திங்கள், 22 ஏப்ரல், 2013

"சுற்றுலாக் காவல்': வழிகாட்டும் கொச்சி




"சுற்றுலா க் காவல்': வழிகாட்டும் கொச்சி
உலகச் சுற்றுலாக் குழு' அறிவித்துள்ள, உலகின் மூன்று சிறந்த சுற்றுலா நகரங்களில் ஒன்று கொச்சி. "தேசிய புவியியல் சுற்றுலா பயணிகள் அமைப்பு', பார்க்க வேண்டிய இடங்கள் என 50 இடங்களை வெளியிட்டுள்ளது. அதில் இந்நகரம் இடம்பெற்றுள்ளது.

செழிப்பு மிக்க இடமாக இருந்ததால் போர்ச்சுகீசியர்கள், டச்சு, பிரிட்டீஷ் ஆட்சிகளில் முதன்மை நகரமாக இது இருந்தது. அதனால் தான், இப்போது இந்த நகரின் சில பகுதிகளை புராதன நகரமாக அறிவித்து, பழைமையை அப்படியே பாதுகாக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.கொச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர, கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதி தான் சுற்றுலா போலீஸ். இந்தியாவில் முதல் முறையாக 2002ம் ஆண்டிலேயே இந்நகரில் "சுற்றுலா போலீஸ்' என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தனி போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டது. கொச்சியின் துணை நகரங்களான போர்ட் கொச்சி, மட்டாஞ்சேரி, எர்ணாகுளத்திற்கு தினமும் பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.இவர்கள் தங்கும் இடங்களில், உணவகங்களில், பயணம் செய்யும் வாகனங்களில், எந்த இடையூறுகளிலும் இவர்கள் சிக்கிவிடாமல் இருப்பதற்காக, போதிய பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு இந்த சுற்றுலா போலீசாருக்கு உண்டு.

கேரளாவில் உள்ள போலீசாருக்கான சீருடையில் இருந்து இவர்கள் மாறுபட்டுள்ளனர். நீலநிற சட்டை அணிகின்றனர். பல மொழிகள் தெரிந்திருக்கின்றனர். கேரள கலாசார சிறப்புகளை பேசுகிறார்கள். சுற்றுலா பயணிகள் கேட்கும் சந்தேகங்களுக்கு, பொறுமையாக பதில் சொல்லுகின்றனர். வழிகாட்டுகின்றனர். இவை எல்லாவற்றையும் விட, சுற்றுலா பயணிகளை துரத்தி துரத்தி பிச்சை கேட்போரை துரத்துகின்றனர். சுற்றுலா பயணிகள் தவற விட்ட பொருட்களை கண்டெடுத்து, மீண்டும் ஒப்படைக்கின்றனர். மட்டாஞ்சேரியில் சுற்றுலா போலீசிற்கு தனி போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. ஒரு எஸ்.ஐ., ஆன்டனி தலைமையின் 17 போலீசார் பணிபுரிகின்றனர்.

மட்டாஞ்சேரியில் உள்ள யூதர்கள் நகரில் (ஜூ டவுன்) போலீசாருக்கான ஒரு மியூசியம் உள்ளது. இந்த மியூசியத்தில் அன்னியர்கள் மற்றும் சமஸ்தான ஆட்சியின் போது, அப்போதிருந்த போலீசார் முதல் இப்போது உள்ள போலீசார் வரை எப்படிப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தினர், ஆடைகளை அணிந்தனர், நவீன மாற்றங்கள் எப்படி ஏற்பட்டுள்ளது, என்பவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தையும், சுற்றுலா போலீசார் தான் நிர்வகித்து வருகின்றனர்.சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை தருவோரை இவர்கள் பிடித்து, உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கின்றனர். இவர்களுக்கு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் அதிகாரம் வழங்கப்படவில்லை.

தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, இ-மெயில் மூலம் தொடர்புடைய சுற்றுலா பயணிக்கு தெரிவித்து விடுகின்றனர். தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பல நகரங்கள் உள்ளன. இந்த நகர்களிலும் இது போல் "சுற்றுலா போலீஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பிச்சைக்காரர்கள், போலி பொருட்களை கொடுத்து ஏமாற்றும் பேர்வழிகள், வழிப்பறிக்காரர்கள் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல, படாத பாடுபடவேண்டியுள்ளது. மதுரையிலாவது இது போல் "சுற்றுலா போலீஸ்' திட்டத்தை முதல் முயற்சியாக அறிமுகப்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்தால், சுற்றுலா இன்னும் வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக