சனி, 20 ஜூலை, 2013

மழலைகளுக்கான பாதுகாப்பு இடம்!

மழலைகளுக்கான பாதுகாப்பு இடம்!

"மழலை ப் பேணுகை மையங்களை' த் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி, இளம் பெற்றோருக்கு ஆலோசனை கூறும், சாவித்ரி: நர்சரி பள்ளி ஆசிரியர் மற்றும் மழலைகள் பராமரிப்பில், 18 ஆண்டு கால அனுபவம் உள்ளது. நகரங்களில் மட்டுமே இருந்து வந்த, "பிளே ஸ்கூல்' எனும் மழலை பராமரிப்பு மையங்கள், தற்போது, சிற்றூர்களிலும் உள்ளன. குழந்தை பிறந்தாலும், வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம்; இரண்டு வயதான குழந்தைகளை, பள்ளியில் சேர்க்க முடியாது போன்ற நெருக்கடிகளால், ஏதோ மழலையர் பராமரிப்பு மையத்தில் சேர்த்தாலே போதும் என்பது, முற்றிலும் தவறு. மழலைகளை சேர்ப்பதற்கு முன், அம்மையத்தின் அமைவிடத்தை நேரடியாக பார்த்து, குழந்தைகளை சேர்த்துள்ள மற்ற பெற்றோரிடம், அபிப்பிராயம் கேட்பது நல்லது. உங்கள் குடியிருப்பு அல்லது பணியிடங்களுக்கு அருகில் உள்ள மையத்திற்கு, முன்னுரிமை தந்தால், பால்குடி மறக்காத சிறு குழந்தைகளின் பசியாற்ற உதவும். மழலைகள் ஓடி ஆட, சற்று விசாலமான தரைதள கட்டடம், அதில், பல வண்ண உள் அலங்கார அமைப்பு, காற்றோட்டமான சுகாதாரம், அவசர காலத்திற்கு மருத்துவ வசதி ஆகியவை இருக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, எதற்காக அதிகம் பயப்படுவர், தூக்கத்தின் இடையில் வீறிடுமா, ஏதேனும் அலர்ஜி உண்டென்றால் அந்த விவரங்களை, வாய்மொழியாக சொல்வதோடு நின்று விடாமல், குழந்தையின் சுருக்கமான, "மெடிக்கல் ஹிஸ்ட்ரி' குடும்ப மருத்துவர் விவரம் போன்ற குறிப்புகளை தெளிவாக எழுதி, மையத்தின் நிர்வாகியிடம் தருவது நல்லது. குழந்தைகள், தினசரி ஏதாவது பாடம் கற்கின்றனரா என்பதை விட, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது, மற்ற குழந்தைகளுடன் பழகுவது, சரியாக சாப்பிடுவது, தூங்குவது போன்ற, நல்ல பழக்கங்களை கற்றாலே போதும். அடிக்கடி குழந்தையின் செயல்பாட்டை அறிவது அவசியம். அளவுக்கு மீறிய கண்டிப்பு இருந்தால், வேறு நல்ல மையங்களுக்கு மாற்றுவதும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக