திங்கள், 29 ஜூலை, 2013

தே.த.நு.தே(என்இஇடி தேர்வு) : செயலலிதா காட்டம்

தே.த.நு.தே(என்இஇடி தேர்வு) : மத்திய அரசுக்கு ச் செயலலிதா காட்டம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் என்இஇடி தேர்வை கட்டாயமாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யும் முடிவுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தியாவில் மருத்துவ, பல் மருத்துவ, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே பொதுவான நுழைவுத் தேர்வினை நடத்துவது என்று மத்திய அரசு முடிவு செய்து அதற்காக என்இஇடி தேர்வினை அறிமுகப்படுத்தியது.
கிராமத்தில் பயிலும், மாணவ, மாணவிகளுக்கும், மிகப்பெரிய நகரங்களில் வசிக்கும் மாணாக்கருக்கும் ஒரே பொதுவான நுழைவுத் தேர்வு என்பது, கிராம மக்களை வெகுவாக பாதிக்கும் செயல் என்று கூறி தமிழகம் உட்பட பல்வேறு தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மருத்துவ பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்க முடியாது என்று நீதிபதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைக் கூறியுள்ளனர். இதனால், தமிழக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, இந்த முடிவை எதிர்த்து, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக, மத்திய இணை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இதனால், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள சேர்க்கை முறை அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையிலும், வெளிப்படையான வகையிலும் அமைந்துள்ளது.
எனவே, என்இஇடி போன்ற வேறு எந்த நுழைவுத் தேர்வையும் தமிழகம் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இது, மாநில அரசுகளின் உரிமைகள் மற்றும் சேர்க்கை முறை கொள்கைகளில் தலையிடும் விதத்தில் அமைந்துள்ளது.
பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஏற்கனவே இரண்டு முறை நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மருத்துவ சேர்க்கை முறையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டு முறையுடன் கூடிய வெளிப்படையான சேர்க்கை முறை நடைமுறையில் உள்ளது.
மேலும், முதுநிலை மருத்துவப் படிப்பில், கிராமத்தில், அதிலும், மலைவாழ் பகுதிகளில் பணியாற்றிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் சேர்க்கை முறை நடைமுறையில் உள்ளது.
எனவே, இவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில், தற்போதைய மருத்துவ பொது நுழைவுத்  தேர்வு முறை அமைந்துள்ளது. சமூக முரண்பாடுகளுக்கு  ஏற்ற வகையில் அமையாத பொது மருத்துவ நுழைவுத் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே, மருத்துவ பொது நுழைவுத் தேர்வு குறித்து மேல்முறையீடு செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எந்த பரிசீலனையும் இல்லாமல் மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முதல்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக