸ்டெம்செல்லில் இருந்து, செயற்கையாக உருவாக்கலாம். சர்க்கரை நோயாளிகளின் தோலின் கீழ் உள்ள செல்களை எடுத்து, அவற்றை, ஐ.பி.எஸ்., செல்களாக மாற்றி, செயற்கையான ரத்த நாளங்களை உருவாக்கலாம். இது, மனித உடலில், 280 நாட்கள் வரை செயல்பட்டு, அதற்குள், இயற்கையான, புதிய ரத்த நாளங்களை உருவாக்கும். இதை மனிதர்களிடம் சோதிக்கவில்லை என்றாலும், எலிகளை வைத்து பரிசோதித்ததில், ஸ்டெம்செல்களில் இருந்து உருவாக்கப்பட்ட ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் இயல்பாக இருப்பதை உறுதி செய்தோம். இந்த ஸ்டெம்செல் ஆராய்ச்சியால், இனி சர்க்கரை நோயாளியின் பாத புண்களால், கால்களை இழப்பது தவிர்க்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக