செவ்வாய், 2 ஜூலை, 2013

அரசு மருத்துவ கல்லூரிக்கு உழவர்கள் உடல் தானம்

முதியவர்கள் பாலுச்சாமி, இராமன் ஆகிய இருவருக்கும்  பாராட்டுகள். இவர்களைப்போல் சிவகங்கையைச் சேர்ந்த, தன்மானச்சுடர் இராமச்சந்திரனாரின் இளைய மகனான திரு இராசமுத்துராமலிங்கம் தன் 85 ஆம் அகவையில் (கடந்த அக்டோபர்) உடல்கொடைக்கான விருப்பத்தினைத் தெரிவித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கண்ணாடி அணியாத இவர்,  வாழும் பொழுதே தன் கண்களில் ஒன்றைத் தானமாக அளிக்க முன் வந்துள்ளார். ஆனால், வாழும் பொழுதே கண் தானம் பெறுவதில்லை என்பதால் சட்டச்சிக்கல்களை ஆராய்ந்து முடிவெடுப்பதாகச் சென்னை  மருத்துவக் கல்லூரியில் தெரிவித்துள்ளனர். சிவகங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் புகழ் சேர்க்கும் இவர்களுக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

அரசு மருத்துவ கல்லூரிக்கு உழவர்கள் உடல் தானம்
சிவகங்கை : அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர்களின் படிப்பிற்கு உதவ, இரண்டு விவசாயிகள், உடல்களை தானம் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாகுடி கிராமத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி, 75. அதே ஊரைச் சேர்ந்தவர், ராமன், 76. இருவரும் நண்பர்கள். தங்களது உடல்களை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் கொடுத்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: மனிதனாக பிறந்தால், எதையாவது சாதிக்க வேண்டும். எனவே, எங்களால் முடிந்ததை செய்ய விரும்பினோம். மண் தின்னும் இந்த உடல்களை, சிறந்த டாக்டர்களை உருவாக்க, அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தானம் செய்வது என முடிவு செய்தோம். குடும்பத்தினருடைய ஒப்புதலை பெற்று, இதை செய்துள்ளோம். உடல் தானம் செய்வது எப்படி என யோசித்தபோது, ஓராண்டுக்கு முன், "தினமலர்' நாளிதழில், "உடல், உறுப்பு தானம் செய்வது எப்படி' என்ற செய்தியை படித்தோம். இதில் இருந்த விளக்கங்களை பின்பற்றி, உடல்களை தானம் செய்துள்ளோம். எங்களிடம், எந்த கெட்ட பழக்கமும் இல்லை. சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லூரியில், சிறந்த டாக்டர்கள் உருவாக வேண்டும். இதற்கு, ஏதோ ஒரு வகையில் உதவுகிறோம் என்பதில், மகிழ்ச்சி அடைகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

டீன் சாந்தகுமார் கூறுகையில், ""சாதாரண விவசாயிகள், உடல் தானம் செய்திருப்பது பெருமை. இவர்களை போன்ற பலரும் உடல், உறுப்பு தானம் செய்தால், இம்மருத்துவமனை மேலும் வளரும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக