ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

வெயிலுக்கு நறுமா போடலாமா? அழிவில் தொன்மக் கலைகள்!

வெயிலுக்கு நறுமா போடலாமா?


பிறந்த குழந்தைகளை, பராமரிக்கும் முறையை கூறும் குழந்தைகள் நல மருத்துவர், ரமா சந்திரமோகன்: நான், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மருத்துவராக பணியாற்றுகிறேன். குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு, பால் சுரக்கும் தன்மை, முதல் வாரத்தில் குறைவாக இருக்கும். பிறந்த குழந்தையின் உடலில் உள்ள நீர் வற்றினால் தான், சத்தான தாய்ப்பால் உடலில் சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும்.ஆனால், எடை அதிகமாக பிறந்த குழந்தைக்கு, அதன் தாயிடமிருந்து தேவையான தாய்ப்பால் கிடைப்பது மிக கடினம். இதனால் அக்குழந்தைக்கு, "டீஹைட்ரேஷன்' ஏற்படுவதோடு மட்டுமில்லாமல், உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, வலிப்பு வருவதற்கான வாய்ப்பும் உண்டு.
கோடைக் காலம் என்பதால் பலரது வீடுகளிலும், குழந்தையை தண்ணீரால் குளிக்க வைத்த பின், பவுடராலும் குளிப்பாட்டும் பழக்கம் உள்ளது. குறிப்பாக குழந்தையின் அக்குள் பகுதி, கழுத்துப் பகுதி, தொடையின் இடுக்குகள் என, பவுடரை அதிக அளவில் கொட்டி தேய்த்து விடுவர். உண்மையில், குழந்தைகளுக்கு பவுடர் தேவையில்லை.
பவுடரால், தீமையை தவிர, வேறு எதுவும் கிடைக்க போவதில்லை. குறிப்பாக, அடர் தன்மை கொண்ட பேபி பவுடர்கள், குழந்தைகளின் உடலில் இருக்கும் நுண்ணிய துவாரங்களை அடைத்து, கொப்புளம் மற்றும் இன்பெக்ஷன் எனும் தொற்றுகளை ஏற்படுத்தி விடும். எனவே, குழந்தைகளை குளிப்பாட்டிய பின், துண்டால் நன்றாக துடைத்து, சுத்தமான மற்றும் காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவித்தாலே போதும். குழந்தைக்கு கோடை வெயிலின் காரணமாக அதிகம் வியர்த்தால், விசிறியைக் கொண்டே விசிறி விடலாம்.
பொதுவாக, பிறந்த குழந்தைகளுக்கு தலை முதல் கால் வரை, வெப்பநிலை சீராக இருக்க வேண்டும். உடல் சூடாகவும், கால் பகுதி குளிர்ச்சியாகவும் இருந்தால், குழந்தைக்கு தொற்று அல்லது நோய் பாதித்துள்ளது என, அர்த்தம். எனவே, குழந்தையின் உடலைத் தொட்டு பார்த்து பழகிக் கொள்ள, அம்மாக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

அழிவில் தொன்மக் கலைகள்!

அழியும் நிலையில்உள்ள, சிலம்பாட்டம் போன்ற தொன்மக் கலைகளை இலவசமாக கற்றுத் தரும், மாதேஸ்வரன்:சிலம்பம் போன்று, தமிழ் தொன்மக் கலைகள் பல, அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளன. மற்ற கலைகளை விட, சிலம்பத்தின் தனித்துவத்தை அறிந்ததால், இக்கலையை பரப்ப, எந்த கட்டணமும் இல்லாமல், இலவசமாக கற்று தரும் நோக்கில், "கலைத்தாய் சிலம்ப பயிற்சி பள்ளி'யை, நண்பர்கள் உதவிஉடன், ஈரோட்டில் ஆரம்பித்தேன்.சிலம்பம் என்ற சண்டைக் கலைக்கு, விலங்குகளே முன்னோடி. மாடுகள், தற்காப்புக்காக எப்போதும் தம் வாலை சுழற்றிக் கொண்டே இருப்பதைப் போல், மற்ற பொருட்கள் நம்மைத் தாக்காதபடி தற்காப்பதே, "சுழற்றும் முறை!' எதிராளியை தாக்குவது, "அடிமுறை!' இதை, யானை தும்பிக்கையால் தாக்கும் முறையில்இருந்து பின்பற்றுகிறோம். சிறப்பாக வேட்டையாடக் கூடிய புலி, தன் இரையை கண்டதும், பதுங்கி பதுங்கி, நெருங்கிய பின் தாக்குவதை பின்பற்றி, சிலம்பத்தின், "பாவ்லா' வரிசை உருவானது.ஆதிகால மனிதர்கள் குழுவாக வாழ்ந்த போது, எதிரியிடம் இருந்து பாதுகாக்க, இச்சிலம்பக் கலைதான் பயன்பட்டது. ஏனெனில், போர் ஆயுதங்களுக்கு சிலம்பமே அடிப்படை. ஈட்டி, வேல், கம்பு போன்ற ஆயுதங்கள், சிலம்பத்திலிருந்து உருவானதே. காலச்சூழலில் சண்டைக்கான தேவைகள் மாறியதால், சண்டைக் கலையான சிலம்பமும், ஒரு ஆட்டக் கலையாய் மாறிவிட்டது.இந்தியாவில், போர் ஆயுதங்களை வைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, தமிழகத்தின் சிலம்புச் சண்டையும், பஞ்சாபின் கத்திச் சண்டையும் தான். அதனால், கலாசார விழாக்களில், இதற்கு அமோக வரவேற்பு உள்ளது. மலேசியாவில், கடந்தாண்டு நடந்த உலகளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்ற எங்கள் மாணவன் லோகேஷ்வரன், ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று, உலக சாம்பியன் பட்டத்தையும் வென்று உள்ளான்.தற்போது தப்பாட்டம், கோலாட்டம், கரகம், பெரிய கம்பாட்டம், சாட்டைக் குச்சி, கும்மி போன்ற, தொன்மக் கலைகளையும் கற்றுத் தருகிறோம்.

1 கருத்து:

  1. நறுமா - நல்ல தமிழாக்கம். ஆனால், முதலில் படிக்கத் தொடங்கியபொழுது, நான் ஊறுகாய் போல ஏதோ ஒரு தின்பண்டம் போலும் என நினைத்துக் கொண்டேன்.

    ஆனால் ஐயா, இதே போல் பண்டைத் தமிழ் நூல்களில் 'சுண்ணப்பொடி' என்று ஒன்று குறிப்பிடப்படுகிறதே ஒப்பனைக்கு! அஃது என்ன? அதுவும் நறுமா போலத்தானா அல்லது வேறேதாவதா?

    பதிலளிநீக்கு