புதன், 24 ஏப்ரல், 2013

கத்தரி வெயில்


அக்னி நட்சத்திரம்!

கத்தரி வெயிலின் தாக்கத்தை, தண்ணீர் மூலம் சமாளிக்கும் முறையை கூறும், மருத்துவர் சவுந்தரராஜன்: நான், ராமச்சந்திரா மருத்துவமனையில், சிறுநீரகத் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றுகிறேன். குழந்தைகள் முதல், வயது முதிர்ந்தவர்கள் வரை, அனைவருமே வெயிலினால் பாதிக்கப்படுவர். கோடை ஆரம்பிப்பதற்கு முன்பே, வெயிலின் தாக்கம் உச்சநிலையில் இருந்தது.தற்போது, 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் வெயில், கோடை வெயிலின் முக்கிய காலகட்டமான, "அக்னி நட்சத்திரம்' எனும் கத்தரி வெயிலின் போது, 110 டிகிரியை தொடும் நிலையில் உள்ளது. இதனால் வேர்க்குரு, நீர்ச்சத்து இழப்பு, அக்கி, தோல் சுருக்கம், மஞ்சள் காமாலை, அம்மை, சிறுநீர் கடுப்பு, வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் தாக்க ஏதுவாக இருக்கும்.மூளைக்கும், கபாலத்திற்கும் நடுவில், நீர் போன்ற திரவம் தான், மூளையை பாதுகாக்கிறது. அதிகப்படியான வெயிலின் தாக்கம், நேரடியாக தலையை தாக்கும் போது மயக்கமும், தலை சுற்றலும் ஏற்படுகிறது. இதனால், உடலின் நீர் சத்து குறைந்து, "சன் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு மரணம் ஏற்படுவதை தவிர்க்கவே, வட மாநிலத்தவர்கள், தலையில் பெரிய தலைப்பாகை கட்டியிருப்பர்.வெயில் காலத்தில் தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிக சிக்கல் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உப்புச் சத்தின் அளவு மாறுபட்டு சிறுநீரக பாதிப்பு ஏற்படும். இந்நோய்களை தவிர்க்க, தண்ணீரே சிறந்த மருந்து.கோடைக் காலங்களில், மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் மட்டுமே, நீர்க்கடுப்பு உட்பட சிறுநீர் பாதிப்புகளை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு அம்மை, வாந்தி, பேதி, மஞ்சள் காமாலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உச்சி வெயிலில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டாம்.ஐஸ்கிரீம், குளிர்பானம் போன்ற, அதிக குளிரான பொருட்களை தவிர்த்து, தண்ணீரை பயன்படுத்துவதே நல்லது. முடிந்தவரை வெள்ளை நிற ஆடைகளை அணிவது நல்லது.
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக