செவ்வாய், 9 ஏப்ரல், 2013

மத்திய கல்வி நிறுவனங்களில் 50% மாநில ஒதுக்கீடு: இராமதாசு

தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் 50% மாநில ஒதுக்கீடு: இராமதாசு கோரிக்கை


தமிழ்நாட்டில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் 50% மாநில ஒதுக்கீடு தேவை என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இன்று விடுத்த அறிக்கையில்,
தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்படி அண்மையில் பெறப்பட்ட தகவல்களின் மூலம், தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்திருக்கின்றன.
சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கொட்டையூரில் செயல்பட்டுவரும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐ.ஐ.ஐ.டி.- காஞ்சிபுரம்) மாணவர் சேர்க்கையில் மொத்தமுள்ள 82 இடங்களில், தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். இந்த நிறுவனத்தில் ஆந்திராவை சேர்ந்த 61 மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநில மாணவர்களுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் ஐ.ஐ.ஐ.டி. மத்திய அரசின் நிறுவனம் என்ற போதிலும் அதற்கு தேவையான நிலம், மின்சாரம், சாலை வசதிகள் போன்றவற்றை தமிழக அரசு தான் இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் ஐ.ஐ.ஐ.டி.யை அமைப்பதற்காக ஆகும் செலவில் 35 விழுக்காட்டை தமிழக அரசும், 15 விழுக்காட்டை தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களும் வழங்கியுள்ளன. தமிழக அரசின் நிலத்தில், அதன் நிதியில் அமைக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை இடங்களில் ஒரே ஒரு இடம் மட்டுமே தமிழக மாணவர்களுக்கு கிடைத்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி ஆகும்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான திருவரங்கத்தில் புதிய ஐ.ஐ.ஐ.டி. ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக 56.3 ஏக்கர் நிலத்தை இலவச மாக வழங்கியுள்ள தமிழக அரசு , கட்டுமானசெலவில் 35 விழுக்காட்டை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போதுள்ள விதிகள் தொடர்ந்தால் இந்த ஐ.ஐ.ஐ.டி.யிலும் தமிழக மாணவர்களுக்கு ஓரிரு இடங்கள் மட்டுமே கிடைக்கும். ஐ.ஐ.ஐ.டிக்கள் மட்டுமின்றி சென்னை ஐ.ஐ.டி., திருச்சி ஐ.ஐ.எம்., திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளது.
இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால்தான் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பை சரி செய்ய வேண்டுமானல் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 50 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டும். தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (என்.ஐ.டி.) 50 விழுக்காடு இடங்களை மாநிலங்களுக்கு ஒதுக்கீடுசெய்யும் முறை உள்ளது. புதுவையில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 15 விழுக்காடு இடங்கள் அம்மாநிலத்திற்கு ஒதுக்கப்படுகின்றன. அதே போல் தமிழ்நாட்டில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் 50 விழுக்காடு இடங்களை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
- என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக