சனி, 13 ஏப்ரல், 2013

மரண தண்டனையை ஒழிக்கப் பேரறிவாளன் தாயார் கோரிக்கை

தமிழகத்தில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்: முதல்வருக்குப் பேரறிவாளன் தாயார் கோரிக்கை

தமிழகத்தில் மரண தண்டனை ஒழித்து, தமிழக முதல்வர் இந்தியாவிலேயே முன் மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என பேரறிவாளர் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.
சிதம்பரம் முத்தையாநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வருகை தந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளர் தாயார் அற்பதம்மாள் (66) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: உச்சநீதிமன்றத்தில் புல்லார் வழக்கில் அவருக்கு மரண தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது எனக்கு பயத்தையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு செப்.9-ம் தேதி தீர்ப்பு உறுதி செய்துள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் மரண தண்டனையை ரத்து செய்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேரறிவாளனை நான் சந்தித்தபோது கூறுகையில் 'எனக்கு உயிர் கொடுத்த தாய் நீங்கள் என்றாலும், மறுவாழ்வு கொடுத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்' என அடிக்கடி கூறுவார். பெரும்பாலான உலக நாடுகளில் மரண தண்டனையை தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவில் அகிம்சாவாதியான காந்தியடிகள் பிறந்த மண்ணில் தடை விதிக்காதது வேதனையளிக்கிறது. எனவே தமிழகத்திலேயாவது மரண தண்டனையை ஒழிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டு, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக ஆக்க வேண்டும். எனது மகனை காப்பாற்ற தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன். எனது மனுவை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்பு போல் மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரிடம் மனு அளித்து  எனது மகனை என்னிடம் ஒப்படைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாள் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக