ஞாயிறு, 7 ஜூலை, 2013

எதிர்பாரா நேர்ச்சியில் உதவுங்கள் - அதுவும் இனிய சுமையே!



விபத்தில் உதவுங்கள்... அதுவும் சுகமான சுமையே

பொது இடங்களில் நடக்கும் விபத்துகளின் போது, பல நூறு பேர் அங்கிருந்தாலும், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற முடிவதில்லை. விபத்தில் காயம்பட்டவருக்கு, உடனடியாக அளிக்க வேண்டிய முதலுதவியை செய்தால் தான், தொடர் மருத்துவ சிகிச்சை அளித்து உயிரை காப்பற்ற முடியும்.

விபத்தில் காயமடைந்த நேரத்தில்இருந்து, முதலுதவி அளிக்கும் நேரம் வரை உள்ள காலத்தை "கோல்டன் ஹவர்' என, குறிப்பிடுகின்றனர். இந்த நேரத்தை வீணாக்காமல், முதல் உதவி அளிக்க வேண்டும். இல்லையென்றால், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற முடியாது. ஆனால், விபத்து நடக்கும் இடத்தில், பல நூறு பேர் இருந்தாலும், "கோல்டன் ஹவரில்', பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய முதலுதவியை அளிப்பதில்லை. இதனால், தான் பல உயிர்களை இழக்க நேரிடுகிறது.இதற்கு, சென்னை "எக்ஸ்பிரஸ் அவென்யூ' வணிக வளாகத்தில்,சமீபத்தில் நடந்த தற்கொலையை குறிப்பிடலாம். "எக்ஸ்பிரஸ் அவென்யூவின்' மூன்றாவது மாடியிலிருந்து குதித்து, ஐ.டி., ஊழியர் ஒருவர்தற்கொலை செய்து கொண்டார்.
பல்வேறு தடைகள்


அவர் மாடியிலிருந்து கீழே குதித்தபோது, அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். மாடியிலிருந்து குதித்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞருக்கு உதவ, பல தடைகள் அங்கு நிலவியுள்ளது.ரத்த வெள்ளத்தில் மிதக்கும் இளைஞரை நெருங்க, யாரும் அனுமதிக்கப்படவில்லை. போலீஸ் வரட்டும் என, வணிக வளாக ஊழியர்கள், பொதுமக்களை தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால், காப்பாற்றியிருக்கலாம் என, அங்கிருந்த பெண் ஒருவர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதுபோன்ற சூழல்களில், பொதுமக்கள் மனதில் பல்வேறு தயக்கங்கள் ஏற்படுகின்றன."போலீஸ் கேஸ் ஆகிவிடும். இதில், தலையிட்டால் கோர்ட்டுக்கு போய் சாட்சி சொல்லணும். போலீசார் தொடர்ந்து விசாரிப்பர். இதற்கு, வேலையை விட்டுவிட்டு, மெனக்கெடணும்' என, வேடிக்கை பார்த்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. விபத்து நேரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதால், சட்டரீதியான நெருக்கடிக்கு உள்ளாகி விடுவோமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருப்பதே இதற்கு காரணம் என, கருத்து நிலவுகிறது.
விலகி செல்ல வேண்டாம்:

இதுகுறித்து, தமிழக கூடுதல் டி.ஜி.பி., கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:இந்திய கிரிமினல் சட்டம், 100சதவீதம் மக்களை நம்பி தான் உள்ளது. ஒரு குற்ற நிகழ்வு குறித்து, போலீசுக்கு மக்கள் உதவினால் தான், குற்றத்துக்கான உண்மையான காரணத்தையும், குற்றவாளியையும் கண்டுபிடிக்க முடியும்.சட்டத்தை கண்டு மக்கள் பயந்தால், உண்மையை வெளிக்கொணர்வது சாத்தியமில்லை. இதற்காக தான், சமுதாய காவல் என்ற அமைப்பை உருவாக்கினோம். இந்த அமைப்பு செயல்படும் பகுதிகளில், குற்றம் தொடர்பான முழு உண்மைகள் வெளிவருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளிக்க வேண்டியது, அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் கடமை. பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்ப்பவர்களை, போலீசார் விசாரிப்பர். விசாரணை நடத்தினால் தான், அங்கு என்ன நடந்தது என்பது தெரியும். போலீசார் விசாரிப்பரே என, பயந்து பாராமுகமாக செல்லும் மனோபாவமே மக்கள் மத்தியில் உள்ளது. இதனால், தங்களின் கடமையில்இருந்து பொதுமக்கள் விலகி செல்கின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதை சுமையாகக்கருதாமல், சுகமான சுமையாக கருத வேண்டும்.மக்களுக்கான சட்டத்தில், மக்களின் பங்களிப்பே முக்கியம். இதை, பொதுமக்கள் புரிந்து கொண்டால், பல வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். தொடர் குற்றங்கள் நடப்பதும் தடுக்கப்படும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.இதுபோன்ற வழக்குகளில், சட்ட ரீதியான பாதுகாப்பும், முதலுதவி செய்பவருக்கு உள்ளது என,கூறுகின்றனர்.
சட்ட பாதுகாப்பு உண்டு:

இதுபற்றி, தமிழகம் மற்றும் புதுவை கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பி.திருமலைராஜன் கூறியதாவது:விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு, முதலுதவி செய்ய மருத்துவமனைக்கு அழைத்து செல்வோர், மருத்துவமனையில் அவரை சேர்த்துவிட்டு சென்று விடலாம். மருத்துவமனை போலீசுக்கு தவகல் கொடுத்துவிடும்.சம்பவம் குறித்து போலீசுக்குதகவல்கள் சொல்ல விரும்பினால், மருத்துவ மனையில் முகவரியை கொடுக்கலாம். தானே முன்வந்தும் போலீசுக்கு தகவலை சொல்லலாம். கோர்ட்டுக்கு சென்று சாட்சி சொல்ல நேரிடும்போது, "எனக்கு வேலை அதிகம் இருக்கிறது. எனவே, என் சாட்சியத்தை முதலில் பதிவு செய்துகொள்ளுங்கள்' என, எழுத்துமூலம், சாட்சியம் அளிக்கலாம்.இதன்மூலம், வழக்கு முடியும் வரை கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. பொது இடங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து, அஞ்சாமல் தகவல் சொல்லலாம். இதற்கு, போதிய சட்ட பாதுகாப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, திருமலைராஜன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக