வியாழன், 4 ஏப்ரல், 2013

"தமிழ் ஈழம் மலரும்': பா.ச.., தலைவர் யசுவந்த்து சின்கா பேச்சு Separate nation for Thamizhs - Yaswanth Sinha



"தமிழ் ஈழம் மலரும்': பா.ச.., தலைவர் யசுவந்த்து சின்கா பேச்சு


சென்னை: "இலங்கையில் தமிழ் ஈழம் மலரும்' என, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., சார்பில், இலங்கை தமிழர் பிரச்னை, இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து, நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் யஷ்வந்த் சின்கா பேசியதாவது: பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டு கொல்லப்பட்ட புகைப்படம், பார்ப்பவர்கள் அனைவரையும் துன்பப்பட வைத்தது. அவன் பிஸ்கட் துண்டுகளை சாப்பிட்டு, துப்பாக்கி குண்டுகளை, நெஞ்சில் தான் வாங்கினானே தவிர, முதுகில் வாங்கவில்லை. வாஜ்பாய் அரசில், இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், ராஜபக்ஷே அரசுக்கு, இந்திய அரசு உறுதுணையாக இருந்தது. பார்லிமென்டில், நான் பேசும் போது, இலங்கை தமிழர்கள் இனப்படுகொலைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுதுணையாக இருந்தது என்பதை சுட்டிக் காட்டினேன். ஆனால், இதற்கு காங்கிரசில் யாரும் குறுக்கீடு செய்யவில்லை. இலங்கையில் ராஜபக்ஷே, அவரது உதவியாளர், ராணுவ செயலர் கொண்ட ஒரு குழுவும், இந்தியாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான மூவர் குழுவும், இறுதிக்கட்ட போர் நடந்த போது, பரஸ்பரமாக பேசி இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளனர். இலங்கையில் உச்ச கட்ட போர் நடந்த போது, மன்மோகன் சிங் செயல்படாமல், "மண்' மோகன் சிங்காக தான் இருந்தார். இந்தியா நிர்பந்தம் செய்தால், சீனா, இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் என்ற சாக்கு போக்குகளை கூறினார்.

இலங்கையில், தமிழர் பகுதியில் உள்ள, ராணுவ முகாமை மூட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், சர்வதேச நாடுகள் கண்காணிப்புடன், ஜூன் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த, இந்தியா ஒரு போதும் அனுமதிக்க கூடாது. அடக்குமுறையை கையாண்டால், நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியாது. ராஜபக்ஷே அடக்குமுறையை கையாளுவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், தமிழ் ஈழம் மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை. லோக்சபா தேர்தலில், மக்கள், ஐ.மு., அரசுக்கு பாடம் புகட்டுவர். இலங்கையில் ராஜபக்ஷே அரசுக்கு, தமிழர்கள் பாடம் புகட்டுவர். தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர் பிரச்னையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், கச்சத்தீவை இழந்தது தான். தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் இடமாக, கச்சத்தீவை கொண்டு வர வேண்டும். மத்திய அரசு பலவீனமாக உள்ளது. மன்மோகன் சிங் பலவீனமான பிரதமராக உள்ளார். மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக, மன்மோகன் சிங் தான் அறிவிக்கப்பட உள்ளார்.

பா.ஜ., வில் புலிகள் போல் தொண்டர்கள் செயல்பட்டு, நமக்கு வெற்றி தேடி தருவர். அப்போது, இலங்கை தமிழர்களுக்கு மட்டுமில்லை, இந்திய மக்களுக்கும் நல் வாழ்வு கிடைக்க, 2014ல் பா.ஜ., ஆட்சி மலரும். இவ்வாறு, அவர் பேசினார். இந்த கூட்டத்திற்கு, மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் முன்னிலை வகித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக