ஞாயிறு, 9 ஜூன், 2013

வறட்சியிலும் பயிர் வாடாது!

வறட்சியிலும் பயிர் வாடாது!

நீரற்ற வறட்சி க் காலத்திலும், பயிரை பசுமையாக வைத்திருக்கும் கரைசலை இலவசமாக தெளிக்கும், பேராசிரியர் சோழன்: நான், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையத்தின், பேராசிரியர் மற்றும் தலைவராக பணியாற்றுகிறேன். வறட்சியால் நீரின்றி பயிர்கள் வாடுவதை தடுத்து, நீரற்ற காலத்திலும் பயிரை பசுமையாக வைத்திருக்க, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின், நுண்ணியிரியல் துறை விஞ்ஞானிகள் மூலம், "மெத்தைலோ' பாக்டீரியாவை கண்டுபிடித்தோம். இந்த பாக்டீரியாவால், வறட்சி காலத்திலும் பயிரின் வளர்ச்சியை துரிதப்படுத்தி, விவசாயிகள் நல்ல மகசூல் பெற முடியும்.நீர் பற்றாக்குறையான சமயங்களில், லேசான ஈரம் இருக்கும் போதே ஏக்கருக்கு, 200 மில்லி மெத்தைலோ பாக்டீரியாவை, 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால், அடுத்த, 10 முதல், 12 நாட்களுக்கு, இலையில் உள்ள பச்சையம் மாறாமல், பசுமையாக இருக்கும். பச்சையம் தான், ஒளிச்சேர்க்கைக்கு உதவும். இக்கரைசலை, பயிரின் இலைகளில் மட்டுமே தெளிக்க வேண்டும்.நீர் பற்றாக்குறையால், சம்பா பயிர்கள் பாதிப்படையாமல் காப்பாற்ற தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட, ஐந்து டெல்டா மாவட்டங்களிலும், இந்த பாக்டீரியாவை நெல் பயிர்களின் மீது தெளித்தோம். குழுவாக பிரிந்து, கடந்த டிசம்பர் மாதமே இப்பணியில் ஈடுபட்டதால், நீர் பற்றாக்குறையையும், கோடையின் தாக்கத்தையும் பயிர்களால் சமாளிக்க முடிந்தது. நெல் மட்டுமின்றி, காய்கறி, வாழை, தானியம் என, அனைத்திற்கும் இதை தெளிக்கலாம்.முதன் முறையாக, 36 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான நிலத்தில், மெத்தைலோ பாக்டீரியாவை பயிரின் இலைகளில் தெளித்தபோது, வறட்சியிலும் பயிர் பசுமையாக வளர்ந்து, விவசாயிகளுக்கு நல்ல பயன் தந்தது. தற்போது, 1.25 லட்சம் ஹெக்டேர் வரை, விவசாயிகளிடம் பணம் பெறாமல், அரசு உதவியுடன் இலவசமாக தெளித்துள்ளோம். தொடர்புக்கு: 0422 6611394.

லேசுபட்டசாதனையல்ல!
நீண்ட கோடை விடுமுறைக்கு பின், பள்ளி செல்லும் குழந்தைகளிடம், பெற்றோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கூறும், விஜயலட்சுமி: நான், திருவண்ணாமலை, கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஆசிரியராக பணியாற்றியே, பள்ளி குழந்தைகளின், மனநிலை சார்ந்த தொடர் ஆய்வில் ஈடுபட்டு, அது குறித்த மனோதத்துவ வழிமுறைகளை கண்டறிந்து உள்ளேன். விடுமுறையில், குழந்தைகள் நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்திரிக்க பழகியிருப்பர்.இதனால், விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததும், குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல், அழ வைக்காமல் பள்ளிக்கு அனுப்புவது, முடியாத காரியம். அப்படி அனுப்பினால், அது லேசுபட்ட சாதனையல்ல. தாமதமாக எழுந்திரிக்கும் குழந்தையை திட்டாமல், "இனி சீக்கிரம் எந்திரிச்சா, உனக்கு பிடிச்சத வாங்கி தருவேன்' என, குழந்தையை ஊக்கப்படுத்தலாம்."நீ, நேரத்துக்கு ஸ்கூலுக்கு போகணும்னு, அம்மா உனக்கு உதவி பண்றேன்'னு சொல்லிட்டே, குழந்தைகள் பார்க்கும்படி, பள்ளி சீருடை, பென்சில் பாக்ஸ், புத்தக பை, ஷூ, உணவு பொருட்கள் என, தேவையானதை எடுத்து வைக்கலாம். "ஸ்கூலுக்கு போய் உன் நண்பர்களை பார்க்கும் போது, இந்த சாக்லேட்டுகளை அவர்களிடம் கொடு' என, நாலு சாக்லேட்களை பையில் போட்டால், நண்பர்களை பார்க்கும் உற்சாகத்தில், அழாமல், சீக்கிரமே பள்ளிக்கு செல்லும் ஆர்வம் உருவாகும்."ரொம்ப நாள் கழிச்சு, நண்பர்கள் உன்னை பார்க்க ஆர்வமாக இருப்பர். கோடை விடுமுறையில் டூருக்கு போனோம்ல... அந்த போட்டோக்களை அவர்களிடம் காட்டு' என, பள்ளிக்கு செல்வதை மகிழ்ச்சியான நிகழ்வாக காட்டுங்கள். அதை விட்டுவிட்டு, பார்க், பீச், சினிமாவுக்கு கூட்டிட்டு போறேன்னு பொய் சொல்லி, மீண்டும் பள்ளிக்கே கூட்டிட்டு போனா, ஏற்கனவே அழுது கொண்டிருக்கும் குழந்தைக்கு, இனி ஸ்கூல் என்றாலே எரிச்சல் உண்டாகும் நிலை ஏற்படும்."எப்ப லீவு விடுவாங்க?' என, கேட்பதை விட, "எப்போ பள்ளிக்கு போகப் போறோம்' என, ஆசைப்படும் அளவிற்கு, பெற்றோர் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக