திங்கள், 15 ஜூலை, 2013

இன்மையிலிருந்து வளமை

இன்மையிலிருந்து வளமை
 

விதவையாக இருந்தும், ஆசிய அளவில் பிசினசில் சாதனை படைத்த, 50 பெண்களில் ஒருவரான, ரேணுகா: நான், மும்பையில் வசிக்கும், தமிழ் பெண். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். குடும்பமா, வேலையா என்ற கேள்வி, ஆண்களுக்கு சாதாரணமாக இருந்தாலும், பெண்களுக்கு பல சூழ்நிலைகளில் சிக்கலும், குழப்பமும் நிறைந்ததாக இருக்கும். என் வாழ்க்கையில், இரண்டையும் சரியான விதத்தில் சமாளிக்க வேண்டியிருந்தது. ஏனெனில், என் குழந்தைகள் பிறந்த சில காலத்திலேயே, திடீர் விபத்தில், கணவன் இறந்து விட்டார்.குடும்ப செலவிற்காக, வேலை செய்ய வேண்டும். ஒரு அம்மாவாக, பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும். இவ்விரண்டையும் சரியாக சமாளிக்க, என் இளம் வயதிலேயே பல தியாகங்கள் செய்து, பல மணி நேரம் கண்விழித்து, வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது."அப்பா உயிரோடு இருந்திருந்தால், எல்லாம் கிடைத்திருக்குமே' என, பிள்ளைகள் ஏங்க கூடாது என்ற எண்ணத்தில், சோர்வே இல்லாமல் தொடர்ந்து உழைத்து, பிசினசில் வளர்ச்சி அடைந்தேன். இன்ஜினியரிங் படித்திருந்தாலும், தனியார் வங்கியில் வேலை செய்தேன். என் திறமை மற்றும் உழைப்புக்கு அங்கீகாரமாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வெஞ்சர் என்ற, புதிய கிளை நிறுவனத்தை ஆரம்பித்து, மேலாண் இயக்குனராக்கினர்.பின், "மல்டிபிள் ஆல்டர்னேட் அசட் மேனேஜ்மென்ட்' என்ற நிறுவனத்தை சொந்தமாக ஆரம்பித்தேன். இங்கு, நிதி நிறுவனங்களில் பணத்தை வாங்கி, லாப நோக்கில் நல்ல தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து, உரிய காலத்தில் வட்டியுடன் பணத்தை திருப்பி தரும் சவாலான வேலையில், பல கோடிகளை நிர்வகித்து, சாதித்து காட்டினேன்.இந்தியாவின், சூப்பர் மார்க்கெட் முதல், விமான நிறுவனங்கள் வரை என, பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதால், ஆசிய அளவில் சாதனை படைத்த பெண்ணாக, "போர்ப்ஸ்' பத்திரிகை பாராட்டியது. நான் பூஜ்ஜியத்தில் துவங்கினாலும், கடினமாக உழைத்து, வாழ்க்கையின் பல மேடு பள்ளங்களை தாண்டி, ராஜ்ஜியம் வரை உயர்ந்து, ஒரு பெண்ணாக சாதித்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக