ஞாயிறு, 14 ஜூலை, 2013

படிப்பிற்குப் பணம் தடையில்லை! 2.பூப்படைந்த பெண் குழந்தைகள்

படிப்பிற்கு ப் பணம் தடையில்லை!

வீடுகளுக்குச் செய்தித்தாள் போட்ட பணத்தில் படித்தே, எம்.பி.ஏ., வரை முன்னேறிய, மாணவன் சிவகுமார்: நான், பெங்களூரில், பனாஸ்வாடி பகுதியில், ஏழை குடும்பத்தில் பிறந்தவன். அப்பா, டிரக் டிரைவர்; அம்மா பூ கட்டி விற்கிறார். பெற்றோர் சம்பாதிக்கும் பணம், கடனுக்கு வட்டி கட்டவே சரியாக இருந்ததால், தொடர்ந்து படிக்க வைக்க முடியாத நிலை. அதனால், 5ம் வகுப்பிலேயே வீடுகளுக்கு பேப்பர் போட்டு, அந்த பணத்தில் படிக்க ஆரம்பித்தேன்.இருந்தும், 9ம் வகுப்பிற்கான கட்டணத்தை கட்ட முடியாமல், பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நான் வாங்கும் சம்பளம் வீட்டு செலவுகளுக்கே பற்றாததால், பேப்பர் போடும் வாடிக்கையாளரான, கிருஷ்ண வேத வைசா என்பவரிடம், என் ஏழ்மையை விளக்கி, அந்த ஆண்டிற்கான பள்ளி கட்டணத்திற்கு உதவ வேண்டினேன். ஆனால், என் கடின உழைப்பு,படிப்பின் மீதான ஆர்வத்தை பார்த்து, ஐ.ஐ.டி., வரை படிக்க உதவினார். தற்போது, பெங்களூரு, ஐ.ஐ.டி.,யில் கணினி அறிவியல் இறுதியாண்டு படிக்கிறேன். இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றான, "கேட்' தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்று, கோல்கட்டாவில் உள்ள, ஐ.ஐ.எம்.,இல் நிதி தொடர்பாக, எம்.பி.ஏ., படிக்க போகிறேன். இதற்கு தேவையான கட்டணத்தை, வங்கி மூலம் கடன் பெற்று படிக்க விரும்புகிறேன். ஏனெனில், வீடுகளுக்கு பேப்பர் போடும் பணியை இன்றும் தொடர்கிறேன். பேப்பர் போடும் பையனாக இருந்த நான், பேப்பர் வினியோகிக்கும் நுணுக்கங்களை கற்று, தினமும், 500 பிரதிகளை விற்கும் ஏஜன்சி உரிமையாளராக வளர்ந்துள்ளேன். இதற்கு காரணம், சோம்பேறித்தனம் இல்லாமல், காலை, 6:00 மணிக்கு முன்னரே, வாடிக்கையாளரின் வீடுகளில் பேப்பர் போட்டு விடுவேன். ஒருவர் என் கல்விக்கு உதவியதால் தான்,
இன்று என்னால் படித்து சாதிக்க முடிந்தது. அதற்கு பிரதி பலனாக, ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, அதன் மூலம் வறுமையால் கல்வி கற்க முடியாத குழந்தைகளுக்கு, கல்வி கற்க உதவ வேண்டும் என்பதே, என் ஆசையாக உள்ளது.

அம்மாவே தயங்கினால் எப்படி!

பூப்படைந்த பெண் குழந்தைகளிடம், அம்மாக்கள் தயங்காமல் சொல்லித் தர வேண்டிய விஷயங்களை கூறும், மகப்பேறு மருத்துவர் சாதனா: பெண் குழந்தைகளிடம், சில விஷயங்களை அம்மா மட்டுமே பேச முடியும். அதில், மிகவும் முக்கியமானது "பூப்படைதல்!' இது பற்றி, இன்றளவும் பல வீடுகளில் தெளிவாக சொல்லி தருவதில்லை. "இதெல்லாமா சொல்லி தருவது, அவங்களாகவே தெரிஞ்சிக்க மாட்டாங்களா' என, அம்மாவே நினைப்பது மிகவும் தவறு. ஏனெனில், இது போன்ற விஷயங்களில், தவறான வழிகாட்டிகளிடம் குழந்தைகள் சிக்கினால், தேவையற்ற பிரச்னை ஏற்படும். அம்மாவே, ஒரு தோழியாக பழகி, தேவையானதை சொல்லி தந்தால், அவர்களிடம் தேவையற்ற அச்சம் நீங்கி, சரியான புரிதல்களுடன், அதை எதிர்கொள்ளும் தைரியம், சிறு வயதிலிருந்தே வளரும். முன்பு பெண் குழந்தைகள், 13 வயதில் தான் பூப்படைவர். ஆனால் இப்போது, 10 வயதிலேயே பூப்படைகின்றனர். பூப்படையும் தருணத்தில், பாத்ரூம் போகும் போது ரத்தம் வந்தால், பயப்படாமல் தைரியமாக எதிர்கொண்டு, உடனே உங்களிடம் சொல்ல சொல்லுங்கள். இனி ஒவ்வொரு மாதமும், மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு இப்படி ரத்த போக்கு வரும் என்பதையும், மாதவிடாய் சுழற்சி, கர்ப்பப்பை, சினைப்பை என, உயிரியல் ரீதியாக விளக்குவதும், எப்படி நாப்கினை பயன்படுத்துவது என, கற்றுத் தந்து, அவளை பெரிய மனுஷியாக்குங்கள். மற்றவர்களிடம் ஜாக்கிரதையாக பழகவும், "குட் டச், பேட் டச், நோ ஹக்' பற்றியும் அறிவுறுத்துங்கள். சுத்தமான உள்ளாடை, நாப்கின் மாற்றுவது என, அந்த நாட்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் பற்றி, அதிகம் சொல்லித் தாருங்கள். மாதவிடாயின் போது வயிறு வலிப்பது, வெள்ளைப் படுதலின் போது, அழுக்கு அல்லது பழுப்பு நிறத்தில் ஏதாவது துர்நாற்றம், பிறப்புறுப்பில் அரிப்பு என, எதுவாக இருந்தாலும், நீங்களாக எதையும் செய்யாமல், மருத்துவரை அணுகியே, சிகிச்சை பெறுங்கள். வலி நிவாரணிகளை, தொடர்ச்சியாக பயன்படுத்தாதீர்கள்.