செவ்வாய், 4 ஜூன், 2013

முதல்வர்களை முத்திரை போல் கருதும் மத்திய அரசு : முதல்வர் கண்டனம்

மாநில முதல்வர்களை த் தொய்வு முத்திரை போல் கருதுகிறது மத்திய அரசு : முதல்வர் கண்டன மடல்

நாளை தில்லியில்  பிரதமர் தலைமையில்  நடைபெறவுள்ள பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்கள் கூட்டத்தில், எனக்குப் பதிலாக தமிழக அமைச்சர் கே.பி. முனுசாமி கலந்துகொள்வார் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடித விவரம்:
உங்கள் தலைமையில் ஜூன் 5ம் தேதி நடைபெறவுள்ள, உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் அழைப்பு விடுத்த கடிதம் கிடைக்கப் பெற்றேன். உள்துறைப் பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்கள் கருத்தரங்கு, மாநிலங்களில் பொது அமைதியைப் பேணவும் முக்கியமான பணியாகவும் இருப்பதால், சந்தேகமில்லாமல் மிகவும் அவசியமான ஒன்றே.
என்னுடைய கடந்த கால அனுபவத்தின் படி, மத்திய அரசால் நடத்தப்படும் இத்தகைய கருத்தரங்குகள் வெறும் சடங்கு சம்பிரதாயத்துக்காக நடத்தப்படுவதாகவே தோன்றுகிறது.  முதலமைச்சர்கள் தங்கள் தரப்பு கருத்தை வெளிப்படுத்த மிகக் குறைந்த வாய்ப்பே வழங்கப்படுகிறது. 12 திட்டங்கள் பற்றி 10 நிமிடத்துக்குள் விளக்க முடியாது. அவற்றின் தலைப்புகளைப் படிக்கவே 10 நிமிடம் ஆகிவிடும். இத்தகைய நிலையில் முதலமைச்சர்கள் தங்கள் திட்டம் குறித்து விளக்க ஒதுக்கப்படும் நேரம் போதாது.
ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சர்கள், மத்திய அரசுக்கும் சமமான பொறுப்பு கொண்டவர்கள். மத்திய அரசுடன் சம பங்கைக் கொண்டுள்ள மாநில முதல்வர்கள் இந்தக் கருத்தரங்க விவாதங்களில் தங்கள் தரப்பு பங்களிப்பையும் வழங்க நிச்சயம் விரும்புவார்கள்.
எனவே இதில் உள்ள உண்மை நிலையை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் மத்திய அரசு முதல்வர்களுக்காக நடத்தும் கருத்தரங்குகள் வெறும் சம்பிரதாயமாக இருக்கின்றனவே ஒழிய, அவர்களிடம் கலந்தாலோசிக்கும் தன்மை சிறிதும் இல்லை என்பதை உணர வேண்டும். முக்கியமான விவகாரங்களில், முதலமைச்சர்கள் தங்கள் பேச்சைக் குறைத்துக்கொண்டு பாதியிலேயே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஏற்கெனவே எழுதி முடிக்கப்பட்டவற்றைக் கொண்டு, முதலமைச்சர்களை வெறுமனே கூட்டத்தில் கூட்டி, அவர்களின் கருத்துகளைத் தெரிவிக்க விடாமல், அவர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் போல் மத்திய அரசு வெளிப்படுத்துகிறது.
சென்ற 2012 டிசம்பர் 27ம் தேதி நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்களை தகுந்த மரியாதை அளிக்காமல் அவமதித்தது மத்திய அரசு. நான் பேசிக் கொண்டிருந்தபோதே மணியை அடித்து, என் பேச்சைப் பாதியில் நிறுத்தவைத்து மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டது.
எனவே 10 நிமிடத்துக்குள் பேச்சை முடித்துக் கொள்ளும் இத்தகைய நிலையில் முதலமைச்சர்கள் மாநாட்டில் நான் கலந்து கொள்வதற்கு பதிலாக, தமிழக அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்து கொள்வார். இந்தக் கூட்டத்துக்கான கொள்கைகளில் அனைத்து அம்சங்களையும் சரிபார்த்து, தமிழகத்துக்கான எங்கள் பார்வையை என் உரையில் கொடுத்துள்ளேன். கூட்டத்தில் என் சார்பில் மாநில அமைச்சர் பங்கேற்று, தமிழகத்தின் நிலையை பதிவு செய்வார்.
- என்று கடிதத்தில் கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக