வெள்ளி, 26 ஏப்ரல், 2013

விழிப்புணர்வு வரிகள்


இவ்வாறு சுவர்களில் மேற்கோள் எழுதுவதும் மிகப்பெரிய கொள்கைப்பரப்புப் பணியாகும். இத்தகைய சிறப்பான பணிகளில் முன்னோடியாக மதுரையில் தமிழக எண்ணெய்ப்பலகார நிறுவனராக இருந்த மறைந்த தேவசகாயத்தைக் குறிப்பிடலாம். பொதுஅறிவு சார்ந்த, பகுத்தறிவு சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த எனப் பல்வகைத் தகவல்களை அவர் சுவர்களில் எழுதச் செய்வதையே தம் கடமையாகக் கொ்ணடிருந்தார். மதுரையில் நான் அவருக்கு விளம்பரத் தமிழ் ஆர்வலர் என்னும் விருதை  அளித்ததும், இத்தகைய விருதை எதிர்பார்க்காத, இப்படி எல்லாம் விருது தருவார்களா என்று எண்ணியிராத அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டமையும். விருது வழங்கிய அப்போதைய அமைச்சர் அரங்கநாயகம், எதிரணியில் இருந்தாலும் இவரது தொண்டிற்குக்கிடைத்த  அறிந்தேற்பாக மனமுவந்து  பாராட்டியமையும் நினைவிற்கு வருகிறது.  தொடரட்டும் பசுபதியின் பணி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 



விழிப்புணர்வு வரிகள்




விழிப்புணர்வூட்டும் வாசகங்களை சுவரில் எழுதுவதை, சேவையாக செய்து வரும், பசுபதி நாதன்: ஆரம்பத்தில், வருமானத்திற்காக சினிமா விளம்பரம் எழுதும் வேலை செய்து, மிக கஷ்டமான சூழ்நிலையில் தான், வாழ்ந்தேன். "நீ எந்த நிலையில் எப்படி இருந்தாலும், உன்னால் முடிஞ்ச ஒரு குண்டூசி நல்லதையாவது, இந்த சமூகத்துக்கு செய்தால் தான், வாழ்க்கை முழுமையடையும்' என, என் அப்பா அடிக்கடி சொல்லுவார். இது என் சிந்தனையில், என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. ஒரு நாள் சினிமா தியேட்டர் வாசலில், என் மனதில் பட்ட நாலு நல்ல வரிகளை சுவரில் எழுதி போட்டேன். படம் முடிந்து வெளியே வந்தவர்கள் அதைப் படித்த பின், சந்தோஷமாக சென்றனர். அவர்களின் சிரிப்பு, எனக்கு ஊக்கத்தை தந்தது. இந்நிகழ்வை தொடர்ந்து பேருந்து நிலையம், சாலை சந்திப்புகள், கடை வீதி என, 30க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சுவர்களில், என் சொந்த செலவிலேயே எழுதுகிறேன். கடந்த, 20 ஆண்டுகளாக, இதை ஒரு சேவையாக செய்கிறேன். ஒவ்வொரு வாரமும், சுவர் வாசகங்களை மாற்றியபடி இருப்பேன். ஒவ்வொரு புதன் கிழமை இரவும், சுவற்றுக்கு வெள்ளையடித்து, புதிது புதிதாக எழுதுவேன். இரவு நேரங்களில் எழுதுவதால், இச்சுவர் வாசகங்களை யார் எழுதுவது என, தெரியாது. ஆனால், நான் எழுதுவதைப் பார்த்த சில இளைஞர்கள், என்னைப் போல் விழிப்புணர்வு சுவர் வாசகங்களை எழுத ஆரம்பித்துள்ளனர். நான் எழுதிய வாசகத்திற்கான பலனை, என்னால் நேரடியாக காண முடிந்தது. ஒரு முறை குழந்தை இல்லாமல் அவமானத்திற்குள்ளான ஒரு தம்பதி, தற்கொலை செய்ய சென்ற போது, தற்செயலாக நான் எழுதிய, "ஒரு நொடி துணிந்து விட்டால் இறந்து விடலாம்; ஒவ்வொரு நொடியும் துணிந்து விட்டால் வாழ்வில் ஜெயித்து விடலாம்' என்ற விழிப்புணர்வு சுவர் வாசகத்தை படித்ததும் மனம் மாறி, மருத்துவ பரிசோதனை செய்து குழந்தை பெற்றபின், என்னை சந்தித்தனர். நான் எழுதிய விழிப்புணர்வு சுவர் வாசகத்தை பாராட்டி, பல அமைப்பினர் விருது வழங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக