சனி, 10 ஆகஸ்ட், 2013

ஆசுதிரேலியா தப்ப முயன்ற ஈழத்தமிழர்கள் 48 பேர் கைது


தத்தம் வாழ்வைத் தொலைத்து வந்துள்ள ஈழத்தமிழர்கள் அமைதியான நல வாழ்க்கை வாழ இங்கே வழியில்லை எனப் பிற நாட்டிற்குச் செல்கின்றனர்.  அவர்களைத் தளையிட்டுத் துன்புறுத்துவது மனித நேயம் அல்ல. வெளிநாடு செல்ல  விரும்புபவர்களை  விரும்பும் நாடுகளின் அரசுகளுடன் தொடர்பு கொண்டு அரசே அரசு செலவில் அனுப்பி வைக்கலாமே! இங்கு அவர்களைப் பேணுவதற்காகும் செலவை விட இப்  பயணச் செலவு குறைவாகத்தான் இருக்கும். இதனால் அரசின் நிதிச்சுமையும் குறையும்.  ஈழத்தமிழர்களுக்கும் விடிவு பிறக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

ஆசுதிரேலியா தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 48 பேர் கைது

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 48 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்ட கியூ பிரிவு போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கியூ பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை காலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேளாங்கண்ணி பேராலயப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சென்றுகொண்டிருந்த சிலரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் என்பதும், கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 48 பேரையும் சென்னை, கீழ்க்கட்டளையைச் சேர்ந்த (தமிழகத்தைச் சேர்ந்தவர்) முகவர் டேவிட் என்பவரையும் கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக